இரத்தநாள விரிவூக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரத்தநாள விரிவூக்கி என்பது இரத்த நாளங்களின் உட்புற சுவரின் அளவை விரிவாக்கும் செயல் ஆகும். இந்த இரத்தநாள விரிவூக்கிகளானவை இரத்த நாளத்தின் உட்புறச் சுவரின் தசைகளைத் தளரச்செய்து அவற்றினை இளகுவாக்கி விரிவுத்தன்மையை அதிகரிக்க கூடியவை ஆகும். குறிப்பாக அவை பெரிய இரத்த நாளங்களிலும் குறு இரத்த நாளங்களிலும் இரத்த ஓட்டத்தை ஊக்கப்படுத்த வல்லவை. ஆங்கிலத்தில் இது வாஸோடயலேசன் (Vasodilation) என்று அழைக்கப்படுகிறது. இது வாஸொகான்ட்ரிக்சன் (Vasocontriction) எனப்படும் இரத்தநாள தடைக்கு எதிர்மறையான செயல்ஆகும்.[1][2][3]

இரத்தநாள விரிவூக்கியின் செயல் காரணமாக இரத்த நாளத்தில் உராய்வு குறைந்து இரத்தம் ஓடுவதற்கு தேவையான அதிகப்படியான இடவசதி கிடைப்பதால் இரத்த நாளங்களில் பாயும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக நோயாளியின் இரத்த அழுத்தம் குறைகிறது. வாஸோடயலசன் (Vasodialation) நிகழ்வை ஊக்கப்படுத்தகூடிய மருந்துகளை வாஸோடயலேட்டர் (Vasodialators) என்று அழைக்கலாம்.

செயல்பாடு[தொகு]

உடலில் எந்தத் திசுக்களுக்குக் குருதி அதிகப்படியாகத் தேவைப்படுகிறதோ அங்குள்ள இரத்தநாளத்தின் அளவை விரிவுபடுத்துவதால் அந்த குறிப்பிட்ட திசுக்களுக்குச் செல்லும் குருதி ஓட்டத்தை அதிகப்படுத்த இயலும். இவ்வாறாகக் குருதி ஓட்டத்தினை அதிகப்படுத்துவதினால் அந்தத் திசுக்களுக்குக் கிடைக்கும் பிராணவாயு, புரதம், உயிர்ச்சத்து மற்றும் குளுக்கோஸ் போன்ற இன்றியமையாத சத்துக்களின் அளவும் அதிகபடுத்தப்படுகிறது. இவ்வாறாக அதிகப்படுத்தப்படும் குருதி ஓட்டத்தின் காரணமாக குருதி நுழைவதற்குச் சிரமமான நுண் குருதி தந்துகிகளுக்கு இன்னும் அதிகமான குருதி ஓட்டம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக உடலில் ஒரு இடத்தில் காயம் பட்டிருப்பின் அந்த காயத்தினைச் சுற்றியுள்ள உயிரணுக்கள் மீண்டெழுவதற்கு அவற்றிற்கு பிராணவாயு மற்றும் சத்துகள் அவசியமாகிறது. இந்த வாஸோடயலேஷன் என்னும் குருதி நாள விரிவூக்கிச் செயல் மூலமாக இவ்வாறான காயத்தினை சுற்றியுள்ள திசுக்களுக்கு அதிகப்படியாக சத்துக்களை வழங்க முடிவதால் அவை வழக்கமானதை விட சற்று அதிகப்படியான வேகத்தில் மீண்டெழுகின்றன இதனால் காயம் விரைவாகக் குணப்படுகிறது. இதுவே இரத்த நாள விரிவூக்கியின் முக்கிய செயல்பாடாகும்.

உடலில் வாஸொகான்ட்ரிக்சன் (Vasocontriction) எனும் இரத்த நாள குறுக்கத்தின் காரணமாக இரத்த ஓட்டத்தின் தடை அதிகப்படுவதால் இருதயமானது அதிகப்படியான அழுத்தத்துடன் செயல்பட்டு இரத்தத்தினைத் திசுக்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக ஹைப்பர் டென்ஷன் என்றழைக்கப்படும் அதிக இரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட நேரிடுகிறது. எனவே இவ்வாறாக அதிக இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இந்த இரத்த நாள விரிவூக்கியின் மூலம் இரத்த நாளங்களில் ஏற்படும் உராய்வைக் குறைப்பதால் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்த முடிகிறது. இதனால் இந்நோயாளிகளின் இருதயத்திற்கு ஏற்படும் அதிகப்படியான வேலைப்பளுவைக் குறைக்க முடியும்.

