ஒழுகூர் திரிகாலேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒழுகூர் திரிகாலேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:ஒழுகூர்
மாவட்டம்:இராணிப்பேட்டை மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திரிகாலேசுவரர்
தாயார்:திரிபுரசுந்தரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:பல்லவர்

ஒழுகூர் திரிகாலேசுவரர் கோயில் என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசாபேட்டை அருகில் எட்டு கி.மீ தொலைவில் உள்ள ஒழுகூர் என்ற ஊரில் உள்ள சிவத்தலமாகும். முக்காலங்களுக்கு அதிபதியாக இருக்கும் ஈசன், இத்தலத்தில் திரிகாலன் என்கிற பெயரில் விளங்குகிறார்.[1]

வரலாறு[தொகு]

திரிகாலேசுவரர் கோயிலானது ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோயிலாக தெரிகிறது. இது பிற்காலப் பல்லவர்களால் கற்றளியாக, தூங்கானை மாட (கஜபிருஷ்ட விமானம்) அமைப்பில் கட்டபட்டுள்ளது. பத்தாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட ‘விஜய மகாராஜன்’ என்று அழைக்கபட்ட பார்த்திவேந்திரவர்மன் ஆட்சிக் காலத்திலும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் உத்தமத்தொண்டைமான் ஆட்சிக் காலத்திலும் கோயிலில் பல திருப்பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக கல்வெட்டுகள் வழியாக அறியவருகிறது. ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர் கோட்டத்து ஒழுகூர் நாட்டைச் சேர்ந்த ஒழுகூர்’ என்று கல்வெட்டுகள் இந்த தலத்தைக் குறிப்பிடுகின்றன. அதன்பிறகு பதினெட்டாம் நூற்றாண்டில் ஆர்க்காட்டைச் சேர்ந்த பச்சையப்ப செட்டியாரால் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1804 இல் குடமுழுக்கு நடத்தபட்டுள்ளது.[2]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் வடக்கு நோக்கிய நிலையில் இரண்டு நிலைகளில் இராசகோபுரம் உள்ளது. இராச கோபுரத்தில் மூன்று சுதைக்கலசங்கள் உள்ளன. கோயிலானது ஒற்றைப் பிராகாரத்தைக் கொண்டுள்ளது. கருவறையில் மூலவரான திரிகாலேசுவரர் லிங்கவடிவில் கிழக்கு நோக்கிய நிலையில் சதுரபீட ஆவுடையாருடன் காட்சியளிக்கிறார். இவரை அகத்தியர் பிரதிட்டை செயத்தாக தொன்மக்கதை நிலவுகிறது. வடமேற்குப் பிராகாரத்தில் அம்பிகை திரிபுரசுந்தரி தனி சந்நிதியில் உள்ளார். இவர் நான்கு கரங்களுடன் பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் ஏந்தியும் முன்னிரு கைகளை அபய வரத முத்திரைகளில் வைத்துள்ளார். பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகர், சண்டிகேசர் போன்றோர் உள்ளனர். இந்த தெய்வச் சிலைகள் புதிதாகச் செய்து வைக்கப்பட்டவை. பழைய சிலைகள் களவாடப்பட்டுவிட்டன. இக்கோயிலில் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிட்டை செய்யப்பட்டு உள்ளன, என்றாலும் சிலைகள் களவாணப்பட்டதால் இதில் சில சிலைகளே எஞ்சி உள்ளன.[2]

இங்கு விக்னேஸ்வரி என்கிற பெயரில் ஒரு தனி சிற்றாலயத்தில் விநாயகர் உள்ளார். இந்த விநாயகரின் உருவத்தில் பெண் அம்சம் ஏதும் இல்லை. ஆனால் இவர் பெண் பெயரிலேயே அழைக்கபடுகிறார் இந்தப் பல்லவர் காலத்து விநாயகர் இரண்டு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.[2]

குறிப்புகள்[தொகு]