உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். நீலகண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். நீலகண்டன் (19, திசம்பர், 1936- 19, மார்ச், 2023) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர், பொருளியல் அறிஞர், பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் ஆவார். இவர் பொருளியல் சிந்தனை வரலாறு, சமூக அறிவியலின் மெய்யியல், மார்சியப் பொருளாதாரம், செவ்வியல் பொருளாதாரம், ஆஸ்திரியப் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தார்.[1]

பிறப்பும், கல்வியும்

[தொகு]

எஸ். நீலகண்டன் தமிழ்நாட்டின், இப்போதைய கரூர் மாவட்டதில் உள்ள செட்டிப்பாளையம் என்ற சிற்றூரில் 1935 திசம்பர் 19 அன்று பிறந்தார். கரூர் நகராட்சிப் பள்ளி, வேலூர் கந்தசாமிக் கவுண்டர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி ஆகியவற்றில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.[1]

தொழில்

[தொகு]

சட்டப் படிப்பை முடித்த பின்னர் எஸ். நீலகண்டன் நீதியரசான பி. எஸ். கைலாசத்திடம் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தன் தொழில் வாழ்கையைத் துவக்கினார். 1960 அக்டோபரில் உதகமண்டலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் உதவி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் பொருளியல் கற்பித்தார். சொத்துரிமையும் இந்திய அரசமைப்புச் சட்டமும் பொருளியல் மாற்றங்களும் என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1979 இல் முனைவர் பட்டம் பெற்றார்.[1] பின்னர் திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் துறைத் தலைவராக பொறுப்பேற்றார். 1980 இல்சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற இவர், அப்பல்கலைக்கழகத்தின் திருச்சிராப்பள்ளி கிளை முதுகலை மையத்தில் நியமிக்கபட்டார். அப்போது துவக்கபட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதலில் இவர் மட்டுமே பொருளியல் பேராசிரியராக பொறுப்பில் இருந்தார்.

அமெரிக்க அரசின் புல்பிரைட் வெகுமதி மூலம் 1986-87 இல் அமெரிக்காவின் செயிண்ட் லூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பேராசிரியர் டக்ளஸ் நார்த்திடம் (1993 இல் டக்ளஸ் நோபல் பரிசு பெற்றார்) புதிய அமைப்புவாதப் பொருளாதாரம் பயின்றார். நார்த்திடம் பெற்ற தாக்கத்தினால் 1988 இல் இந்தியாவில் அடிமை வம்சதின் ஆட்சிக் காலத்தில் நிலைத்தன்மை மற்றும் மாற்றம் (1206-1290): புதிய அமைப்புவாதப் பொருளாதாரம் மூலம் ஒரு விளக்கம் என்னும் ஆய்வுக் கட்டுரையை நீலகண்டன் வெளியிட்டார்.[1]

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொருளியில் துறைத் தலைவராக பணியாற்றிவந்த நிலையில், 1990 இல் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். 1995 இறுதியில் ஓய்வு பெறும் வரை அங்கேயே பணியாற்றினார்.[2]

1998 ஆண்டுக்குப் பிறகு தன் சொந்த ஊரான கோபிச்செட்டிப்பாளையத்துக்கு திரும்பினார். 19, மார்ச், 2023 அன்று இறந்தார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • நவீன அமைப்புப் பொருளியலும் விவசாய மாற்றமும்: ஓர் அரிச்சுவடி[3]
  • ஒரு நகரமும் ஒரு கிராமமும்: கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள் (2008)[2][2]
  • ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை: செவ்வியல் அரசியல் பொருளாதாரம் (2012)[2]
  • நவ செவ்வியல் பொருளியல் (2021)[4]
  • Socio-Economic Changes in Western Tamil Nadu (வெளிவர உள்ளது)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "எஸ்.நீலகண்டன்: நவ செவ்வியல் பொருளாதார அறிஞர்!". Hindu Tamil Thisai. 2023-03-23. பார்க்கப்பட்ட நாள் 2023-05-31.
  2. 2.0 2.1 2.2 2.3 "எம்ஐடிஎஸ் நிறுவனமும் தமிழும்". Hindu Tamil Thisai. 2021-11-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-31.
  3. நவ செவ்வியல் பொருளியல்
  4. "MIDS - Madras Institute of Development Studies". www.mids.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நீலகண்டன்&oldid=3728084" இலிருந்து மீள்விக்கப்பட்டது