கிராம கணக்குகள்
Appearance
கிராம கணக்குகள், தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் உள்ள வருவாய் கிராமங்கள் தொடர்பான 24 வகையான கிராமக் கணக்குகளைப் பராமரிப்பது கிராம நிர்வாக அலுவலர் ஆவார். [1]
பசலி ஆண்டில் (1, சூலை முதல் 30, சூன்), சூன் 30ம் தேதிக்குள் நடைபெறும் ஜமாபந்தி அன்று கிராம நிர்வாக அலுவலர் பராமரித்த 24 வகையான கிராமக் கணக்குகளை சரக வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் போன்றோர் தணிக்கை செய்வர்.
கிராம கணக்குப் பதிவேடுகள்
[தொகு]கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்க வேண்டிய 24 கிராமக் கணக்குப் பதிவேடுகள்:
- கிராம அ பதிவேடு - நிலையான அடிப்படையான இப்பதிவேடு கிராமத்தைப் பற்றிய புல எண் வாரியான விவரங்களை கொண்டதாகும்.
- சாகுபடி கணக்கு எண் 1 - இக்கணக்கு ஒவ்வொரு மாதமும் பயிர்வாரியாக பிரிக்கப்பட்டு புல எண், உட்பிரிவு விவரங்களுடன் சாகுபடியை காட்டும் கணக்காகும்.
- அடங்கல் கணக்குப் பதிவேடு - ஒரு கிராமத்தில் உள்ள நிலத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி பின்வருமாறு மூன்று பகுதிகளாக பிரித்து பசலி ஆண்டுதோறும் எழுதப்பட வேண்டிய பதிவேடாகும். இக்கணக்கு நீர்ப்பாசன ஆதாரங்கள் வாரியாகவும், நில பாகுபாடு வாரியாகவும் புல வாரியாகவும் எழுதப்பட வேண்டும்.
- கிராம கணக்கு எண்:2 சி - கிராமத்தில் அரசு நிலங்கள் மற்றும் தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் ஆகியவற்றில் உள்ள பலன் தரும் மரங்களை காட்டும் பதிவேடாகும். அரசு தோப்புகள், பொது உபயோகத்திற்கு விடப்பட்ட தனியார் தோப்புகள் , அரசால் வரி விதிக்கப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடக்கும் மரங்கள், ஊராட்சி அல்லது பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள் என இக்கணக்கு நான்கு பிரிவுகளாகக் கொண்டிருக்கும்.
- கிராம கணக்கு எண் 2டி - பாசன திட்டங்களின் கீழ் பாசன வசதி செய்யப்பட்ட நிலப்பரப்பினைக் காட்டும் பதிவேடு இக்கணக்கு அடங்கலில் உள்ள பதிவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். இக்கணக்கு இரு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும். முதல் பிரிவு ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரி பாசனங்களைக் கொண்டது.
- தரிசு நிலங்கள் பதிவேடு ( 2எப் கணக்கு) - ஒவ்வொரு பசலி ஆண்டிலும் சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள், சாகுபடி செய்யாது விடப்படும் மற்றும் வேறு வகையாக உபயோகப்படுத்தப்படும் நிலங்களின் பரப்பினை காட்டும் வருடாந்திர கணக்காகும். இப்பதிவேடு அடங்கலில் கலம் 18(அ)ல் குறிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு எழுதப்பட வேண்டும்.
- கிராம கணக்கு எண்: 3 (பட்டா மாறுதல்) - நிலங்களின் உரிமையை விட்டு விடுதல், நில ஒப்படை, பட்டா பெயர் மாற்றம் போன்ற விவரங்கள் கொண்டிருக்கும் வருடாந்திர பதிவேடாகும்.
- கிராம கணக்கு எண்: 5 - நிலவரி தள்ளுபடி கணக்குகளைக் காட்டும் வருடாந்திர பதிவேடாகும்.
- கிராம கணக்கு எண்: 6 (தண்ணீர் தீர்வைப் பட்டி) – சாகுபடி பரப்பைக் கொண்டு தண்னீர்த் தீர்வை கணக்கிடும் பதிவேடாகும்.
- கிராம கணக்கு எண்:7 - ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த ஆக்ரமணம் மற்றும் நீண்டகால / குறுகிய கால குத்தகைகள் முதலான அரசுக்கு வரவேண்டிய பல்வேறு வருவாய் இனங்கள் குறித்து எழுதப்படும் வருடாந்திர பதிவேடாகும்.
