சுந்தன் - உபசுந்தன்
சுந்தன் - உபசுந்தன் (Sunda and Upasunda) எனும் அசுரச் சகோதரர்கள் கடும் தவம் நோற்று பிரம்மாவிடம் தங்களுல் ஒருவரைத் தவிர பிறரால் தங்களுக்கு மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றவர்கள்.[1] பின்னர் இவர்கள், தேவர்களின் தலைவனான இந்திரனை வென்று, மூன்று உலகங்களையும் தங்கள் முழு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.[2] மேலும் கந்தர்வர்கள், யட்சர்கள், நாகர்கள், இராட்சசர்கள், பூமியை ஆண்ட மன்னர்கள் ஆகியோரின் செல்வங்களை கொள்ளையடித்து மகிழ்ச்சியுடன் காலம் கழித்தனர். தங்களுக்கு மூவுலகிலும் எதிரிகளே இல்லாது, தேவர்களைப் போல வாழ்ந்தனர்.
இவ்வசுரச் சகோதரர்களின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தேவர்கள், முனிவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிரம்மா, இவ்வசுரர்களை ஒரு பெண்ணால் மட்டுமே அழிக்க முடியும் என்பதால், திலோத்தமை என்ற பெரும் அழகிய அரம்பயைப் படைத்தார்.
ஒரு முறை சுந்தனும், உபசுந்தனும் விந்திய மலைகளில் குடி போதையுடன் சுற்றித் திரியும் போது, ஒற்றையாடையுடன் தனது அழகுகளை எல்லாம் வெளிப்படுத்தி நின்ற திலோத்தமை, அவர்கள் கண்ணில் பட்டாள். சுந்தனும் உபசுந்தனும் தனக்கே திலோத்தமை உரிமையானவள் என சர்ச்சை செய்தனர். முடிவில் இருவரும் திலோத்தமையை அடையும் நோக்கில் ஒருவரை ஒருவர் கதாயுதங்களால் அடித்துக் கொண்டு, பெண் பித்தால் மாய்ந்தனர். சுந்தன் - உபசுந்தர்களின் மரணத்தால், இந்திரன் மீண்டும் தேவலோகத்தை அடைந்தான். [3]
கம்பராமாயணத்தில்
[தொகு]இவ்வசுர உடன்பிறப்புகளான சுந்தோபசுந்தர்கள், இராவணனுக்கு ஆதரவாக, இராமனை எதிர்த்துப் போரிட்டு மாண்டதாக கம்பர் எழுதிய இராமாயண காவியத்தில், யுத்த காண்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆதிபர்வம் பகுதி 211
- ↑ அசுரர் பிடியில் மூவுலகம் - ஆதிபர்வம் பகுதி 212
- ↑ பெண் பித்தால் அழிந்த சகோதரர்கள் - ஆதிபர்வம் பகுதி 214
- ↑ யுத்த காண்டம்