கயிலை மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tamilmaanavan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:12, 16 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (சரியான் பெயர் ஏற்றப்பட்டுள்ளது.)
கயிலாய மலை
கயிலாய மலையின் வடபகுதி
உயர்ந்த இடம்
உயரம்6,638 m (21,778 அடி)
இடவியல் புடைப்பு1,319 m (4,327 அடி)
புவியியல்
கயிலாய மலை is located in திபெத்து
கயிலாய மலை
கயிலாய மலை
மூலத் தொடர்இமயமலை

கயிலாய மலை, கைலை மலை, கைலாச மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் உற்பத்தியாகிறது. ஓடுகின்றது. இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இராட்சதலம் ஏரியும் ஆகும்.[1] மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.

கையிலை மலை இந்துக்கள், போன்கள், திபெத்தியர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.[2]

கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சீனாவில் இமயமலையின் வடக்கில் அமைந்துள்ளது. மானசரோவர் ஏரியும், சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

கைலை மலை அமைந்துள்ள இடம்
துணைக்கோளில் இருந்து எடுத்த படம்-மானசரோவர் (வலப்புறம் கறுப்பாய் தெரிவது) ஏரியும் இராட்சதலம் ஏரியும்
கைலாய மலை பற்றிய இந்துக்களின் நம்பிக்கையை விளக்கும் ஒரு படம். சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.

திருஞான சம்பந்தர் தென் கைலாயம் எனப்படும் திருக்காளாத்தியைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் இத்தலம் மீது திருக்கயிலாய ஞான உலா பாடியுள்ளார். இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன், கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. விஷ்ணு புராணம் கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.

கைலாச யாத்திரை

கையிலை மலையின் தெற்கு முகம்

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலம் இது.கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. பொம்பா மதம் திபெத்தின் ஆதி மதம். இவர்கள் கைலையை இடமாகச் சுற்றுகின்றனர். இந்துக்கள் வலம் வரும் போது அவர்கள் இடம் வருகின்றனர். 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.

கைலாயம் சீனாவின் திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது. 1959-ஆம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த பின்னர் வெளிநாட்டினர் யாரையும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்கவில்லை. 1981-இல் ஏற்பட்ட இந்தோ-சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு இந்தியர்களை மீண்டும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்க ஆரம்பித்தது.

மலையேற்றம்

இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. 1926 ஆம் ஆண்டு Hugh Ruttledge என்பவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது அதன் உயரம் 6000 அடிக்கு செங்குத்தாக இருப்பதால் முயற்சியை கைவிட்டார். 1936 ஆம் ஆண்டு Herbert Tichy என்பவர் Gurla Mandhata ஏற முனைந்த போது அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கேட்ட போது. " பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும்" என்றார்.[3] திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 22,000 அடிகள் ஆகும்.

கயிலாயத்தைத் தரிசித்த சில அடியார்கள்

  • காரைக்கால் அம்மையார்
  • சுந்தரமூர்த்தி நாயனார்
  • சேரமான் பெருமாள் நாயனார்
  • பெருமிழலைக் குறும்பர் நாயனார்
  • ஒளவையார்
  • அப்பர் பெருமான்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Kailash
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிலை_மலை&oldid=2788768" இலிருந்து மீள்விக்கப்பட்டது