உள்ளுறை உவமம்
தமிழில் உள்ள அகத்திணைப் பாடல்களுக்கு உரிய திணையைத் தீர்மானிப்பதற்குத் திணை கொள் நெறி எனத் தனி இலக்கண நெறி ஒன்று உண்டு. அஃது உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. உரிப்பொருளானது பாடலில் வெளிப்படையாகப் புலப்படுவதோடு மட்டுமன்றி இறைச்சி உள்ளுறை உவமம் ஆகியவற்றாலும் வெளிப்படும். அகத்திணையில் உட்பொருள் வரின் அஃது உள்ளுறை உவமம் என்று கூறப்படும். புறத்திணையில் உட்பொருள் வரின் அஃது ஒட்டணி (பொருள் ஒட்டிக்கொண்டிருக்கும் அணி) என்னும் பிறிதுமொழிதல் அணி என்று கூறப்படும்.
- உவமத்தில் உள்ளுறை உவமம், உள்ளுறை அல்லாத ஏனை உவமம் (வெளிப்படை உவமம்) என இரண்டு வகை உண்டு. [1]
- வெளிப்படை உவமம் பாடலில் தானே தெரியும். [2]
- உள்ளுறை உவமம் பாடலில் உள்ளே மறைந்திருக்கும். இது பாடலில் சொல்லப்பட்ட செய்தியே அன்றி மற்றொரு செய்தியைப் புலப்படுத்தும். அதனை உணர்ந்து பாடலின் பொருளையும் பாடலின் உரிப்பொருள், திணை என்ன என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.[3]
- அகத்திணையில் வரும் கருப்பொருள்களில் தெய்வம் என்னும் கருப்பொருள் நீங்கலாக ஏனைய பொருள்கள் அனைத்தும் உள்ளுறைக்கு நிலமாக (நிலைகளனாக) அமைந்திருக்கும். [4]
உள்ளுறை உவம வகைகள்
[தொகு]உள்ளுறை உவமத்தில் ஐந்து வகை உண்டு. [5]
- உடனுறை உள்ளுறை உவமம்
- உவம உள்ளுறை உவமம்
- சுட்டு உள்ளுறை உவமம்
- நகை உள்ளுறை உவமம்
- சிறப்பு உள்ளுறை உவமம்
என ஐந்து வகைப்படும்.
உடனுறை உள்ளுறை உவமம்
[தொகு]விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த கால்முளை அகைய
நெய் பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப
‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே [6]
- தலைவி தோழியருடன் புன்னங்கொட்டையை மண்ணில் மறைக்கும் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தாள். வீட்டுக்குச் செல்லும்போது மறைத்த விதையை மறந்து மண்ணிலேயே விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அந்த விதை முளைத்து வளர்ந்தது. அதைப் பார்த்த செவிலித்தாய் ‘இஃது உன்னைக் காட்டிலும் சிறந்தது. எனவே உனக்கு அவ்வை (தாய்) முறை’ என்று பொய்யாகச் சொல்லிவைத்தாள். தலைவி இதனை உண்மை என நம்பித் தான் உண்ணும் பாலை அதற்கு ஊற்றி வளர்த்துவந்தாள். அது தலைவியைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து தாய் போல் நின்றது. இந்த நிலையில் தலைவன் தலைவியுடன் சிரித்து விளையாட முனைகிறான். தலைவி தன் தாய் முன்னிலையில் தலைவனோடு விளையாடக் கூசுகிறது, (வேறு இடத்துக்குச் செல்வோம்) என்கிறாள். இது பாடலில் சொல்லப்படும் செய்தி. தலைவிக்குத் தாய் போல் உடனுறைவதாகப் புன்னையைக் கூறுவதால் இஃது உடனுறை உள்ளுறை உவமம்,
உவம உள்ளுறை உவமம்
[தொகு]வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுக் குறுகும் – நிறைமதுச்சேர்ந்து
உண்டாடும் தன்முகத்தே செவ்வி உடையதோர்
வண்டா மரைப்பிரிந்த வண்டு. [7]
- தாமரையில் தேனுண்ட சுரும்புவண்டு தேன் போதவில்லை என்று காவி என்னும் செங்குவளை மலரிலுள்ள தேனை உண்ண விரும்பிச் செல்லும். இது பாடலில் உள்ள செய்தி. தலைவன் தலைவியின் இன்பம் போதவில்லை என்று பரத்தையிடம் செல்கிறான். இஃது உள்ளே உறையும் வேறு பொருள். இந்த உள்ளுறை உவமைப் பொருத்தத்தால் பெறப்படுவதால் இது உவம உள்ளுறை உவமம்.