இரத்தநாள விரிவூக்கி மற்றும் தமனி இரத்த ஓட்டத்தடை[தொகு]

இதய வெளியேற்றவளவு (Cardiac Output) சராசரி தமனி இரத்த அழுத்தம் மற்றும் அனைத்துபுற இரத்தநாளத்தடை (Total Peripheral Resistance - TPR) ஆகியவற்றின் மீது இரத்தநாள விரிவூக்கியின் செயல்பாடு நேரடியானதாக இருக்கின்றது. இருதய துடிப்பின் பொழுது இருதய ஸிஸ்டால் (Systole) மற்றும் டயஸ்டால் (Diastole) எனப்படும் இருவகையான இரத்தநாள அழுத்த ஒலி வெளிபாடுகள் கிடைக்கிறன. இதயசுருக்கத்தின் பொழுது ஸிஸ்டால் (Systole) எனப்படும் இதயசுருக்க சித்தொலியும் இதயவிரிவின் பொழுது டையஸ்டால் (Diastole) எனப்படும் இதயவிரிவு தயத்தொலியும் கிடைக்கிறது. இதில் வாஸோடயலேசன் (Vasodialation) எனும் இரத்தவிரிவூக்கியானது ஸிஸ்டால் எனும் சித்தொலியின் நேரப்பகுதியிலும் வாஸோகான்ரிக்சன் (Vasocontriction) எனும் இரத்த ஓட்டத்தடையானது டையஸ்டால் எனும் தயத்தொலியின் நேரப்பகுதியிலும் கிடைக்கிறது. இதய வெளியேற்றவளவு (ஒரு அலகு மணித்துளியில் ஏற்படும் இரத்த ஓட்ட அளவு - Cardiac Output) என்பது ஒரு நிமிடத்தில் உண்டாகும் இதயத்துடிப்புடன் (Heart Rate - Beats Per Minute) ஸிஸ்டால் எனும் சித்தொலியின் பொழுது இதயகீழறையில் இருந்து வெளிப்படும் (Ventricular Ejaculation) இரத்த கொள்ளளவுடன் பெருக்கி கண்டுபிடிக்கப்படுகிறது.

அனைத்துபுற இரத்தநாள தடையானது (TPR) இரத்த நாளத்தின் நீளம், குருதியின் பாகுத்தன்மை மற்றும் இரத்த நாளத்தின் சுற்றளவு ஆகியவற்றை சாந்துள்ளது. வாஸோடயலேசன் எனும் இரத்தநாள விரிவூக்கியானது பெரிய இரத்த நாளம், குறு இரத்த தந்துகி ஆகியவற்றின் தசை உயிரணுக்களை தளர்வடைய செய்வதின் மூலம் அனைத்துபுற இரத்தநாள தடை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த நாள விரிவூக்கியானது வெப்ப இரத்த பிராணிகளின் வாழுமிட வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும் பொழுது அவற்றின் மேலோட்டமான இரத்த நாளங்களில் ஏற்படுகிறது. இந்த செயல்பாடானது வெப்பமடைந்த குருதியினை அந்த பிராணிகளின் தோலுக்கு அனுப்புகிறது இதனால் அவற்றின் உடல் வெப்பம் எளிதாக வெளியேற்றப்பட்டு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Definition of Vasodilation". MedicineNet.com. 27 April 2011. https://web.archive.org/web/20120105174629/http://www.medterms.com/script/main/art.asp?articlekey=5965 from the original on 5 January 2012. பார்க்கப்பட்ட நாள் 13 January 2012. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. Costa, F; Biaggioni, I (May 1998). "Role of nitric oxide in adenosine-induced vasodilation in humans.". Hypertension 31 (5): 1061–4. doi:10.1161/01.HYP.31.5.1061. பப்மெட்:9576114. https://archive.org/details/sim_hypertension_1998-05_31_5/page/1061. 
  3. "Mechanism of vasodilation to adenosine in coronary arterioles from patients with heart disease". American Journal of Physiology. Heart and Circulatory Physiology 288 (4): H1633–40. April 2005. doi:10.1152/ajpheart.00575.2004. பப்மெட்:15772334. https://semanticscholar.org/paper/0673146aac17aac49d0ff065f254cda412e7b2f1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தநாள_விரிவூக்கி&oldid=3780063" இலிருந்து மீள்விக்கப்பட்டது