உரிப்பொருள் (இலக்கணம்)
தமிழ் இலக்கணத்தில் உரிப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், கருப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகள் சார்ந்த கருப்பொருள்களிலேயே அமைந்திருந்தன. அவற்றில் அந்தந்த நிலப்பகுதிக்குரிய ஒழுக்கங்களும் இடம்பெற்றிருந்தன.
இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன[1]. இவ்வொழுக்கங்கள்:-
- புணர்தல்: ஒன்றுசேர்தல்
- இருத்தல்: பிரிவைப் பொறுத்து இருத்தல்
- ஊடல்: தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல்
- இரங்கல்: பிரிவு தாங்காது தலைவி வருந்துதல்
- பிரிதல்: தலைவன் தலைவியைப் பிரிதல்
என்பனவாகும். ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன. அவை வருமாறு[2]:
- குறிஞ்சி: புணர்தலும், புணர்தல் நிமித்தமும்.
- பாலை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்.
- முல்லை: இருத்தலும், இருத்தல் நிமித்தமும்.
- மருதம்: ஊடலும், ஊடல் நிமித்தமும்.
- நெய்தல்: இரங்கலும், இரங்கல் நிமித்தமும்
ஒரு அகத்திணைப் பாடல் இன்ன திணையைச் சார்ந்தது எனத் தீர்மானிப்பது உரிப்பொருளே. உரிப்பொருள் மயங்குவதில்லை. முதற்பொருளில் நிலம் மயங்காது.[3] பிற மயங்கும்.[4] இது திணை மயக்கம் எனப்படும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ அகப்பொருள் விளக்கம், 25 ஆம் பாடல்
- ↑ இலக்கண விளக்கம் - அகத்திணையியல். பக்கம் 38
- ↑ திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே; நிலன் ஒருங்கு மயங்குதல் இல' என மொழிப- புலன் நன்கு உணர்ந்த புலமையோரே - தொல்காப்பியம் களவியல் 14
- ↑ உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே - தொல்காப்பியம் களவியல் 15
உசாத்துணைகள்
[தொகு]- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
- நாற்கவிராச நம்பி, அகப்பொருள் விளக்கம்[தொடர்பிழந்த இணைப்பு], மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம். (23 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது)
- இலக்கண விளக்கம் - அகத்திணையியல். மின்னூல் 24 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது]