கிராம புத்துணர்வு இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராம புத்துணர்வு இயக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கிராமங்களில் உணவு உற்பத்தி, மருத்துவம், கல்வி, விளையாட்டு போன்ற துரைகளை மேம்படுத்தி பூரணமான ஆரோக்கியமான கிராமிய வாழ்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும். ஈசா அறக்கட்டளை, சமூக சிந்தனையுள்ள தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இத்திட்டம் ஆகஸ்ட் 2003 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செயல்திட்டங்கள்[தொகு]

தமிழ்நாட்டில் வாழ்ந்த எண்ணற்ற யோகிகள் மற்றும் ஞானிகளின் ஞானவெளிப்பாட்டால் உருவான தனிச்சிறப்புமிக்க கலாச்சாரத்தை கிராம மக்கள் வாழ்வில் மீண்டும் நடைமுறைக்கு எடுத்துவருவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தை செயல்படுத்த, கீழ்கண்ட அம்சங்களை கொண்ட செயல்திட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. அவைகள்:

  • கிராமப்புற நலவாழ்வு – இலவச நடமாடும் மருத்துவமனைகள்
  • யோக சாலைகளும் உடற்பயிற்சிக் கூடமும்
  • மூலிகைத் தோட்டம், கிராமங்களில் தோட்டப்பண்ணை
  • ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு அம்சங்கள்
  • சுகாதாரம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு
  • பெண்களுக்கு தொழிற் பயிற்சி
  • கணனி பயிற்சி மையங்கள்
  • கிராம நூலகம்

செயல்பாடுகள்[தொகு]

இலவச நடமாடும் மருத்துவமனைகள் உரிய நேரத்தில், இலவசமாக மருத்துவ வசதி செய்து தருவதோடு, அது குறித்த விழிப்புணர்வையும், வழிபாட்டுதலையும் ஏற்படுத்துகிறது. நாட்டு வைத்தியங்கள் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில், உரிய காலத்தில் கிடைக்கக் கூடியதும், சிக்கனமானதுமான மூலிகைத் தோட்டங்களை அமைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் ஆயர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவங்களில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள், இலவச நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கிராமங்களில் அடிப்படை ஆரோக்கிய வழிமுறைகளையும், இலவச மருத்துவ சேவைகளையும், இலவச மருந்துகளையும் வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி இலவச யோகப்பயிற்சியும் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான யோகப்பயிற்சிகளும், கம்ப்யூட்டர் பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்களுக்கு வலைப்பந்து , பெண்களுக்கு துரோபால் போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. வருடத்திற்கு ஒரு முறை கிராம மக்களுக்கான கிராம ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படுகின்றது.

விவசாயிகளுக்கு விவசாய கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் விவசாய கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. நாட்டை பசுமையாக்கும் நோக்குடன் ஒவ்வோரு கிராமத்திலும் மரக்கன்றுகள் நடப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது.

பயன்கள்[தொகு]

இத்திட்டத்தின் முலம், கிராம மக்கள் ஓர் ஆரோக்கியமான வாழ்வை பெற வாய்ப்பாக இருக்கிறது. மேலும், அடிப்படைக் கல்வி, சமூக விழிப்புணர்வை ஒரளவுக்கு பெறுகின்றனர். இதனால், நம்பிக்கையற்ற பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் கிக்குண்ட கிராம மக்களின் வாழ்வில் ஒரு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முழுமையான வெற்றி இன்னும் சில காலம் சென்ற பின்னரே நுகரப்படும்.

திட்டத்திற்கான வளங்கள்[தொகு]

இத்திட்டதை செயல்படுத்த தேவையான நிதிவுதவி, அந்தந்த பகுதிகளில் இருக்கும் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. மேலும் சமூக சிந்தனையுள்ள தன்னார்வ தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர்களின் உதவியோடு நடைமுறைப்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக, கோபி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் துவக்கப்பட்டுள்ளது.

தொலைநோக்கு இலக்குகள்[தொகு]

படிப்படியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், இத்திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த இலக்கு எட்டப்பட்டவுடன், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் இந்த இலக்கு எட்டப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இறுதியில், ஒரு ஆரோக்கியமான, புத்துணர்வான இந்தியாவை உருவாக்கம் நோக்கோடு இத்திட்டம் அனுகப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]