மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்யில் படுவது மெய்ப்பாடு. அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஆறாவது இயலாக அமைந்திருப்பது மெய்ப்பாட்டியல்ஆகும். தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகள் எட்டு. அவை தோன்றும் இடங்கள் என்று ஒவ்வொன்றும் 4 வகைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அன்றியும் 32 மெய்ப்பாடுகள் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்களை உரையாசிரியர்கள் சுவை என்கின்றனர். இவை உடலின் மெய்ச்சுவைகள். அதாவது மெய்யுணர்வுகள்.[1] இவை அனைத்தும் புறப்பொருளில் தோன்றுவன.

இவையேயன்றிக் காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே தோன்றும் மெய்ப்பாடுகள் அவத்தை, அழிவில்-கூட்டம், ஒப்பு, ஒப்பின்மை என்னும் உணர்ச்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

 • பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள்.
 • சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள்.
 • தொல்காப்பியம் காட்டுவன உணர்ச்சிகள் உந்திய வெளிப்பாடு.

ஒப்புநோக்குக[தொகு]

புறப்பொருள் மெய்ப்பாடுகள் [2][தொகு]

மெய்ப்பாடு எட்டு. அவை நகை, அழுகை முதலானவை.
மெய்ப்பாடு தோன்றுமிடம் சுவை. சுவை என்பது உள்ளத்தில் தோன்றும் சுவை-உணர்ச்சி.[3] அவை எள்ளல், இளமை முதலான 32, மற்றும் உடைமை, இன்புறல் முதலான 32

8 வகை [4][தொகு]

மெய்ப்பாடு மெய்ப்பாடு தோன்றும் அகச் சுவைகள்
நகை [5] எள்ளல் [6] இளமை [7] பேதமை [8] மடன் [9]
அழுகை இளிவு [10] இழவு [11] அசைவு [12] வறுமை [13]
இளிவரல் [14] மூப்பு [15] பிணி [16] வருத்தம் [17] மென்மை [18]
மருட்கை [19] புதுமை [20] பெருமை [21] சிறுமை [22] ஆக்கம் [23]
அச்சம் அணங்கு [24] விலங்கு [25] கள்வர் [26] தம்-இறை [27]
பெருமிதம் கல்வி [28] தறுகண் [29] புகழ்மை [30] கொடை [31]
வெகுளி [32] உறுப்பறை [33] குடிகோள் [34] அலை [35] கொலை [36]
உவகை [37] செல்வம் [38] புலன் [39] புணர்வு [40] விளையாட்டு [41][42]

அகச் சுவைகள் 32 [43][தொகு]

மேலே சொல்லப்பட்ட எட்டு வகையான மெய்ப்பாடுகளின் கூறுகள் இந்த 32 மெய்ப்பாடுகள்.

உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு,
கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு,
முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு,
கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கு,

அகப்பொருள் மெய்ப்பாடுகள்[தொகு]

அவத்தை 6 [44][தொகு]

'வினைய நிமித்தம்' எனத் தொல்காப்பியர் குறிப்பிடும் இந்த மெய்ப்பாடுகளை உரையாசிரியர்கள் 'அவத்தை' என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். தலைவன் முதன் முதலில் பார்க்கும்போது தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் இவை.[45]

தலைவி மெய்ப்பாடு (அவத்தை) வரிசை எண் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடு மெய்ப்பாடு பற்றிய விளக்கம்
1 புகு முகம் புரிதல்,
பொறி நுதல் வியர்த்தல்,
நகு நயம் மறைத்தல்,
சிதைவு பிறர்க்கு இன்மை
காதலன் பார்ப்பதைக் காதலி விரும்புதல்
காதலி நெற்றியில் வியர்வை
தான் விரும்புவதைக் காதலி மறைத்தல்
மற்றவர்களைப் பற்றி எண்ணாமை
2 'கூழை விரித்தல்,
காது ஒன்று களைதல்,
ஊழ் அணி தைவரல்,
உடை பெயர்த்து உடுத்தல்,
தலைமுடியை விரித்துவிடுதல்
காதில் இருக்கும் அணிகலன் ஒன்றைக் கழற்றிப் போட்டுக்கொள்ளுதல்
அணிந்திருக்கும் அணிகலன்களைத்

தடவிப் பார்த்துக்கொள்ளுதல்
காதல் உணர்வால் தளரும் ஆடையை இறுக்கி உடுத்திக்கொள்ளுதல்