சுட்டு உள்ளுறை உவமம்
[தொகு]தொடி நோக்கி மென் தோளும் நோக்கி, அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்த்து [8]
- (அவன் அவளோடு இருந்துவிட்டு பிரியவிருக்கிறான். தோழிமுன் பூப் பறிப்பது போல் அவள் பாசாங்கு காட்டுகிறாள். பிரிவை எண்ணிய அவளது வளையல்கள் கழன்று அவளது மெலிந்த தோள்பட்டையில் விழுகின்றன.) அவள் தன் வளையலைப் பார்த்தாள். வளையல் விழும் தோளைப் பார்த்தாள். பின் தன் அடியைப் பார்த்தாள். இந்த நிகழ்வுகள் பாடலில் கூறப்பட்டுள்ள வெளிப்படைச் செய்திகள். ஆனால் இவற்றின் உட்பொருள் வேறு. அவனைப் பிரிந்திருந்தால் வளையல் கழலும். தோள் மெலியும். வளையல் மெலிந்த தோளில் விழும். (பூப் பறிக்க முடியாமல்) காலடி தடுமாறும். இவை இந்தப் பார்வைகளால் உணர்த்திய செய்திகள். இவை கண்ணால் நோக்கிக் காட்டிய உள்ளுறை உவமங்கள்.
நகை உள்ளுறை உவமம்
[தொகு]அசையியற்கு உண்டு ஆண்டு ஒர் ஏஎர் யான் நோக்கப்
பசையினள் பைய நகும் [9]
- அவள் அசைந்து நடந்துகொண்டிருந்தாள். அதில் ஓர் அழகு தெரிகிறது. நான் பார்த்தேன் அதில் அவள் ஒட்டிக்கொண்டான். அத்துடன் மெல்ல சிரிக்கிறாள். இந்த வெளிப்படையான சொற்களில் வேறு பொருள் உணர்த்தப்படுகிறது. அவள் மெல்ல நடப்பதிலும், அவன் பார்ப்பதை அவள் விரும்புவதிலும், அவள் புன்னகையிலும் அவள் அவனை விரும்புகிறாள் என்னும் புதிய பொருள் உள்ளுறையாகக் கிடப்பதால் இஃது உள்ளுறை உவமம். அவள் நகையில் ஏளனக் குறிப்பு தோன்றாமல் காதல் குறிப்பு தோன்றுவதால் இது நகை பற்றி வந்த உள்ளுறை உவமம்.
சிறப்பு உள்ளுறை உவமம்
[தொகு]உள்ளுறையில் சிறப்பு உள்ளுறை பெரிதும் போற்றப்படும் சிறப்பு மிக்கது.
அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. [10]
நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என்
ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர்
எண்ணுவது எவன்கொல் அறியேன் என்னும் [11]
- இந்தப் பாடலில் ‘அவர் என்மார்பகத்தைத் தன் கண்ணால் கட்டிப்போட்டுக்கொண்டு என் நெற்றியை (நெற்றியோடு கூடிய முகத்தை) எதற்காகத் தடவிக்கொடுக்கிறார்’ என்று தலைவி சொல்லும்போது அவர் தன்னை அணைக்க விரும்புகிறார் என்று சொல்வதாகப் பிறிதொரு பொருள் புலப்பட நின்றதால் இது சிறப்பு உள்ளுறை உவமம்.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑
உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது ஆகும் திணை உணர் வகையே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 49 - ↑ ஏனை உவமம் தான் உணர் வகைத்தே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 52
- ↑
உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக என
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம். - தொல்காப்பியம் அகத்திணையியல் 51 - ↑
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
கொள்ளும் என்ப குறி அறிந்தோரே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 50 - ↑
உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு எனக்
கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே. – தொல்காப்பியம் பொருளியல் 46 - ↑ நற்றிணை 172
- ↑ தண்டியலங்காரம் 53 உரை
- ↑ திருக்குறள் 1279
- ↑ திருக்குறள் 1098
- ↑ தொல்காப்பியம் பொருளியல் 47
- ↑ கலித்தொகை 4