காயத்திரி இராசபத்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு சாவகத்தைச் சேர்ந்த "பிரச்சினபராமிதா" சிற்பம் சிலவேளைகளில், காயத்திரி இராசபத்தினியைக் குறிப்பதாகச் சொல்லப்படுகின்றது.

காயத்திரி இராசபத்தினி (circa 1276?—1350) என்பவள் மயபாகித் பேரரசின் முதல் மன்னனான ராடென் விசயனின் மகாராணியும் திரிபுவன விஜயதுங்கதேவியின் தாயும் ஆவாள். சிங்கசாரி அரசின் இறுதிமன்னனாக விளங்கிய கர்த்தநாகரனின் இளையமகளான காயத்திரி, எத்தகைய புத்திக்கூர்மை மிகுந்த பேரழகியாக இருந்தாள் என்பதை வாய்மொழிக் கதைகள் கூறி வியக்கின்றன. காயத்திரி, பௌத்த நெறியினளாக விளங்கியதுடன், தன் வாழ்வின் இறுதிகாலத்தில், மயபாகித் இராயச வம்சத்தின் இராசமாதாவாகவும் அமர்ந்திருந்து பல தீர்க்கமான முடிவுகளை எடுத்தாள்.

வாழ்க்கை[தொகு]

திரிபுவனேசுவரி, பிரச்சினபராமிதா, நரேந்திர துகிதா ஆகிய மூவருக்கும் இளையவளாக, கர்த்தநாகரனுக்கு மகளாகப் பிறந்த காயத்திரி, சிங்கசாரி அரசின் தலைநகரான கூடராசத்தின் துமாபெல் மாளிகையில், வளர்ந்து வந்தாள். கலைகள், இலக்கியம், பௌத்தம் என்பவற்றில் தேர்ந்தவளாக அவள் விளங்கியதை மரபுரைகள் குறிப்பிடுகின்றன. இளவரசன் ராடென் விஜயனுக்கும் தன் மூத்த தமக்கை திரிபுவனேசுவரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கேடிரி அரசின் செயகட்வாங்கனால், அவளது தந்தை கொல்லப்பட்டு நாடு களேபரத்துக்கு உட்பட்டிருந்தது. நிலைமையைச் சமாளித்த காயத்திரி மாறுவேடமிட்டு, தன் தமக்கை திரிபுவனேசுவரியை விஜயனிடம் ஒப்படைத்துத் திரும்பினாள். அவளது ஏனைய தமக்கையர், செயகாதவாங்கனால் கவரப்பட்டிருந்தபோதும், தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஓராண்டு காலம் கெதிரி அரசின் கீழ் காயத்திரி பணிப்பெண்ணாகக் கடமை புரிந்ததாகச் சொல்லப்பட்டுகின்றது. சூழ்ச்சி மூலம் மொங்கோலியப் படைகளைப் பயன்படுத்தி கேடிரி அரசையும் செயகாதவாங்கனையும் வீழ்த்திய விஜயன், காயத்திரியையும் அவள் தமக்கையரையும் விடுவித்துத் தன் மனைவியராக்கிக் கொண்டான். இன்னொரு கருத்தின்படி, செயகாதவாங்கனின் படையெடுப்புக்கு முன்பேயே விஜயனை காயத்திரி மணந்திருக்கின்றாள்.[1]:199

பிற்கால வாழ்க்கை[தொகு]

காயத்தி்ரி, தன் மூன்று தமக்கையருடன் மாத்திரமன்றி, விஜயன் ஐந்தாவதாக மணமுடித்த இந்திரேசுவரியுடன் கூட, தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதாயிற்று. எனினும், ஐந்து மனைவியரிலும், காயத்திரியே விஜயனின் முதன்மையான மனைவியாகவும், அதிகாரம் மிகுந்தவளாகவும் இருந்தாள் என்பதை, அவளுக்குள்ள "இராசபத்தினி" எனும் பெயர்ப் பின்னொட்டு சுட்டிக் காட்டுகின்றது. மரபுரைகள், விஜயனையும் காயத்திரியையும் தெய்விகத் தம்பதியரான சிவ-சக்தியருடன் ஒப்பிடுவதுண்டு.

