இரூபினா குரேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரூபினா குரேசி
பிறப்புஆயிஷா ஷேக்
1940 அக்டோபர் 19
ஐதராபாத், பாக்கித்தான்
பணிநாட்டார் பாடல்
செயற்பாட்டுக்
காலம்
1960s– 1990s
விருதுகள்
  • காலேந்தர் ஷாபாஸ் விருது
  • குவாஜா குலாம் பரீத் விருது,
  • பாக்கித்தான் ஐதரபாத் வானொலி விருது

இரூபினா குரேசி (Rubina Qureshi) ( பிறப்பு: 19 அக்டோபர் 1940) பாக்கித்தானின் முன்னணி சிந்தி பாரம்பரியப் பாடகர்களில் ஒருவராவார். 1960கள் முதல் 1990கள் வரையிலான காலகட்டத்தில் இவர் மிகவும் பிரபலமாக இருந்தார். பாக்கித்தானின் ஐதராபாத் வானொலியால், அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பகால சிந்தி பெண் பாடகர்களில் இவரும் ஒருவர். இவர் பெரும்பாலும் சுஃபி இசைப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், இவர் "சிந்துவின் குயில்" எனவும், "சிந்துவின் புல்புல்" (கொண்டைக்குருவி) எனவும் பிரபலமாக அறியப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இரூபினா 1940 அக்டோபர் 19 அன்று பாக்கித்தானின் ஐதராபாத்தில் பிறந்தார். [1] இவரது உண்மையான பெயர் ஆயிஷா ஷேக் என்பதாகும். இவரது தந்தையின் பெயர் இல்லாஹி பக்ஸ் ஷேக். இவர் ஒரு பொதுவான பாடகரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றாலும், இவரது சகோதரர் அப்துல் கபூர் ஷேக் உள்ளூர் பாடகராவார். இவர் ஒரு ஆரம்ப பள்ளியில் படிக்கும் போது பள்ளிச் செயல்பாடுகளிலும் நிகழ்வுகளிலும் பாடத் தொடங்கினார். புகழ்பெற்ற கல்வியாளரும் இசைக்கலைஞருமான டாடி லீலாவதி இவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார். [2]

வானொலியில் அறிமுகம்[தொகு]

1955 ஆகத்து 17இல், பாக்கித்தானின் ஐதராபாத் வானொலி நிறுவப்பட்டது. [3] புதிதாக நிறுவப்பட்ட இந்த வானொலி நிலையத்தின் நிர்வாகம் ஐதராபாத்தின் அனைத்து முக்கிய பள்ளிகளுக்கும் திறமையான சிறுவர் சிறுமிகளை வானொலியில் அறிமுகப்படுத்துவதற்காக கடிதம் எழுதியது. இவர் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, வானொலியில் குழந்தை பாடகியாக பாடினார். பிரபல ஒலிபரப்பாளர் எம்.பி. அன்சாரி என்பவரும் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் பாடகருமான முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். வானொலியில் பதிவுசெய்யப்பட்ட இவரது முதல் சிந்தி பாடல் "பரேன் பாவடி சான், சாவண்டி சான், ரஹி வாஜ் எலி பன்போர் மென்". இந்த பாடல் மிகவும் பிரபலமானது. மேலும் இவர் சிந்து முழுவதும் பிரபலமடைந்தார். தனது பாடும் வாழ்க்கையுடன், சிந்து பல்கலைக்கழகத்தில் படித்து, முஸ்லிம் வரலாற்றில் முதுநிலை கலைப் பட்டம் பெற்றார். 1967-68ல் ஐதராபாத் ஹிமாத்-உல்-இஸ்லாம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.

பங்களிப்புகள்[தொகு]

பாக்கித்தான் ஐதராபாத் வானொலி, புகழ்பெற்ற கவிஞர்களான ஷா அப்துல் லத்தீப் பிதாய், சச்சல் சர்மாஸ்ட், புதால் பாகிர், மந்தர் ஃபாகிர் உட்பட நூற்றுக்கணக்கான சூஃபி கவிஞர்களின் பாடல்களை இவரது குரலில் பதிவு செய்தது. இவர் தனது சக பாடகர்களான ஜரினா பலோச், அமினா, செப்-உன்-நிசா ஆகியோருடன் "சஹேரா" என்ற பல திருமண பாடல்களையும் பாடினார். இந்த சஹேராக்கள் சிந்து முழுவதிலும் இன்றும் பிரபலமாக உள்ளன. கூங்ஹாட் லா குன்வார்,சாசி புன்ஹூன் உள்ளிட்ட சில சிந்தி படங்களின் பாடல்களையும் பாடியுள்ளார். [4] 1970இல் பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் முஸ்தபா குரேஷியுடனான இவரது திருமணத்திற்குப் பிறகு, இவர் தனது கணவருடன் லாகூருக்கு மாறினார். லாகூரில் இவர் உஸ்தாத் சோட்டே குலாம் அலியிடமிருந்து இசைப் பாடங்களைப் பெற்றார். லாகூரில், உருது, பஞ்சாபி, சராய்கி, பஷ்தூ, பங்காலி மொழிகளிலும் பாடினார். இந்தோனேசியா, சீனா, துருக்கி, இந்தியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், போன்ற நாடுகளிலும் இவர் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார் [5]

இவர், ஒரு சமூக சேவகரும் ஆவார். பாக்கித்தானின் கண்பார்வையற்றவர்கள் நலச் சங்கத்தில் (பெண்கள் பிரிவு) இவர் ஒரு முக்கியப் பங்கினை வகித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

சூஃபி இசைக்காக இவர் செய்த சேவைகளுக்கான அங்கீகாரமாக, இவருக்கு "கலேந்தர் ஷாபாஸ்" , "குவாஜா குலாம் பரீத்" போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. பாக்கித்தான் ஐதராபாத்து வானொலியிலிருந்தும் (2012) விருது பெற்றுள்ளார். [6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரூபினா_குரேசி&oldid=3544342" இருந்து மீள்விக்கப்பட்டது