இலட்சியவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்யியலில், இலட்சியவாதம் (Idealism) என்பது இயல்புநிலை அல்லது மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படும் இயல்புநிலை மற்றும் மனத்தை அடிப்படையாகக் கொண்ட, மனத்தால் ஆக்கப்பட்ட அல்லது கருத்தியல்வாதமான நுண்புல மெய்யியல்களின் தொகுப்பாகும். அறிவாய்வியல்ரீதியாக, இலட்சியவாதம் என்பது மனத்தோடு சார்பற்ற பொருள் அல்லது கருத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பற்றிய ஒரு ஐயுறவியலாக வெளிப்படுகிறது.

பொருள்முதல்வாதத்திற்கு மாறாக, பருப்பொருள் நிகழ்விற்கு மூலம் மற்றும் முன்நிபந்தைனயாக மனத்தின் விழிப்புணர்வு அல்லது சிந்தனையே முதன்மயானது என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தப் பார்வையின்படி, பொருள் இருப்புக்கு முன் நிலையாக அல்லது முன் நிபந்தனையாக சிந்தனை நிலை அல்லது உணர்வு நிலை உள்ளது. சிந்தனை நிலையே, பொருளைத் தீர்மானிக்கவும் மற்றும் உருவாக்கவும் செய்கிறதேயல்லாமல் இதன் மறுதலை சாத்தியமானதல்ல. இலட்சியவாதக் கோட்பாடு சிந்தனையையும், மனதையும் பொருள் உலகின் மூலம் என்று நம்புவதோடு மட்டுமல்லாமல், இந்த கோட்பாடுகளுக்கு இணங்கியே இருக்கும் உலகத்தை விளக்க முயலுகிறது.

இலட்சியவாத கருத்தியல் கோட்பாடுகள், அகவய இலட்சியவாதம் மற்றும் புறவய இலட்சியவாதம் என இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.  மனித நனவு நிலையானது, இருக்கின்ற உலகத்தை உணர்வுகளின் தொகுப்பாக பார்க்கிறது என்ற உண்மையை தனது தொடக்கப்புள்ளியாக அகவய இலட்சியவாதம் எடுத்துக் கொள்கிறது. புறவய இலட்சியவாதமானது, புறவய நனவுநிலையின் இருப்பானது, ஒரு விதத்தில் மனிதர்களையும் மீறி அவர்களின் சார்பின்றியே வெளிப்படும் நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

சமூகவியல் பார்வையில், மனித ஆளுமைகள், குறிப்பாக நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகள் எவ்வாறு சமுதாயத்தை உருவாக்குகின்றன என்பதை இலட்சியவாதம் வலியுறுத்துகிறது.[1] ஒரு கற்பனையான கோட்பாடாக, அனைத்து உருப்பொருட்களும் மனதாலும் உணர்வாலும் உருவாக்கப்பட்டவையே என்பதாக இலட்சியவாதம் மேலும் உறுதியாகச் சொல்லிச் செல்கிறது. [2]மன நிலைக்கு முன்னுரிமை அளிப்பதில் தோல்வியுற்றிருக்கும் இயற்பியல் மற்றும் இரட்டைக் கருத்துக் கோட்பாடுகளை இலட்சியவாதம் நிராகரிக்கிறது.

இந்தியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளிலிருந்து மனத்தின் உந்துதலால் பெறப்பட்ட அனுபவங்கள் நிலவியதாக முந்தைய வாதங்கள் கூறுகின்றன. இந்தியாவில் இந்து மதச் சிந்தனையாளர்கள், கிரேக்க புதிய பிளேட்டோயியலாளர்கள் ஆகியோர் உண்மையியல் வாதத்தின் அடித்தளமாக எங்கும் நிறைந்த நனவு நிலையை கடவுள் மைய வாதங்கள் வழியாக முன்வைத்தனர்.[3]

இம்மானுவேல் காந்து தொடங்கி, செருமானிய கருத்தியலாளர்களான எகல், யோஃகான் ஃவிக்டெ, பிரீடரிக் ஷெல்லிங், மற்றும் ஆர்தர் சோபென்க்ஹாயர் ஆகியோர் 19ஆம்- நூற்றாண்டின் மெய்யியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த மரபானது, அனைத்து நிகழ்வுகளின் காரணமான மனம் சார்ந்த அல்லது இலட்சிய இயல்பே இலட்சியவாதக் கருத்தியல்களான பிரித்தானிய இலட்சியவாதத்திலிருந்து அறிவின் அடிப்படை வாதக் கோட்பாடு முதல் இருத்தலியல் வரையிலான பிறப்பினைக் கொடுத்தது என்பதை வலியுறுத்தியது. மார்க்சிசம், நடைமுறைவாதம் மற்றும் நேர்மறைவாதம் போன்ற மனோதத்துவ அனுமானங்களை நிராகரித்த கருத்தியல்வாதங்களிலும் கூட இந்த இலட்சியவாதத்தின் வரலாற்று செல்வாக்கு மையமாக உள்ளது.

வரையறை[தொகு]

இலட்சியவாதம்என்பது பல தொடர்புடைய பொருட்களைக் கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு என்ற பொருளைத் தரக்கூடிய idein (ἰδεῖν) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும். இந்த வார்த்தை ஆங்கிலத்தில் 1743 ஆம் ஆண்டு உள் நுழைந்துள்ளது.[4] சாதாரண பயன்பாட்டில், உட்ரோ வில்சனின் அரசியல் கருத்துவாதம் பற்றி பேசும் போது, அது பொதுவாக உறுதிப்பாடான இயல்புத்தன்மையின் மீது நல்லியல்புகள், கொள்கைகள், மதிப்புகள், மற்றும் இலக்குகள் ஆகியவற்றின் முன்னுரிமைகளை சுட்டிக்காட்டுகிறது. நடைமுறைவாதத்தை அனுசரிப்பவர்களைப் போல் உலகம் தற்போது இருக்கும் நிலையைக் குறித்து கருத்தைச் செலுத்தாமல், இலட்சியவாத கருத்தியலாளர்கள் உலகம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற நோக்கில் உலகைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.கலையியலில், இதே போன்று, இலட்சியவாதமானது, கற்பனையையும், அழகின் மனவியல் கருத்துரு, பூரணத்துவத்திற்கான தரம், அடுத்தடுத்ததாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள அழகியல் சார்ந்த இயற்கையியல் மற்றும் இயல்பியல் ஆகியவற்றை உணர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.[5][6]


மேற்கோள்கள்[தொகு]

  1. Macionis, John J. (2012). Sociology 14th Edition. Boston: Pearson. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-205-11671-3. 
  2. https://www.britannica.com/topic/idealism
  3. Kant, Immanuel (2007), "Introduction", Critique of Pure Reason, Palgrave Macmillan UK: 41–62, ISBN 9780230013384
  4. "idealism, n. : Oxford English Dictionary".
  5. "Idealism - Define Idealism at Dictionary.com". Dictionary.com.
  6. "Idealism - Definition of Idealism by Merriam-Webster".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சியவாதம்&oldid=2530393" இலிருந்து மீள்விக்கப்பட்டது