ஊடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊடும் மனைவி

ஊடல் என்பது பிணக்கிக்கொள்ளும் ஒருவகை நடத்தைப் பாங்கு. இது உளவியல் அடிப்படையில் தோன்றுகிறது. மேலைநாட்டு நடத்தை அறிவியல் இதனைப் பல்வேறு கோணங்களில் பகுத்தாய்கிறது. நடத்தையியல் மேலைநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. தமிழில் இந்த அறிவியல் கலை கிறித்துவுக்கு முன்பே தோன்றி வளர்ந்துள்ளது. தொல்காப்பியர் இதனை மெய்ப்பாட்டியல் என்னும் தலைப்பின் கீழ் விளக்கியுள்ளார்.

உடலுறவு வாழ்க்கையில் ஊடல் இன்பம் தரும். எப்போது எனில் அந்த ஊடுதல் கூடித் தழுவுவதில் முடியவேண்டும். [1]

வேறுபாட்டு நுட்பங்கள்[தொகு]

புலவி, ஊடல், துனி இந்தவகையான பிணக்கைக் குறிக்கும் படிநிலை வளர்ச்சிச் சொற்கள். இந்த மனப்பாங்கு ஆண்களிடமும் பெண்களிடமும் இருப்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

திருக்குறள் 'ஊடல்' பாங்கினை துனி, புலவி என்னும் சொற்களால் வேறுபடுத்திக் காட்டுகிறது. [2] இதன் வழியே பார்க்கும்போது துனி என்பது ஊடலின் உச்சக்கட்டம். கனிந்த பழம் போன்றது. துன் என்னும் அடிச்சொல் துன்னி அதாவது நெருங்கி இருப்பதைக் குறிக்கும். [3] பழுத்திருக்கும் ஊடலும் கூடலில் இன்பமாக அமைந்திருக்கும். பொய்யை இட்டுக்கட்டிக்கொண்டு ஊடும் பாங்கு புலவி எனப்படும். இது பழுக்காமல் பிஞ்சு நிலையில் இருக்கும் கருக்காய் போன்றது. அதாவது ஊடலின் தோன்று நிலையே புலவி.

ஆண் ஊடுதல்[4] [5][தொகு]

திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழும்போது மனைவி தன் ஆவலைத் தணிக்காதபோது கணவன் ஊடுவான். களவு வாழ்க்கையின்போது இருவரும் கூடுவதற்குக் காதலி குற்றிட்ட இடத்துக்கு அவள் வரத் தவறியபோது காதலன் ஊடுவான். இந்த ஊடல் புலவி என்னும் போலிப் பிணக்காகவும் இருக்கும். அப்போதெல்லாம் தலைவியின் தோழி பக்குவமாக எடுத்துரைத்து அவர்களைக் கூட்டிவைப்பாள்.

பெண் ஊடுதல்[தொகு]

திருக்குறளில் பெண் ஊடுதல் பற்றிய செய்திகள் திருக்குறளின் கடைசியில் உள்ள புலவி, புலவி நுணுக்கம், ஊடல் உவகை என்னும் மூன்று அதிகாரங்கள் காம உணர்வை மிகுதிப்படுத்திக் கூடல்-இன்பத்தை இனிமையாக்கும் ஊடல் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன.

துனி[தொகு]

 • போரிடுகையில் படைவீரனுக்கு நீங்காத் துனி வேண்டும். [6]
 • செல்வர் துனி கொள்ளாமல் இருக்க வேண்டும். [7]
 • கணவன் இல்லாத காலத்தில் மனைவிக்கு மாலைக்காலம் துனி செய்யும். [8]
 • அவன் கண்ணில் துனி தோன்றும்போதே அவள் அவனைத் தழுவத் துடித்தாள். [9]
 • மனமே! நீ துனி செய்தால் அவனது இன்பம் இல்லாமல் பட்டினி கிடக்கவேண்டி வரும். [10]
 • ஊடலின்போது தோன்றும் சிறு-துனி தோன்றும். [11]

புலவி[தொகு]

புலவியைத் திருவள்ளுவர் புலத்தை என்னும் சொல்லாலும் குறிப்பிடுகிறார். அத் கணவன் தழுவ வரும்போது தழுவாமல் இருப்பதாகும். [12] புலந்து உணர்தல் புலவி. இது பொய்யாகக் கணவன்மேல் சினம் கொள்ளுதல் ஆகும். [13]

அடிக்குறிப்பு[தொகு]

 1. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். -திருக்குறள் 1330
 2. துனியும் புலவியும் இல்லாயின் காமம்
  கனியும் கருக்காயும் அற்று (திருக்குறள் 1306)
 3. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து, துன்னியார் துன்னிச் செயின். திருக்குறள் 494
 4. உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்
  புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய (தொல்காப்பியம் கற்பியல் 15)
 5. புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்
  சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய (தொல்காப்பியம் கற்பியல் 16)
 6. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும், இல்லாயின் வெல்லும் படை. - திருக்குறள் 769
 7. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து. -திருக்குறள் 1010
 8. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். - திருக்குறள் 1223
 9. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. - திருக்குறள் 1290
 10. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. - திருக்குறள் 1294
 11. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். - திருக்குறள் 1322
 12. புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. - திருக்குறள் 1301
 13. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. - திருக்குறள் 1246
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடல்&oldid=1626408" இலிருந்து மீள்விக்கப்பட்டது