3 'அல்குல் தைவரல்,
அணிந்தவை திருத்தல்,
இல் வலியுறுத்தல்,
இரு கையும் எடுத்தல்,
தன் குறி உறுப்பில் தோன்றும் ஊறலால் அதனைத் தடவுதல்
அணிந்திருப்பவைகளைத் திருத்தி அழகு செய்துகொள்ளுதல்
தம் இல்லத்தார் கடிவர் எனல்
மாட்டேன் என்று கூறிக் கைகூப்பல்
4 'பாராட்டு எடுத்தல்,
மடம் தப உரைத்தல்,
ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல்,
கொடுப்பவை கோடல்
தலைவனை உயர்ந்தவன் எனப் பாராட்டுதல்
பழகுவதற்குக் கூசும் தன் மடமைத் தன்மையை விட்டுவிட்டு அவனிடம் அளவளாவிப் பேசுதல்
உற்றார் உறவினர் அன்பு இல்லாமல் அலர் தூற்றுவார்களே என்று நாணுதல்
தலைவன் தரும் காதல் பரிசை ஏற்றல்
5 'தெரிந்து உடம்படுதல்,
திளைப்பு வினை மறுத்தல்,
கரந்திடத்து ஒழிதல்,
கண்டவழி உவத்தல்,
அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு அவனுக்கு உடன்படல்
காதலில் திளைப்பதை மறுத்தல்
அவனைக் தேடிவரச் செய்யத் தான் மறைவிடம் ஒன்றில் தன்னை ஒளித்துத்துக்கொள்ளுதல்
அவன் தன்னைக் கண்டுபிடித்து வந்தவுடன் மகிழ்தல்
6 'புறம் செயச் சிதைதல்,
புலம்பித் தோன்றல்,
கலங்கி மொழிதல்,
கையறவு உரைத்தல்,
புணர்ச்சிக்குப் பின்னர் நிகழ்வன
அவன் தன்னை ஒப்பனை செய்துவிட்டதைப் பிறர் அறியமுடியாதபடி அவன் செய்த ஒப்பனைகளை அழித்தல்
அவனோடு இருந்ததற்காகப் புலம்புவது போலத் தோற்றமளித்தல்
கலக்கத்தோடு அவனிடம் பேசுதல்
'இனி எனக்கு உன்னைத் தவிர வேறு வழி இல்லை' என்று தான் கையற்றிருக்கும் இயலா நிலையை அவனிடம் எடுத்துக் கூறுதல்

உரையாசிரியர் விரிவு[தொகு]

அவத்தைகள் 10 என வடநூலார் கொள்வர்.

தொல்காப்பியமும் பத்து அவத்தைகளைக் குறிப்பிடுகிறது.

முதல் ஆறு அவத்தை அன்பின் ஐந்திணைக்குரியது.

7ஆம் அவத்தை பெருந்திணைக்குரியது.

8 ஆம் அவத்தை உன்மத்தம் எனப்படுகிறது.

9 ஆம் அவத்தை மயக்கம்

10 ஆம் அவத்தை சாக்காடு.

வடநூலார் கூறும் மன்றல் என்னும் ஆண்-பெண் உறவுகள் எட்டு. அவற்றில் நடுவண் ஐந்திணைக்கண் வருவன ஆறு. இவற்றைத் தொல்காப்பியர் விளக்கினார். ஏனைய நான்கும் கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் உரியன. ஒத்த காமத்து நிகழாது.

7 ஏழாம் அவத்தை நாண் நீங்கிய காதல்
8 எட்டாவது தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதி
9 ஒன்பதாவது உன்மத்தம்
10 பத்தாவது சாக்காடு

இந்நிகரன அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின் . ஒன்பதாவது மயக்கம்; ; ஆதலான் எனக் கூறினார் என்று கொள்க.[46]

மனம் அழிந்த தலைவியின் மெய்ப்பாடுகள் - 20 [47][தொகு]

காதலனுக்காகக் காத்திருக்கும்போது காதலியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள்:

இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர் பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசி அட நிற்றல்,
பசலை பாய்தல், உண்டியின் குறைதல், உடம்பு நனி சுருங்கல், கண் துயில் மறுத்தல், கனவொடு மயங்கல்,
பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயம் செய்தல், அவன் தமர் உவத்தல், அறன் அளித்து உரைத்தல்,
ஆங்கு நெஞ்சு அழிதல், எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறு பெயர் கேட்டல், (நலத் தக நாடின்) கலக்கம்

மனம் அழியாத் தலைவியின் மெய்ப்பாடுகள் 8 [48][தொகு]

இது திருமணத்துக்கு முற்பட்ட வாழ்க்கையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என்றும், திருமணத்துக்குப் பிற்பட்ட வாழ்க்கையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என்றும் இருவகையாக்கித் தொகுக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முந்திய களவு வாழ்க்கையில் தோன்றுவன[தொகு]

தலைவன் மனம் அழியக்கூடாது என நடந்துகொள்ளும் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் 'அழிவில் கூட்டம்' எனப்படும்.

