சுனசேபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனசேபன் (Shunahshepa) பற்றிய குறிப்புகள் இந்து தொன்மவியலான ரிக் வேதத்தில் உள்ளது. ரிக் வேதத்தின் ஐதேரேய பிரம்மாணத்தில் (7.13-18), அரிச்சந்திரன் நடத்திய வேள்வியில் நர பலியாக கொடுக்கப்பட இருந்த சுனசேபனை ரிக் வேத தேவதைகள் காப்பாற்றியதாகயும், பின்னர் விசுவாமித்திரர் சுனசேபனை தேவராதன் என்ற பெயரில் தனது மூத்த மகனாக வளர்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சுனசேபன் நர பலி நிகழ்வு சில வேறுபாடுகளுடன் வால்மீகி எழுதிய இராமாயண காவியத்தின் பாலகாண்டத்தில் (1. 61), விளக்கப்பட்டுள்ளது.

ரிக் வேத ஐதரேய பிரமாணத்தில்[தொகு]

நாரதரின் அறிவுரையின் படி, குழந்தையில்லாத இச்வாகு குல மன்னர் அரிச்சந்திரன், குழந்தை வரம் வேண்டி, ரிக் வேத தேவர்களில் ஒருவரான வருணனை நோக்கி தவமிருந்தான். அரிச்சந்திரனுக்கு குழந்தை வரமளித்த வருணன், வருங்காலத்தில் அக்குழந்தையை தனக்கு வேள்வியில் நர பலியாக படையலிட வேண்டும் என்ற வாக்குறுதி பெற்றான்.

வருணனின் வரத்தின் படி, அரிச்சந்திரனுக்கு லோகிதாசன் என்ற மகன் பிறந்தான். பெரியவனாக வளர்ந்த லோகிதாசன், தன்னைத் தன் தந்தையான அரிச்சந்திரன், வருணனுக்குப் பலி கொடுப்பதை அறிந்து காட்டுக்குள் தப்பி மறைந்து கொண்டான்.

இதனால் கோபம் கொண்ட வருணன், அரிச்சந்திரனுக்கு தீராத வயிற்று நோய் உண்டாக சாபமிட்டான். எனவே அரிச்சந்திரன் கடும் வயிற்று நோயால் துன்பம் கொண்டான். இந்திரனின் அறிவுரைப்படி, அவ்வப்போது லோகிதாசன் காட்டிலிருந்து அரண்மனைக்கு வந்து அரிச்சந்திரனைப் பார்த்துச் சென்றான். ஆனால் தன்னை வேள்வியில் வருணனுக்கு நர பலியாக தரப்படுவதை லோகிதாசன் ஏற்க மறுத்துவிட்டான்.[1]

காட்டில் ஆறு ஆண்டுகள் அலைந்த லோகிதாசன், வறுமையின் பிடியில் சிக்கி வாழ்ந்து கொண்டிருந்த ஆங்கிரச கோத்திரத்தைச் சேர்ந்த அஜிகர்த்தன் எனும் முனிவரை சந்தித்து, தனக்கு பதிலாக வேள்வியில் வருணனுக்கு நர பலி கொடுப்பதற்கு, அவரது மூன்று ஆண் மகன்களில் நடுவரான சுனசேபனை, நூறு பசுக்களை விலையாகக் கொடுத்து வாங்கினான். பின் சுனசேபனையும் அவர் தந்தை அஜிகர்த்தனையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் லோகிதாசன்.[1][2]

சத்திரியக் குழந்தையான லோகிதாசனுக்குப் பதிலாக வேதியக் குழந்தையான சுனசேபனை நர பலியாக ஏற்றுக் கொள்ள வருண தேவனும் ஏற்றுக் கொண்டார்.

அரிச்சந்திரனுக்காக விசுவாமித்திரர், வசிட்டர், ஜமதக்கினி போன்ற முனிவர்கள் நர மேத வேள்வியை நடத்த சம்மதித்தனர். சுனசேபன் நர வேள்விக்காக தூணில் கட்டி வைக்கப்பட்டான். சுனசேபனை விற்ற தந்தை அஜிகர்த்தன், சுனசேபனை நர பலியின் போது வெட்ட ஒப்புக் கொண்டான். தன்னை நர பலி இடும் முன், சுனசேபன் ரிக் வேத தேவதைகளை பிரார்த்தனை செய்து, இறுதியாக விடியல் தேவதையான உஷஸ் தேவியை[3] நினைத்து பிரார்த்தனை செய்கையில், சுனசேபனை கட்டியிருந்த கயிறுகள் தானாக அவிழ்ந்தன. அரிச்சந்திரனின் தீராத வயிற்று வலி நோயும் குணமடைந்தது.[1]

சுனசேபனின் வேத அறிவை கண்டு மகிழ்ந்த விசுவாமித்திரர், சுனசேபனனை தேவராதன் எனும் புதிய பெயரிட்டு தனது மூத்த மகனாக ஏற்று வளர்த்தார். விசுவாமித்திரரின் நூறு மகன்களில் முதல் ஐம்பது பேர், சுனசேபனை தங்களின் மூத்த சகோதரனாக ஏற்க மறுத்தனர். எனவே கோபமுற்ற விசுவாமித்திரர் அவர்களை ஆரியவர்த்தம் பகுதிகளிலிருந்து வெளியேற ஆணையிட்டார். ஐதரேய பிராம்மணத்தின் படி, ஆரியவர்த்தம் பகுதிகளிலிருந்து வெளியேறி, தென்னிந்தியாவில் குடியேறிய விசுவாமித்திரரின் ஐம்பது மகன்களின் வழித்தோன்றல்களே ஆந்திரர்கள் , புலிந்தர்கள், பௌண்டரர்கள், சபரர்கள் மற்றும் பல இன மக்கள் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனசேபன்&oldid=2577375" இலிருந்து மீள்விக்கப்பட்டது