செந்தமிழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ம. செந்தமிழன், ஒரு திரைப்பட இயக்குனர். இவர் பாலை திரைப்படம் மற்றும் பல ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார்[1]. தமிழ்த் தேசியம், இயற்கை வேளாண்மை, ஈழ விடுதலை, சமூகவியல் என பல்வேறு தளங்களில் ஆய்வுகளையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருபவர். இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ள இவர், தஞ்சையில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

செந்தமிழன் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகிலுள்ள ஆச்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பெ. மணியரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும் ஆவார். செந்தமிழனின் மனைவி காந்திமதி ஒரு கல்லூரி பேராசிரியை மற்றும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்.

1990களில் தன் பள்ளிப் பருவத்திலிருந்து தமிழக மாணவர் முன்னணி அமைப்பின் தீவிர செயற்பாட்டாளராக இருந்து, தமிழ்த் தேசிய ஆக்கத் திட்ட செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். 1995ஆம் ஆண்டு செயலலிதா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டிற்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டதன் காரணமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர். பல்வேறு அச்சு ஊடகங்களில் பணிபுரிந்தவர்.

படைப்புகள்[தொகு]

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் ‘ஆடோடிகள்’, மறைக்கப்பட்ட தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளைக் கண்டறிந்து சொல்லும் ‘பேசாமொழி’, நான்காம் ஈழப் போரில் காங்கிரஸ் அரசின் உதவிகளை ஆதாரங்களுடன் விளக்கி தமிழகமெங்கும் இளந்தமிழர் இயக்கத்தினரால் பரப்புரை செய்யப்பட்ட ‘தீர்ப்பு எழுதுங்கள்’ உள்ளிட்ட ஆவணப்படங்களை இயக்கியவர்.

தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் அதன்வழியே தமிழ்நாட்டு பெண்களின் உளவியலை விளக்கும் ‘டிராகுலாவின் காதலிகள்;’, மனித சமூகத்தின் வளர்ச்சிப் படிநிலைகளையும், இன்றைய உலகமயமாதல் சூழலில் சமூகவியலையும், விளக்கிக் கூறும் ‘நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்;’ உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியவர். ‘சிங்களத்தின் இறுதிப்போர்’, ‘வீழவில்லை விடுதலைப்புலிகள்’ உள்ளிட்ட ஈழவிடுதலைக் குறித்தான குறுநூல்களையும் எழுதியுள்ளார்.

தற்போது, திராவிடம் என்பது தென்னாட்டுப் பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லே என்பதனை விளக்கியும், ஆரியத்தின் ஒரு பிரிவே திராவிடம் என்பதனை வலியுறுத்தியும் ‘அலர்’ என்ற ஆய்வு நூலை எழுதி வருகிறார். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதிவருகின்றார்[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தமிழன்&oldid=1948249" இருந்து மீள்விக்கப்பட்டது