குரங்கணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரங்கணி மலைப்பகுதி

குரங்கணி (Kurangani) என்பது தமிழ்நாட்டில் உள்ள போடிநாயக்கனூருக்கு அருகில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாழிடம் ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

இந்த மலைப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தென்னை, மா, மசாலாப் பொருட்கள், காப்பி போன்றவை வளர்க்கப்படுகின்றன.

நிலவியல்[தொகு]

இந்த மலையில் பாயும் ஓடையின் கிழக்கே குரங்கணி மலைகளும் மேற்கில் கொளுக்குமலை ஆகியவை அமைந்துள்ளன. இந்த மலைகளானது அடிக்கடி மாறும் காலநிலையும், தவழும் மேகங்களையும், குளிர்ந்த காலநிலையும், வலுவான காற்றையும் உடையதாக உள்ளன. மேலும் இந்த மலைகளில் இந்திய கடமா, குரைக்கும் மான், லங்கூர்கள், இந்தியப் பாலைவனப் பூனை ஆகியவை உள்ளன. மேலும் சிறுத்தை மற்றும் புலி ஆகியவையும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குரங்கணியில் ஆறுக்கும் மேற்பட்ட சிற்றோடைகள் உள்ளன. இவை அனைத்தும் கொட்டக்குடி ஆற்றுடன் சேர்ந்து, வைகை அணையை அடைகின்றன. மலையில் உள்ள பதினெட்டு சிற்றூர்களுக்கும் தாய் கிராமமாக கொட்டக்குடி உள்ளது.

ஈர்ப்பவை[தொகு]

குரங்கணி மலையானது மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயிற்சிக்கு ஏற்றது. குரங்கணி மலையின் மைய கிராமத்தில் இருந்து 12 கி.மீ நடக்கும் தொலைவில் டாப் ஸ்டேஷன் உள்ளது. கேரளத்தில் உள்ள மூணாறுக்கு இங்கிருந்து, அடர்ந்த வனப்பகுதிகளையும், புல்வெளிகளையும் கடந்து நடந்தே செல்ல முடியும்.

அருகிலுள்ள மூணாறு மலை மற்றும் கொலுக்கமுல்லை மலைகள் 8,000 அடிகள் (2,400 m) உயரத்தில் இருக்கும் உலகின் மிக உயர்ந்த தேயிலைத் தோட்டங்களாகும்.

இங்கு அழகர்சாமியின் குதிரை, மைனா, கும்கி போன்ற படங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஆகத்து முதல் திசம்பர் வரையிலான மாதங்களில் இந்த மலைப்பகுதிகளில் கழிக்க சிறந்த காலமாகும்.

சாம்பாலூர் அருவி, கோடக்குடி ஆற்றின் ஆதாரமாக உள்ளது, இது போடிநாயக்கனூரின் குடிநீர் தேவைக்கு உதவுகிறது.

மலையில் உள்ள மைய கிராமத்தில் 50 வீடுகளும் 200 மக்களும் வசிக்கின்றனர். டாப் ஸ்டேசன், மீனாறு, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. மைய கிராமத்தில் இரண்டு தங்கு குடில்கள் உள்ளன.

தீவிபத்து[தொகு]

2018 மார்ச் 11 அன்று குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 20 மலை நடை பயணிகள் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.[1]

அணுகல்[தொகு]

  • வான் வழி: அருகில் உள்ள வானூர்தி நிலையம் 101 கிமீ தொலைவிலுள்ள மதுரை வானூர்தி நிலையம்.
  • சாலை வழி: குரங்கணிக்குச் செல்ல மதுரை அல்லது பிற நகரங்களில் இருந்து பேருந்து வடகையுந்து வசதிகள் உள்ளன. போடிநாயக்கனூரில் இருந்து குரங்கணிக்குச் செல்ல 16 கி.மீ தொலைவு ஆகும்.
  • தொடர்வண்டி பாதை: போடிநாயக்கனூர் நிலையம் அருகிலுள்ள தொடர்வண்டி நிலையமாகும், இது குரங்கணியிலிருந்து 16 கி.மீ. (மதுரை மற்றும் சென்னையிலிருந்து தொடர்வண்டி சேவை உள்ளது).
  • போடிநாயக்கனூரில் இருந்து சாலை மார்கமாக குரங்கணி 15 கி.மீ தொலைவு ஆகும்
  • போடிநாயக்கனூரில் இருந்து பேருந்து, ஈப்பு, தானி ஆகிவற்றில் குரங்கணி செல்லக் கிடைக்கிறது
  • குரங்கனி கிராமத்தில் இருந்து டாப் ஸ்டேசனுக்கு நடை தூரம் 12 கி.மீ

மேற்கோள்கள்[தொகு]

  1. "விடைபெறும் 2018: சுற்றுச்சூழல் நிகழ்வுகள்". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். 29 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்கணி&oldid=3749159" இலிருந்து மீள்விக்கப்பட்டது