 1. முட்டுவயின் கழறல்,
 2. முனிவு மெய்ந் நிறுத்தல்,
 3. அச்சத்தின் அகறல்,
 4. அவன் புணர்வு மறுத்தல்,
 5. தூது முனிவு இன்மை,
 6. துஞ்சிச் சேர்தல்,
 7. காதல் கைம்மிகல்,
 8. கட்டுரை இன்மை,

திருமணத்துக்குப் பின்னர் கற்பு வாழ்க்கையில் தோன்றுவன - 10 [49][தொகு]

 1. தெய்வம் அஞ்சல்,
 2. புரை அறம் தெளிதல்,
 3. இல்லது காய்தல்,
 4. உள்ளது உவர்த்தல்,
 5. புணர்ந்துழி உண்மை,
 6. பொழுது மறுப்பு ஆக்கம்,
 7. அருள் மிக உடைமை,
 8. அன்பு தொக நிற்றல்,
 9. பிரிவு ஆற்றாமை,
 10. மறைந்தவை உரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவி

வாழ்வியல் மனநிலை[தொகு]

இது திருமணத்துக்கு முன்னர் (களவியல்), திருமணத்துக்குப் பின்னர் (கற்பியல்) என்னும் இரண்டு கோணங்களில் நோக்கப்பட்டுள்ளது.

மணப்போர் ஒப்புமை( ஒப்பு 10 வகை) [50][தொகு]

வாழ்க்கையில் இணையும் ஆண் பெண் இங்குக் காட்டப்பட்டுள்ள 10 நிலைகளில் ஒத்தவர்களாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பர்.

ஒப்பு விளக்கம்
பிறப்பு ஆண், பெண் என்னும் பிறப்பு [51]
குடிமை ஆயர், வேட்டுவர் போன்ற ஒத்த குடி
ஆண்மை ஆண்மை, பெண்மை உணர்வுகள் ஒத்திருத்தல்
ஆண்டு பெண் மூத்தவளாக இல்லாமை, ஆண் கிழவனாக இல்லாமை
உருவு ஒருவரை ஒருவர் கவரும் கட்டழகு
நிறுத்த காம வாயில் ஒத்த காம உணர்வுகள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.[52]
நிறை ஒருவரை ஒருவர் விரும்பும் நிறைந்த உள்ளம் [53]
அருள் தவறுகள் நேரும்போது பெருந்தன்மையுடன் ஒத்துப்போகும் அருளுடைமை இருவருக்கும் இருத்தல் வேண்டும்
உணர்வு ஈகை முதலான உணர்வுகள் ஒத்திருத்தல்
திரு ஒத்த செல்வ வளம் [54]

மணந்தோரிடம் தோன்றாமல் இருக்க வேண்டியவை[தொகு]

(தலைமக்கட்கு ஆகாத குணங்கள் ‘இன்மை’ 11 வகை) [55][தொகு]

நிம்பிரி அழுக்காறு/ அவ்வியம்/பொறாமை.
கொடுமை அறனழிய பிறரைச் சூழும் சூழ்ச்சி
வியப்பு தம்மைப் பெரியவராக எண்ணுதல்.
புறமொழி புறங்கூறுதல்
வன்சொல் கடுஞ்சொல் கூறுதல் (திட்டக்கூடாது)
பொச்சாப்பு தம்மைக் கடைபிடிக்காதிருத்தல். (தம் நெறியை ஒழுகாதிருத்தல்)
மடிமை முயற்சியின்மை
குடிமை இன்புறல் தம் குலப் பிறப்பால் தம்மை மதித்து மகிழ்தல்
ஏழைமை பேதமை
மறப்பு கற்றது, கேட்டது, பயின்றது போன்றவற்றைக் காதலர்கள் மறத்தல் ஆகாது.


இளம்பூரணர் கூறும் இவ்விளக்கம் இன்மை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் தமக்குள் போற்றக்கூடாத குணங்கள் இவை என்று கூறி மெய்ப்பாட்டியல் முடிகிறது.

’’கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே.’’ (தொல்.பொருள்.மெய்ப்.27)

இந்த மெய்ப்பாடுகளை எல்லோராலும் புரிந்துகொள்ள இயலாது; கண்ணாலும், செவியாலும், தெளிவாக இதற்குப் பொருள் இதுவென சரியாக உணரும் மனிதர்களுக்கல்லாமல் இதன் பொருள் மற்றோருக்குப் புலப்படாது என மெய்ப்பாட்டியலை நிறைவு செய்கிறார் தொல்காப்பியர்.

