கவார் மும்தாஜ்
கவார் மும்தாஜ் (Khawar Mumtaz பிறப்பு 29 ஜூன் 1945) ஒரு பாக்கித்தான் பெண்கள் உரிமை ஆர்வலர், எழுத்தாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆவார்.[1] இவர் 2013 முதல் 2019 வரை தொடர்ந்து இரண்டு முறை பெண்கள் நிலை (NCSW) தேசிய ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[2]
குடும்பம்
[தொகு]மும்தாஜ், கட்டிடக் கலைஞரான கமில் கான் மும்தாஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மகளான, சாமியா மும்தாஜ் பரவலாக அறியப்படும் பாக்கித்தானிய நடிகை ஆவார். உருது புதின எழுத்தாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான இசுமத் சுகதாய் இவருடைய அத்தை ஆவார்.[3]
கல்வி
[தொகு]பாக்கித்தானின் கராச்சியில் உள்ள புனித ஜோசப் மாடப் பள்ளியில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பயின்றார். புனித ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு உறவுகள் பிரிவில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பயின்றார்.[4] பன்னாட்டுப் படிப்பிற்கான தேர்வில் இவர் சிறப்பிடத்துடன் பட்டம் பெற்றார். பிரஞ்சு மொழியில் பட்டயம் பெற்றார்.[5] பாரிசில் உள்ள சோர்போனில் படிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
சமூக ஆர்வலராக
[தொகு]இவரது நியாய உணர்வும், சமூகத்தில் இருந்த பாகுபாடுகளும் சமூக செயல்பாடுகளில் இவர் ஈடுபட காரணமாக அமைந்தது. 1960களின் பிற்பகுதியில் ஜெனரல் அயூப் கானுக்கு எதிரான போராட்டத்தின் போது அரசியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டார்.[6] 1977 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியான அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன, அவற்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற சட்டம் குறிப்பிடத்தகுந்ததாகும்.[1] ஜெனரல் ஜியா-உல்-ஹக் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான சட்டங்களை நிராகரிப்பதற்கும், பெண்கள் பிரச்சினைகளை அரசியல் மற்றும் சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் கொண்டு வருவதற்கும், பாகிஸ்தானில் பெண்களின் சம உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் உருவாக்கப்பட்ட பெண்கள் செயல் மன்றத்தின் (WAF) [6][7] நிறுவனர்களில் இவரும் ஒருவராவார்.[6]
பெண்கள் நிலை குறித்த தேசிய ஆணையம்
[தொகு]இவரது தலைமையின் கீழ், பெண்கள் நிலை குறித்த தேசிய ஆணையத்தின் கீழ் , பெண்களின் உரிமைகளை செயல்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது.
- நவம்பர் 2019 இல், இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நூலகம் மற்றும் பெண்கள் அருங்காட்சியகம் அமைக்க உயர்கல்வி ஆணையத்துடன் (HEC) ஒப்பந்தம் கையெழுத்தானது.[8]
- சூலை 2018 இல், NCSW இன் தலைவர் பாக்கித்தான் தேர்தல் ஆணையத்துடன் (ECP) இணைந்து, எந்தப் பகுதிகளில் எல்லாம் பெண்களின் வாக்கு குறைவாகப் பதிவாகிறதோ அங்கெல்லாம் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை நிறுவினார். இதன்மூலம் பெண்கள் வாக்களிப்பதையோ அல்லது பதவிக்கு போட்டியிடுவதையோ தடுக்கும் காரணிகளைத் தேர்தல் ஆணையத்திற்கு புகாரளிப்பதற்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டது.[9]
- சனவரி 2018 இல், இளம் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு வீட்டுப் பணியாளரால் எழுதப்பட்ட உருது கவிதை புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்தது.[10]
- 2006 ஆம் ஆண்டில், பெண்கள் அதிகாரமளிப்பதற்கு தடைகளாக இருப்பன குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.[11]
- இந்த அமைப்பின் முன்னுரிமைப் பகுதிகளாக மூன்று முக்கியப் பரிமாணங்களை வரையறுத்தது அவையாவன 1. பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு 2.பெண்களுக்கு எதிரான வன்முறை 3. முடிவெடுப்பதில் பெண்களின் பங்கேற்பு (குறிப்பாக தேர்தல்களின் போது) ஏனெனில் இவைதான் பெண்களின் வாழ்க்கையையும் பாதிப்பதாகக் கருதப்பட்டது.