காயத்திரி மூலம் விஜயதுங்கதேவி, இராசதேவி எனும் இரு பெண்கள், இந்திரேசுவரி மூலம் செயநகரன் எனும் மகன் ஆகிய மூவர் மூலமே விஜயனின் குலம் தழைத்தது. மலாய அரசில் பிறந்தவனும், செயநகரன் வழியில் தன் மருகனுமான ஆதித்தியவர்மன் மீது பேரன்பு பூண்டிருந்த காயத்திரி, அவனது கலைகள், கல்வி என்பதில் போதிய கவனமெடுத்ததுடன், அவனது பாதுகாவலியாகவும் விளங்கினாள். "கய மேத"னின் புத்திக்கூர்மையைக் கண்டறிந்து அவனை ஊக்குவித்து, பின்னாளில் அவன் சாவகத்தின் பெருவீரனாகவும் பேரமைச்சனாகவும் விளங்க வழிவகுத்தவளும் காயத்திரியே.

தன் கணவன் மறைவுக்குப் பின், புத்த மடத்தில் சேர்ந்து பிக்குணியாக மாறிய காயத்திரி, அவனை அடுத்து ஆண்ட தன் பெறாமகன் செயநாகரன் ஆட்சிக்காலத்தில், சிறந்த வழிகாட்டியாகவும், இராசமாதாவாகவும் விளங்கினாள். செயநகரன் 1328இல் கொலையுண்டதை அடுத்து, காயத்திரி மீண்டும் அரசியலுக்குள் நுழைய வேண்டிநேர்ந்தது. இந்திரேசுவரியும் அவளது ஏனைய தமக்கையரும் கூட மரித்திருந்த அக்காலத்தில், மயபாகித்தின் அரசாட்சி மங்கக்கூடாது என்பதற்காக, தன் மகள் திரிபுவன விஜயதுங்கதேவியை 1329இல் முடிசூட்டினாள். காயத்திரி மரித்த 1350இலேயே, அவள் மகள் விஜயதுங்கதேவியும் அரசபதவியைத் துறந்து, மயபாகித்தின் பேரரசனாகப் பிற்காலத்தில் விளங்கிய தன் மகன் ஹயாம் வுரூக்கிற்கு ஆட்சியை வழங்கினாள்.

நகரகிரேதாகமம் எனும் நூல், தான் வசித்து வந்த விகாரத்தில் காயத்திரி மரித்தபோது இடம்பெற்ற பிரமாண்டமான சிரார்த்த நிகழ்வையும், பிற்காலத்தில், பெண் போதிசத்துவரான பிரச்சினபராமிதாவின் அவதாரமாக அவள் போற்றப்பட்டதையும் விவரிக்கின்றது. அவள் மறைந்தபோது ஆதித்தியவர்மனும் கய மெதனும் வழங்கிய பெரும் தானங்கள் பற்றி சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுவதன் மூலம், அவர்கள் அவர்களது காயத்திரி மீது கொண்டிருந்த பேரன்பைப் புரிந்துகொள்ள முடியும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Drake, Earl. 2012. Gayatri Rajapatni, Perempuan di Balik Kejayaan Majapahit. Yogyakarta: Ombak
  • Drake, Earl. 2015. Gayatri Rajapatni: The Woman Behind the Glory of Majapahit. Penang: Areca Books.
  • Slamet Muljana. 2005. Menuju Puncak Kemegahan. Jakarta: LKIS
  • Slamet Muljana. 1979. Nagarakretagama dan Tafsir sejarahnya. Jakarta: Bhratara
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்திரி_இராசபத்தினி&oldid=2899800" இலிருந்து மீள்விக்கப்பட்டது