குடவள்ளி ராமபிரம்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடவள்ளி ராமபிரம்மம்
பிறப்பு24 ஜூன் 1902
நந்தமூரு, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1 அக்டோபர் 1946(1946-10-01) (அகவை 44)
பணிஇயக்குநர்
திரைப்படத் தயாரிப்பாளர்
திரைக்கதை ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
சாராதாம்பா
"பிரெண்ட்ஸ் அண்ட் கோ என்பது குடவள்ளி ராமபிரம்மத்தால் நடத்தப்பட்டு வந்த ஒரு வணிகமாகும்

குடவள்ளி ராமபிரம்மம் (Gudavalli Ramabrahmam) ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரையுலகில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[1] [2] [3] இவர் மாலா பிள்ளா (1938) , ரைத்து பிட்டா (1939) போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சமூக பிரச்சனைத் திரைப்படங்களை இயக்கியவர். 1945ஆம் ஆண்டில், இவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல்நாட்டி யுத்தம் என்ற திரைப்படத்தின் இணை இயக்குநராகவும் இருந்தார்.[4]

ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

இவர், 1902இல் கிருஷ்ணா மாவட்டம் நந்தமுரு கிராமத்தில் குடவள்ளி வெங்கய்யா - பாப்பம்மா தம்பதியருக்கு பிறந்தார். 1918இல், இவர் தனது இடைநிலைக் கல்வியை பந்தரிலுள்ள தேசியக் கல்லூரியில் முடித்தார். பதினெட்டு வயதில் சாராதாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[5] [6] 1931இல், இவர் ஆந்திர விவசாயிகள் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவின் தலைவரானார். 1934இல், ஆந்திர நாடக அமைப்பின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சென்னையில் பிரஜாமித்ரா என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[7]

அதைத் தொடர்ந்து, தெலுங்குத் திரையுலகில் நுழைந்தார். மேலும் "சாரதி சித்ரா" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, "கனக தாரா" என்ற படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். பின்னர் இவர் தனது சொந்தத் தயாரிப்பில் திரௌபதி வஸ்த்ராபரணம் என்ற நாட்டுப்புறத் திரைப்படம் மூலம் இயக்கத்தில் இறங்கினார். பின்னர் தயாரிப்பாளர் பி.வி.தாஸுடன் இணைந்து ஸ்ரீ கிருஷ்ண லீலாலு என்ற படத்தை இயக்கினார். இவர் ரைத்து பிட்டா (1939), இல்லாலு (1940) அபவாது (1941), பத்தினி (1942), பந்துலம்மா (1943), மாயலோகம் (1945) போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் 1 அக்டோபர் 1946 இல் இறந்தார்.[8] [7]

மேற்கோள்கள்[தொகு]