உள்ளடக்கத்துக்குச் செல்

கூண்டுப் பறவை இசைக்கும் கானம் காரணம் தெரியும் எனக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூண்டுப் பறவை கானம் இசைக்கும் காரணம் தெரியும் எனக்கு (I Know Why the Caged Bird Sings) என்பது அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கவிஞருமான மாயா ஏஞ்சலோவின் தன்வரலாறு ஆகும். 1969 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது ஏழு பாகங்கள் கொண்ட தொடரில் முதலாவது பாகம் ஆகும். இது ஒருவர் மன முதிர்ச்சி அடைவது குறித்தான ஒரு கதை. எவ்வாறு ஒருவர் தனது குணத்தாலும் இலக்கியங்கள் மீது உள்ள காதலாலும் இனவெறியையும் மனவேதனைகளையும் எதிர்கொள்ள முடியும் என்று இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தக் கதை மூன்று வயது மாயாவும் அவரது அண்ணனும் ஆர்கன்சாவில் உள்ள ஸ்டாம்ப்ஸ் என்ற இடத்திற்கு அவரது பாட்டியுடன் வசிக்க அனுப்பப்படுவதில் தொடங்குகிறது. அவர் தன் பதினாறாவது வயதில் தாய்மை அடைவதுடன் முடிவடைகிறது. நூலின் ஓட்டத்தில் எவ்வாறு இனவெறியால் பாதிக்கப்பட்டு தாழ்வு மனப்பான்மையோடு இருந்த இவர் சுய ஞானமுள்ள, கம்பீரமான, கண்ணியமான மற்றும் அநீதியை எதிர்க்கும் ஒரு பெண்ணாக மாறுகிறார் என்பதை இப்பாகம் விளக்குகிறது.

இவரது நண்பரும் புத்தக எழுத்தாளருமான ஜேம்ஸ் பால்ட்வினும், இவரது பதிப்பாளர் இராபர்ட் லூமிஸும் இவர் ஏன் இவரது தன்வரலாற்றை ஒரு இலக்கியமாக எழுதக் கூடாது என்று கேள்வி எழுப்பினர். இதன் விளைவே இந்த புத்தகம். மதிப்பாய்வு செய்பவர்கள் இதைப் பெரும்பாலும் ஒரு தன்வரலாறாக எழுதப் பட்ட புனைகதை என்று கூறுகின்றனர். ஏனென்றால், ஏஞ்சலோ ஒரு புனை கதைக்கான கருத்தைப் படிப்படியாக கொண்டு வந்துள்ளது மட்டுமல்லாமல் பெரும்பாலான புனைகதை உத்திகளையும் கையாண்டுள்ளார். என்றாலும், பெரும்பாலானோரும் ஏற்றுக் கொண்ட கருத்து இது ஒரு தன்வரலாறு என்பதே. எனவே, இது ஒரு தன்வரலாறாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒரு வகையான இலக்கணத்தை இவர் விமர்சித்து , மாற்றி மற்றும் விரிவாக்க முயற்சித்துள்ளார். இவரது புத்தகத்தில் உள்ள தலைப்புகள் எல்லாம் கருப்பு அமெரிக்க பெண்மணிகள் எழுதிய சமூக உரிமை இயக்கத்திற்கு பிறகு எழுதிய புத்தகங்களின் தலைப்புகளை ஒத்து இருக்கிறது. ஒரு கருப்பு பெண்மணியின் தாயார் ஆகும் நிகழ்வை கொண்டாடுதல், இனவெறியைக் குறித்த விமர்சனம், குடும்பத்தின் முக்கியத்துவம் , சுயமாய் வாழக் கூடிய தன்மையை குறித்ததான ஒரு வேட்கை, சுய கவுரவம் மற்றும் சுய வாழ்வைக் குறித்த தெளிவான முடிவு ஆகியவை சில தலைப்புகளாகும்.

இவர் தன் வரலாற்றைப் பயன்படுத்தி இனவெறி, வன்கலவி, அடையாளம் காணுதல் மற்றும் கல்வியறிவு போன்ற தலைப்புகளை அலசி ஆராய்ந்து உள்ளார். ஆணாதிக்கச் சமூகத்தில் வாழும் பெண்களின் நிலை குறித்து வேறு பட்ட வகையில் இவர் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் காணப்படும் மாயா ஏஞ்சலோவின் சிறு வயது பதிப்பு ஆகும். கதையின் மைய கருவான இந்த கதாபாத்திரம் "அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு கருப்பு இன பெண்ணின் அடையாள கதாபாத்திரமாகக்" கருதப்படுகிறாள்[1]. இவர் எட்டு வயது குழந்தையாக இருக்கும் போது கற்பழிக்கப் பட்ட நிகழ்வு சுருக்கமாக விவரிக்கப்பட்டாலும் இந்தப் புத்தகத்தை முழுமையாக ஆட்கொள்கிறது. அடுத்த உருவகம் கூண்டில் அடைக்கப்பட்ட பறவை விடுதலை அடைய போராடுவது. இதுவும் புத்தகம் முழுவதும் ஒரு மையக் கருத்தாக எடுத்தாளப்பட்டுள்ளது. இது "இனவெறியை எதிர்த்து போராடும்போது பெற்றுக் கொள்ளும் தொடர் அனுபவத்தைக்" குறிக்கிறது[2]. இனவெறியை இவர் எதிர்த்துப் போராடுவது இப்புத்தகத்திற்கு ஒரு ஒன்று பட்ட கருப்பொருளைக் கொடுக்கிறது. கலங்கிய, உடைந்து போன உலகில் இருந்த மாயாவுக்கு கல்வியறிவும் அவரது வார்த்தைகளின் வலிமையும் அவரது வாழ்வை சமாளிக்க உதவியது. அவர் தனது உடைந்து போன வாழ்க்கையோடு போராடிக் கொண்டு இருக்கும் போது புத்தகங்களே அவருக்கு அடைக்கலமாய் இருந்தது.

1970 ஆம் ஆண்டு, கூண்டுப் பறவை அமெரிக்காவின் தேசியப் புத்தக விருது பெற நியமனம் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிகம் விற்பனை ஆன புத்தக வரிசையில் இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து பல்கலைக்கழகங்கள் வரை இந்தப் புத்தகம் கல்வி அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க புத்தக இலக்கியங்களில் ஒரு புதிய வியூகத்தை கொண்டு வந்ததற்காக இது கொண்டாடப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. Tate, p. 150
  2. Walker, p. 19