க. வெள்ளைவாரணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. வெள்ளை வாரணனார் (சனவரி 14, 1917- சூன் 13, 1988) தமிழறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் 'இசைத் தமிழ்' என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.

இளமை[தொகு]

தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் ஓர் கைக்கோள செங்குந்தர் குடும்பத்தில் கந்தசாமி முதலியார் - அமிர்தம் அம்மையார்[1] தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935 இல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1935-37 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, 'தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு' என்னும் ஆய்வேட்டினை எழுதி முடித்தார்.வெள்ளைவாரணனார் 1938 முதல் 1943 வரை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

பணி[தொகு]

1943 இல் வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1962 இல் இவரின் புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக்கழகம் இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கியது. 1977 ஆம் ஆண்டு துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக்கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தம் 62 இம் வயது வரை அங்குப் பணியாற்றி 1979 இல் ஓய்வு பெற்றார். 1979 முதல் 1982 ஆம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.

பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் மாணாக்கரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞரகத் திகழ்ந்தார்.

நூல்கள்[தொகு]

வெள்ளைவாரணனாரின் உரை நூல்கள் அவரின் நுண்மாண் நுழை புலத்தினைக் காட்டுவன. விபுலானந்தரின் யாழ் நூலுக்கு இவர் எழுதியுள்ள முன்னுரை இவரின் இசைப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. வெள்ளைவாரணனார் எழுதிய நூல்கள் சில

இலக்கண நூல்கள்[தொகு]

  1. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்
  2. தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்
  3. தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம்
  4. தொல் - பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்)

சங்க இலக்கியம் சார்ந்த நூல்கள்[தொகு]

  1. குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி
  2. சங்ககால தமிழ் மக்கள்

சைவ சமயம் சார்ந்த நூல்கள்[தொகு]

  1. திருவுந்தியார்
  2. திருக்களிற்றுப்படியார்
  3. சேக்கிழார் நூல்நயம்
  4. பன்னிரு திருமுறை வரலாறு
  5. தில்லைப் பெருங்கோயில் வரலாறு
  6. திருவருட்பாச் சிந்தனை

உரை நூல்கள்[தொகு]

  1. தேவார அருள்முறைத் திரட்டுரை
  2. திருமந்திர அருள்முறைத் திரட்டுரை
  3. திருவருட்பயன் விளக்கவுரை

பிற[தொகு]

காக்கை விடு தூது என்னும் படைப்பிலக்கியத்தையும்,இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். இவரது நூல்களுள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்[தொகு]

  1. அற்புதத் திருவந்தாதி
  2. இசைத்தமிழ்
  3. காக்கை விடு தூது
  4. பன்னிரு திருமுறை வரலாறு
  5. பன்னிரு திருமுறை வரலாறு - இரண்டாம் பகுதி
  6. சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
  7. சங்ககாலத் தமிழ் மக்கள்
  8. தில்லைப் பெருங்கோயில் வரலாறு
  9. திருமந்திர அருள்முறைத் திரட்டு
  10. திருத்தொண்டர் வரலாறு
  11. திருவருட்பாச் சிந்தனை
  12. திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்
  13. தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு
  14. தொல்காப்பியம் களவியல் உரைவளம்
  15. தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்
  16. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்
  17. தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம்
  18. தொல்காப்பியம் நன்னூல் - சொல்லதிகாரம்
  19. தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்
  20. தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்
  21. தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்
  22. தொல்காப்பியம் வரலாறு
  23. திருவருட் பயன்
  24. தொல்காப்பியம்-செய்யுளியல் உரைவளம்
  25. தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்
  26. கவிதை நூல்கள்.

இந்தி மொழி எதிர்ப்பு[தொகு]

இராஜ கோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சரக இருந்த போது 1938 இல் இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணாதுரை முதலானோர் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939 இல் 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைப் பெயரில் 'காக்கை விடுதூது' என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.

சிறப்புகள்[தொகு]

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985 இல் கலைமாமணி விருதை வழங்கியது. தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு இலக்கியம் மற்றும் சமய அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் வெள்ளைவாரணனாருக்குப் பல்வேறு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளன.

  • சித்தாந்தச் செம்மல்
  • தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்
  • திருமுறை உரைமணி
  • செந்தமிழ்ச் சான்றோர்
  • தமிழ்மாமணி
  • சிவகவிமணி
  • திருமுறைத் தெய்வமணி
  • தமிழ்ப் பேரவைச் செம்மல்

ஆகிய விருதுகள் பல்வேறு ஆண்டுகளில் இவருக்கு வழங்கப்பட்டன.

மறைவு[தொகு]

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது.எனவே தில்லை சென்று தங்கி வாழ்ந்திருந்த வெள்ளைவாரணனார் 1988 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

சான்றாவணங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. சித்தாந்தச் செல்வர் க. வெள்ளைவாரணனார். https://books.google.co.in/books?id=rO9PAQAAIAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வெள்ளைவாரணனார்&oldid=3237564" இலிருந்து மீள்விக்கப்பட்டது