- கற்பழிப்பு மற்றும் ஆணவக் கொலை, குடும்ப வன்முறை, இந்துத் திருமணங்கள், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்குவதில் பெண்கள் நிலை தேசிய ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் சட்டம், 2017 ஐ மதிப்பாய்வு செய்து, சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு இணைக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்கியது.
- நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பெண்களின் பங்கேற்பைக் கண்காணிக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சரிபார்ப்புப் பட்டியலைப் பயன்படுத்தி 2013 மற்றும் 2018 தேர்தல்கள் கண்காணிக்கப்பட்டன.
- பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2006 -ன் கீழ் கற்பழிப்பு வழக்குகளில் பெண்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள சிக்கல்களை அடையாளம்காட்டும் ஓர் அறிக்கையை உருவாக்கியது.[12] பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்பு நிலை அறிக்கை 2016, கிராமப்புற பெண்கள் நிலை அறிக்கை 2018 ஆகியவை பெண்களின் நிலையினை அறிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றியது.
- பெண்கள் நிலை தேசிய ஆணையத்தின் அறிக்கைகள், தகவல் மற்றும் கொள்கைகள், வாதாடலுக்கான பரிந்துரைகள் ஆகியன செய்தி மடல்களாகத் தயாரிக்கப்பட்டன.
- பெண்களின் பிரச்சினைகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகள், புகார்கள், நிலைக் குழுக்களுக்கான கொள்கை விளக்கங்கள் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பு, பரிந்துரைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்காக மாகாணங்கள் வாரியாக மகளிர் அமைச்சர்கள் குழு எனும் வசதி ஏற்படுத்தப்பட்டது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Khawar Mumtaz: A Call for Collective Action on Women's Rights | Global U". global.utah.edu (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-12-08.
- ↑ "A warm send off to Khawar Mumtaz". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 2020-11-23.
- ↑ "Inspiring change: Khawar terms religious extremism, discrimination biggest challenge". The Express Tribune (in ஆங்கிலம்). 2014-05-14. Retrieved 2020-11-23.
- ↑ "International Resource Panel - Khawar Mumtaz".
- ↑ "Ms. Khawar Mumtaz | RSPN". Rural Support Programmes Network (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-02-14. Retrieved 2020-11-23.
- 1 2 3 "Q&A with H.E Khawar Mumtaz, Chairperson of the National Commission on the Status of Women, Pakistan". UN Women. 11 February 2013. Retrieved 8 November 2017.
- ↑ "Equality illusion: For women's rights, still a long way to go". The Express Tribune (in ஆங்கிலம்). 2013-09-16. Retrieved 2020-11-23.
- ↑ "HEC, NCSW to establish women's museum". The Express Tribune (in ஆங்கிலம்). 2019-10-31. Retrieved 2020-12-07.
- ↑ "NCSW for launching campaigns to mobilize women on polling day". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 2020-12-07.
- ↑ "National Commission on Status of Women striving to promote gender equality". The Express Tribune (in ஆங்கிலம்). 2018-01-16. Retrieved 2020-12-07.
- ↑ Uploader (2016-10-06). "NCSW to conduct survey on obstacles of women empowerment: Khawar Mumtaz". Associated Press Of Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-12-07.
- 1 2 "Pride of Pakistan Khawar Mumtaz". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-31. Retrieved 2020-12-08.