கெர்னீக்கா (ஓவியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெர்னீக்கா
ஓவியர்பாப்லோ பிக்காசோ
ஆண்டு1937
வகைஎண்ணெய் வர்ண ஓவியம்
இடம்Museo Reina Sofia,
மத்ரித், எசுப்பானியா

கெர்னீக்கா அல்லது குவைர்னிக்கா (Guernica) எனப்படும் ஓவியம் பாப்லோ பிக்காசோவினால் வரையப்பட்டது. எசுப்பானிய உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், 26 ஏப்ரல் 1937 அன்று, செருமனி, இத்தாலியின் இராணுவப் போர் வானூர்திகள் எசுப்பானிய தேசியவாதிகளின் கோரிக்கையின் படி தென் எசுப்பானிய ஊரான கெர்னீக்கா மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது. இதற்கான எதிர்வினையாக கெர்னீக்கா ஓவியம் வரையப்பட்டது.

கெர்னீக்கா, பாசிசத்தை எதிர்ப்பதோடு, போரின் அவல நிலையையும் அப்பாவிப் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட துன்பத்தினையும் காட்டுகின்றது. இந்த ஓவியம், போர் எதிர்ப்பு அடையாளமாகவும், அமைதியின் உருவமாகவும் ஒரு நினைவுச் சின்னச் சிறப்பை எட்டியுள்ளது. கெர்னீக்கா, உலகின் பல இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு புகழ் பெற்றது. இது எசுப்பானிய உள்நாட்டுப் போரை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர உதவியது.

எசுப்பானியக் குடியரசு, பாரிசில் நடந்த 1937 உலகக் கண்காட்சியில் தங்கள் சார்பாக பெரிய சுவர் ஓவியம் ஒன்றைக் காட்சிப்படுத்த பிக்காசோவை வேண்டியது. பிக்காசோ கெர்னீக்காவைப் பாரிசில் வரைந்து அங்கேயே முதலில் காட்சிப்படுத்தினார். அதன் பிறகு, எசுப்பானியாவில் விடுதலையும் மக்களாட்சியும் மலரும் வரை கெர்னீக்காவை எசுப்பானியாவுக்கு கொண்டு செல்லக்கூடாது என்ற அவரது வேண்டுகோளின் படி[1], நியூயார்க்கின் நவீன கலைகளுக்கான அருங்காட்சியகத்தின் பொறுப்பில் கெர்னீக்கா இருந்தது. கெர்னீக்கா, செப்டம்பர் 1981 இல் தான் முதன் முதலாக எசுப்பானியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. பிக்காசோவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் அக்டோபர் 24[2] அன்று மத்ரித் நகரில் வெடி குண்டு தகர்க்காத, துப்பாகிக் குண்டு துளைக்காத கண்ணாடித் திரைகளுக்குப் பின் காட்சிப்படுத்தப்பட்டது[3]. 1992 ஆம் ஆண்டு முதல், இவ்வோவியம் இரெய்னா சோப்பியா அருங்காட்சியகத்தில் இதற்கெனவே கட்டப்பட்ட காட்சி மேடையில் இருக்கிறது. இதுவே, இதன் தற்போதைய நிலையான இருப்பிடம் ஆகும் [4].

சான்றுகள்[தொகு]

  1. கெர்னீக்கா காலக்கோடு - 16 சூலை 2006 அன்று பார்க்கப்பட்டது.
  2. (எசுப்பானியம்) "30 años del “Guernica” en España" UNED. 18 சூலை 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Van Hensbergen, Gijs (2005) Guernica p. 305. Bloomsbury Publishing கூகுள் நூல்கள். 18 சூலை 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. The Casón del Buen Retiro: History Museo del Prado. 18 சூலை 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்னீக்கா_(ஓவியம்)&oldid=2919127" இலிருந்து மீள்விக்கப்பட்டது