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. திருக்குறள் காட்டும் மெய்யுணர்தல் மெய்மையை உணர்தல். அதாவது பொய்மையை அறிந்து விலக்குதல். திருக்குறள் காட்டுவது மெய்யறிவு
 2. தொல்காப்பியம் 3-245, 246
 3. நாச்சுவை அன்று
 4. தொல்காப்பியம் 3-247 முதல் 255
 5. பிற்காலத்துச் செயிற்றியம் என்னும் நூல் நகைப்பு தோன்றும் இடங்களைப் பட்டியலிடுகிறது.

  " உடனிவை தோன்றும் இடமியா தெனினே
  முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும்
  மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணும்
  கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும்
  பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ்
  சுற்றத் தோரை இகழ்ச்சிக் கண்ணும்
  மற்று மொருவர்கட் பட்டோர்க் கண்ணுங்
  குழவி கூறு மழலைக் கண்ணும்
  மெலியோன் கூறும் வலியின் கண்ணும்
  வலியோன் கூறும் மெலிவின் கண்ணும்
  ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங்
  கல்லார் கூறுங் கல்விக் கண்ணும்
  பெண்பிரி தன்மை யலியின் கண்ணும்
  ஆண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணும்
  களியின் கண்ணுங் காவாலி கண்ணும்
  தெளிவிலார் ஒழுகும் கடவுளார் கண்ணும்
  ஆரியர் கூறுந் தமிழின் கண்ணும்
  காரிகை யறியாக் காமுகர் கண்ணும்
  கூனர் கண்ணும் குறளர் கண்ணும்
  ஊமர் கண்ணும் செவிடர் கண்ணும்
  ஆன்ற மரபின் இன்னுழி எல்லாந்
  தோன்றும் என்ப துணிந்திசி னோரே.

 6. பிறரை ஏளனம் செய்தல்
 7. குழந்தைச் செயல்
 8. அறியாமல் செய்யும் பிறரது செயல்
 9. மடத்தனச் செயல்கள்
 10. பிறர் தம்மை இளிவு படுத்தும்போது
 11. உறவினர் நண்பர் போன்றோரை இழந்த காலத்தில்
 12. உடலில் இயலாமை தோன்றும்போது
 13. பொருள் இல்லாமல் வறுமையில் வாடும்போது
 14. தன்னைத் தானே நொந்துகொள்ளுதல்
 15. அகவை முதிர்வு
 16. சருக்கரை-நோய் போன்ற பிணிப்பு-நோய்
 17. பிறர் செய்யும் துன்பத்தை எண்ணி வருந்துதல்
 18. விரும்பியதைச் செய்யமுடியாத நிலை
 19. வியப்பு
 20. காணாததைக் காணும்போது
 21. மிகப் பெரியதைக் காணும்போது
 22. மிகச் சிறியதைக் காணும்போது
 23. வியத்தகு செயல்
 24. புயல், இடி, மின்னல் போல் வருத்தும் தெய்வங்கள்
 25. கொல்லும் விலங்குகள்
 26. வழிப்பறிக் கள்வர்
 27. ஆளும் அரசன்
 28. தன் கல்வி நலன்
 29. தன் தகுதியை எண்ணும் வீரம்
 30. தனக்கு வரும் புகழ்
 31. இன்னாருக்குத் தந்தேன் என்னும் பெருமித உணர்வு
 32. சினம் என்னும் கோவம்
 33. உடலுறுப்பை வெட்டுதல்
 34. தனக்குத் துணையிருக்கும் குடும்பத்தாரைப் பிரித்தல்
 35. துன்புறுத்தல்
 36. உயிர்க்கொலை
 37. மகிழ்ச்சி
 38. தான் வைத்திருக்கும் செல்வம்
 39. தனக்குள்ள அறிவு
 40. ஆணும் பெண்ணும் திளைத்தல்
 41. மற்றவர்களோடு சேர்ந்து விளையாடும்போது.
 42. போட்டியிட்டு விளையாடும்போது மகிழ்ச்சி இருக்காது.
 43. தொல்காப்பியம் 3-256
 44. தொல்காப்பியம் 3-257 முதல் 265
 45. தொல்காப்பியம் 3-263 இளம்பூரணர் உரை
 46. இளம்பூரணர் உரை
 47. தொல்காப்பியம் 3-266
 48. தொல்காப்பியம் 3-267
 49. தொல்காப்பியம் 3-268
 50. தொல்காப்பியம் 3-269
 51. அலி, பேடு என இல்லாமை
 52. யாரேனும் ஒருவர் உடலுறவை வெறுப்பவராக, மற்றவரால் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளச் செய்பவராக இருத்தல் கூடாது
 53. ஒப்புக்கு உறவு கொள்பவராக இருக்கக் கூடாது
 54. பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இன்மை
 55. இன்மை 11 வகை, தொல்காப்பியம் 3-270