உயிரி எரிபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரி எரிபொருள் (biofuel) என்பது அண்மையில் செத்துப் போன உயிரிப் பொருட்களில் இருந்து (குறிப்பாகப் புதல் அல்லது தாவரம்) உருவாக்கப்படும் எரிபொருளாகும். அது திண்மமாகவோ, திரவமாகவோ, வளிமமாகவோ இருக்கலாம். புதைபடிவ எரிபொருளும் (fossil fuels) இதுபோன்றே உயிரி மற்றும் தாவர மூலங்களில் இருந்து பெறப்பட்டாலும், அந்த உயிரிகள் பல்லாயிரம் காலத்துக்கும் முன்னரே இறந்து போனவை.

பொதுவாக, உயிரி எரிபொருள் என்பது எந்தவொரு கரிம (உயிரி) மூலத்தினின்றும் உருவாக்க இயலும். ஆனால், அவற்றில் பரவலாய்ப் பயன்படுவது சூரிய ஒளியைப் பெற்று ஒளிச்சேர்க்கை செய்யும் தாவர இன வகைகளே. உயிரி எரிபொருள் உருவாக்கப் பல வகையான தாவரங்கள் பயன்படுகின்றன.

உயிரி எரிபொருட்கள் உலகெங்கும் பயன்படுத்தப் படுகின்றன. உயிரி எரிபொருட் தொழிற்சாலைகள் ஐரோப்பா, ஆசியா, மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவலாகி வருகின்றன. பெரும்பாலும் வாகன எரிபொருளாக இவை பயன்படுகின்றன.

உயிரி எரிபொருட்களுக்கான தேவை அதிகரிக்க அதிகரிக்க அதனால் சில பிரச்சினைகளும் உண்டாகின்றன. இவற்றிற்கான மூலப்பொருட்களைப் பயிர் செய்ய வேண்டிக் காடுகள் அழிவதும், உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு உண்டாவதும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள். விளைச்சலை அதிகரிக்க வேண்டிப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் முதலியனவற்றால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசடைவதும் உண்டு.

உயிரி எரிபொருள் உற்பத்தியை நுட்பியல் வழியாகப் பார்க்கும் போது குறிப்பாக இரண்டு முறைகளைக் கருதலாம்.

  • கரும்பு, சர்க்கரைக்கிழங்கு முதலியனவற்றைக் கொண்டு ஈசுட்டு மூலம் நொதிக்க வைத்து எத்தனால் என்னும் எரிநறா தயாரிப்பது
  • இயற்கையாக நெய் உருவாக்கும் தாவரங்களை (எ-டு ஆமணக்கு) வளர்த்து, அவற்றில் இருந்து நெய்யை எடுப்பது. இந்த நெய்களைச் சூடாக்கினால் அவற்றின் பிசுக்குமை குறையும் என்பதால், அவற்றை நேரடியாக டீசல் எந்திரங்களில் எரிக்கலாம். அல்லது, இந்த நெய்களை வேதிச்செலுத்தங்கள் (chemical processes) மூலம் உயிரி டீசல் தயாரிக்க உபயோகிக்கலாம்.

இவை தவிர, வெறும் மரம்/கட்டைகளை வைத்து மரவளி, மெத்தனால், எத்தனால் போன்ற எரிபொருட்களையும் உருவாக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரி_எரிபொருள்&oldid=2741774" இலிருந்து மீள்விக்கப்பட்டது