உள்ளடக்கத்துக்குச் செல்

குய்வா த லாசு மானோசு

ஆள்கூறுகள்: 47°9′S 70°40′W / 47.150°S 70.667°W / -47.150; -70.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குய்வா த லாசு மானோசு
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கைகளின் குகையில் காணப்படும் கை உருக்கள்
அலுவல்முறைப் பெயர்குய்வா த லாசு மானோசு, ரியோ பிந்தூராசு
அமைவிடம்சாந்தா குரூசு, அர்கெந்தீனா
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (iii)
உசாத்துணை936
பதிவு1999 (23-ஆம் அமர்வு)
பரப்பளவு600 ha (1,500 ஏக்கர்கள்)
Buffer zone2,331 ha (5,760 ஏக்கர்கள்)
ஆள்கூறுகள்47°9′S 70°40′W / 47.150°S 70.667°W / -47.150; -70.667
குய்வா த லாசு மானோசு is located in Santa Cruz Province
குய்வா த லாசு மானோசு
Location of குய்வா த லாசு மானோசு in Santa Cruz Province.
குய்வா த லாசு மானோசு is located in அர்கெந்தீனா
குய்வா த லாசு மானோசு
குய்வா த லாசு மானோசு (அர்கெந்தீனா)

குய்வா த லாசு மானோசு (எசுப்பானிய மொழியில் கைகளின் குகை) என்பது அர்கெந்தீனாவின் சாந்தா குரூசு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு குகை அல்லது குகைகளின் தொடராகும். இது பெரிடோ மொரேனோ நகரிலிருந்து தெற்கே 163 km (101 mi) தொலைவில் உள்ளது. இக்குகை அதன் கை ஓவியங்களுக்குப் (இதன் பெயரின் மூலமும் இதுவே) புகழ்பெற்றது. இக்குகையின் ஓவியங்கள் 9,000 இலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையானவை.[1] பல்வேறு மனிதக் குழுக்கள் இக்குகையில் வாழ்ந்துவந்துள்ளதோடு, இதன் மிக முந்தைய ஓவியங்கள் காபன் திகதியிடல் முறை மூலம் அண்ணளவாக 9,300 ஆண்டுகள் (அண்ணளவாக கி.மு. 7300) பழமையானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[1] இங்கு கைகளின் நிழலுருக்களை (silhouettes) உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட எலும்புகளாலான குழாய்களின் எச்சங்களிலிருந்து, இவ்வோவியங்களின் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கி.பி. 700 ஆண்டளவில் தெகுவல்சு மக்களின் மூதாதையர் இறுதியாக வாழ்ந்துள்ளனர்.[1] இது 1999ல் யுனெசுகோ உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இக் குகை பிந்தூராசு ஆற்றுப் பள்ளத்தாக்கின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகிய படகோனிய வெளியில் அமைந்துள்ளது. பாசோ கரகோலெசு பகுதியின் வடக்கே தேசிய வழித்தடம் 40 இலிருந்து பிரிந்து பிந்தூராசு ஆற்றுக் குடைவின் தென்புறமாக வடகிழக்குத் திசையில் செல்லும் 43 km (27 mi) நீளமான சரளைக்கற் பாதை வழியே இப்பகுதியை இலகுவில் அடையமுடியும். தேசிய வழித்தடம் 40 இலிருந்து செல்லும் கரடுமுரடான, குறுக்குச் சாலைகள் மூலமாக ஆற்றுக் குடைவின் வடபுறத்தை அடையமுடியும். 3 km (1.9 mi) நீளமான ஒரு பாதை ஆற்றுக் குடைவின் இரு பகுதிகளையும் இணைத்தாலும் அங்கு சாலை இணைப்புகள் இல்லை.[2]

இதன் முதன்மைக் குகை 248 m (814 அடி) ஆழமும், 15 m (49 அடி) அகலமுடைய நுழைவாயிலையும் கொண்டுள்ளது. துவக்கப் பகுதியில் இதன் உயரம் 10 m (33 அடி) ஆக உள்ளது. குகையின் நிலப்பகுதி மேல்நோக்கிய சாய்வைக் கொண்டிருப்பதால், குகையின் உட்பகுதியில் இதன் உயரம் 2 m (6.6 அடி) ஆகக் குறைகிறது.

ஓவியங்கள்

[தொகு]

கைகளின் உருக்கள் வரை அச்சு முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலான கைகள் இடது கைகளாகும். இதன் மூலம், இதனை வரைந்தோர் விசிறு குழாயை வலது கையில் வைத்திருக்கக் கூடும் என்றோ அல்லது தமது வலதுகைப் பின்புறத்தை சுவரில் வைத்துக்கொண்டு விசிறு குழாயை இடது கையில் பிடித்திருக்கலாமென்றோ முடிவு செய்யலாம்.

இவை தவிர, மனிதர்கள், குவானக்கோக்கள் (லாமா குவானிகோ),[1] ரியாக்கள், பூனைக் குடும்ப விலங்குகள் மற்றும் ஏனைய விலங்குகளும் இங்கு காட்டப்பட்டுள்ளன. மேலும், வடிவ கணித உருக்கள், அலைவரிக் கோட்டுருக்கள், கதிரவனின் வடிவங்கள், மற்றும் வேட்டைக் காட்சிகள் போன்றனவும் வரையப்பட்டுள்ளன. வேட்டைக் காட்சிகள் பல்வேறு வேட்டை நுட்பங்களை விவரிக்கும் இயல்பான காட்சிகளாக உள்ளன. போலாக்களின் பயன்பாடும் இவற்றில் காணப்படுகிறது.[1] போலா என்பது இரு புறமும் நிறைகள் இணைக்கப்பட்ட, கயிற்றாலான வேட்டைக் கருவியாகும். இவை விலங்குகளின் கால்களை நோக்கி வீசப்படும். இதன்மூலம், விலங்கு சிறைப்படுத்தப்பட்டுப், பின்னர் வேட்டையாடிகளால் கொல்லப்படும்.[3] சிறிய எண்ணிக்கையிலான இதே போன்ற ஓவியங்கள் இக்குகையின் அருகிலுள்ள குகைகளில் காணப்படுகின்றன. இக்குகையின் மேற்புறங்களில் சிவப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் வேட்டைக்குப் பயன்படும் போலாக்களை மையில் தோய்த்து மேல்நோக்கி எறிவதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இவ்வோவியங்களை வரைவதற்காகப் பயன்பட்ட ஒட்டுப்பொருள் எதுவெனத் தெரியவில்லை. ஆயினும், நிறமிகளாக கனிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் ஊதா நிறமியாக இரும்பு ஒட்சைட்டுக்களும், வெள்ளை நிறமியாக கயோலினும், மஞ்சள் நிறமியாக நேட்ரொசரோசைட்டும், கறுப்பு நிறமியாக மங்கனீசு ஒட்சைட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1]

ஆய்வுகளும் பேணல்களும்

[தொகு]

கார்லோசு சே. கிரேடின் என்பவர் இக்குகைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[1] குய்வா த லாசு மனோசு 1999ம் ஆண்டிலிருந்து உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Cueva de las Manos, Río Pinturas." UNESCO World Heritage List. Retrieved 7 March 2012.
  2. "Moon Travel Guide, Argentina". Archived from the original on 2012-06-17. Retrieved 2010-07-08.
  3. "Cave of Hands". Atlas Obscura (in ஆங்கிலம்). Retrieved 2017-09-25.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

வார்ப்புரு:Navbox prehistoric caves வார்ப்புரு:World Heritage Sites in Argentina வார்ப்புரு:Prehistoric technology

"https://ta.wikipedia.org/w/index.php?title=குய்வா_த_லாசு_மானோசு&oldid=4178696" இலிருந்து மீள்விக்கப்பட்டது