- கிராம கணக்கு எண்:10 பிரிவு ஐ (சிட்டா பதிவேடு). - கிராம நிலங்களின் பட்டாதாரர் வாரியாக கைப்பற்றில் உள்ள நஞ்சை,புஞ்சை மானாவாரி நிலங்களையும் அதற்கான தீர்வையினையும் காட்டும் பதிவேடாகும். மேலும் சிட்டாவில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பட்டாதாரர்களின் பெயரை சிகப்பு மையினால் எழுதப்பட வேண்டும்.
- கிராம கணக்கு எண்:10ஏ. - இக்கணக்கு சாதாரணமாக வாரிசுப்பட்டி என குறிப்பிடப்படும் இறந்து போன பட்டாதாரர்களின் பெயரினையும் மேற்படி பட்டா நிலங்கள் வாரிசு முறையில் மாற்றப்பட வேண்டிய நபர்களின் பெயரினையும் காண்பிக்கும் மாதாந்திர கணக்காகும்.
- கிராம கணக்கு எண் :10சி - பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வட்ட அலுவலகத்திலிருந்து வரப்பெறும் மனுக்கள், வாரிசுப் பட்டிகள், அனுபோக பட்டிகள் ஆகியவற்றை காண்பிக்கும் வருடாந்திர கணக்காகும்.
- கிராம கணக்கு எண்:11 - இது ஒவ்வொரு பட்டாதாரருக்கு அளிக்கப்படும் பட்டா படிவமாகும், இது கிராம கணக்கு எண். 10(1) சிட்டாவின் தூய நகல் ஆகும்.
- கிராம கணக்கு எண்: 12 - இக்கணக்கு கிராமம் முழுமைக்கும் ஒரு பசலி ஆண்டிற்குரிய மொத்த நிலவரி கேட்புத் தொகையைக் காட்டும் வருடாந்திர பதிவேடாகும். அரசுக்கு சொந்தமான மரங்களின் வருடாந்திர மகசூல் ஏலத் தொகை, பாசிக்குத்தகை ஆகியவற்றையும் குறிக்க வேண்டும்.
- கிராம கணக்கு எண்:19 - பிறப்பு பதிவேடு, இறந்து பிறத்தலுக்கான பதிவேடு, இறப்புப் பதிவேடுகளை சனவரி தொடக்கம் முதல் டிசம்பர் இறுதி முடிய ஒவ்வொரு ஆண்டும் பராமரிக்கப்பட வேண்டியது.
- கிராம கணக்கு எண்: 19 பிரிவு III - இப்பதிவேட்டில் கிராமத்தில் உள்ள கால்நடைகள், இயற்கை மரணம் நீங்கலாக கால் நடைகள் வியாதியாலோ, விஷக்கடி, கொடிய விலங்குகள் அடித்து கொல்லுதல் போன்ற காரணங்களினால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்கள் இப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.
- கிராம கணக்கு எண்: 19 டி - அம்மை குத்தப்பட்டு பாதுகாப்பு பெற்றிராத குழந்தைகள் பற்றிய விவரங்களைக் காட்டும் பதிவேடாகும்.
- கிராம கணக்கு எண்: 20 – மழைக் கணக்குப் பதிவேடு - கிராமத்தில் பெய்யும் மழை குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதி துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிய எழுதி பராமரிக்கப்படும் மழைக் கணக்கு பதிவேடாகும்.
- கிராம கணக்கு எண்: 21 - 5 ஆண்டுகளுக்கொருமுறை எடுக்கப்படும் கால்நடைகள் விவசாய கால்நடைகள் மற்றும் விவசாயக் கருவிகளின் எண்ணிக்கையைக் காட்டும் பதிவேடு.
- கிராம கணக்கு எண்: 24 - கனிமப் பதிவேடு - கிராமத்தில் வெட்டி எடுக்கும் கனிம வளங்கள் பற்றிய விவரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் முடிய ஒராண்டிற்கு எழுதப்பட வேண்டிய கணக்கு ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கிராம கணக்குகள்". Archived from the original on 2017-10-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
- http://revenue.tn.nic.in/books/village-accounts-tamil-index.htm பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்