உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர்வீச்சு காப்புக் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதிர்வீச்சுக் க்கட்டிடம் ஒன்றின் வரைபடம்.

கதிர்வீச்சு காப்புக் கட்டிடம் ( containment building), அதன் பொதுவான பயன்பாட்டில், அணுக்கரு உலையைச் சூழ கட்டப்பட்டுள்ள ஓர் எஃகு அல்லது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டிடம் ஆகும். ஓர் நெருக்கடியில் 60 முதல் 200psi ( 410 to 1400 kPa) வரையிலான அதிகபட்ச கதிர்வீச்சை வெளியேறாது அடக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அணுக்கரு பொறியியலில் கதிர்வீச்சு வெளிப்பாட்டை தடுக்கும் செயல்முறைகளில் இது நான்காவது தடைக்கல்லாக உள்ளது; முதலாவது எரிபொருள் சுட்டாங்கல்லும் இரண்டாவதாக எரிபொருளைப் போர்த்திய உலோக குழாய்களும் மூன்றாவதாக அணுஉலைக் கலன் மற்றும் குளிர்வி ஆகியனவும் ஆகும்.[1]

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு அணு மின் நிலையமும் இறுதி பாதுகாப்பு அலசல் அறிக்கை (FSAR)இல் காணப்படும் "வடிவமைப்பு காரண விபத்துக்கள்" பகுதியில் உள்ள சில கட்டுவரம்புகளை தாங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட வேண்டும். இறுதி பாதுகாப்பு அலசல் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு அணு மின் நிலையத்திற்கு அண்மையில் உள்ள பொது நூலகமொன்றில் கிடைப்பதாக இருத்தல் வேண்டும்.

காப்புக் கட்டிடம் வழமையாக அணுஉலையை உள்ளடக்கி காற்றுப்புகா எஃகு கட்டுமானமாக வெளிச் சூழலில் இருந்து தள்ளி அமைக்கப்பட்டிருக்கும். எஃகு தனித்தோ காங்கிறீற்று ஏவுகணை கேடயத்துடன் இணைக்கப்பட்டோ இருக்கும். இந்த காப்புக் கட்டிடம் மற்றும் ஏவுகணை கேடய வடிவமைப்பும் தடிமனும் அணு கட்டுப்பாட்டு ஆணையங்களின் வரையறைகளால் ஆளப்படும். ஒரு முழுவதும் நிரம்பிய பயணிகள் வானூர்தியால் தாக்கப்பட்டாலும் சேதமுறாவண்ணம் தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். [2]

பெரும்பாலான அணுஉலை விபத்துக்களில் காப்புக் கட்டிடம் முக்கிய பங்கு வகித்தாலும் இது குறுங்காலத்தில் நீராவியை அடக்கிடவும் குளிர்விக்கவுமே வடிவமைக்கப்பட்டுள்ளது; நெடுங்காலம் தடைபடும் விபத்துக்களில் வெப்பக்கடத்தலை பிற அமைப்புக்கள் வழங்க வேண்டும். மூன்று மைல் தீவு விபத்தில் காப்புக் கட்டிடத்தினுள் நீராவியின் அழுத்தம் கட்டுவரம்பினுக்குள் இருந்தபோதும் சில மணி நேரங்கழித்து அழுத்தம் கட்டுவரம்பை மீறுமோ என்ற கவலையில் இயக்குபவர்கள் தெரிந்தே கதிரியக்க ஆவியை வெளியே கசிய விட்டனர். இது மற்ற தவறுகளுடன் சேர்ந்து வெளிச்சூழலுக்கு கதிரியக்க வளிமத்தை வெளியேற்றுவதாக ஆயிற்று.[3]

புக்குஷிமா டா இச்சி அணு உலை விபத்தின் தகவல்கள் இன்னும் அலசப்படுகின்றன. 1971 முதல் பாதுகாப்பாக இயங்கிய இந்த நிலையம் வடிவமைப்பில் எதிர்பார்க்காத அளவில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால், மின்சாரம், தடங்கல்காப்பு மின்னாக்கிகள், மின்கலங்கள் ஒருசேர தடைபட அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகளும் தவறின. இதனால் எரிபொருள் தடிகள் பகுதியாக அல்லது முழுமையாக உருகிடவும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளும் கட்டிடங்களும் சேதமுறவும் மிகுந்தளவு கதிரியக்க கழிபொருள்கள் சூழ்ந்திருந்த காற்று,கடல் வழியே வெளியேறவும் வழி வகுத்தது.

மேற்கோள்கள்[தொகு]