இந்திய அரசு சட்டம் 1858

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய அரசு சட்டம் 1858[1]
நீளமான தலைப்புமேம்பட்ட இந்திய அரசாங்கத்திற்கான சட்டம்.
அதிகாரம்21 & 22 Vict. c. 106
நாட்கள்
அரச ஒப்புமை2 ஆகத்து 1858
அமலாக்கம்1 நவம்பர் 1858
மற்ற சட்டங்கள்
தொடர்புடைய சட்டம்
நிலை:

இந்திய அரசாங்கச் சட்டம் 1858 (Government of India Act 1858) என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும். இது 1858 ஆகத்து இரண்டாம் நாள் நிறைவேற்றப்பட்டது. இதன் விதிகளானது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (அதுவரை நாடாளுமன்றத்தின் மேற்பார்வையில் பிரித்தானிய இந்தியாவை ஆண்டது) கலைக்கப்பட வேண்டும். அதன் செயல்பாடுகளை பிரித்தானிய அரசியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதாகும். [2] இங்கிலாந்தின் அப்போதைய தலைமை அமைச்சர் லார்ட் பால்மர்ஸ்டன், இந்திய அரசாங்கத்தின் அப்போதைய அமைப்பில் இருந்த மோசமான குறைபாடுகளைக் குறிப்பிடும் வகையில், கிழக்கிந்திய நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இங்கிலாந்து அரசிக்கு மாற்றுவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தினார். இருப்பினும், இந்த மசோதாவை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, பால்மர்ஸ்டன் வேறொரு சிக்கலினால் பதவி விலக வேண்டிய நிலைக்கு ஆளானார். பின்னர் டெர்பியின் 15வது ஏர்ல் எட்வர்ட் ஸ்டான்லி (பின்னர் இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை செயலாளராக ஆனார்) மற்றொரு மசோதாவை அறிமுகப்படுத்தினார், இது முதலில் "இந்தியாவின் சிறந்த நிர்வாகத்திற்கான சட்டம்" என்று அழைக்கப்பட்டது. இது 1858 ஆகத்து இரண்டாம் நாள் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் இந்தியாவை நேரடியாகவும் அரசியின் பெயரால் ஆளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது.

வரலாறு[தொகு]

நவம்பர் 1, 1858 அன்று விக்டோரியா மகாராணியால் வெளியிடப்பட்ட "இந்தியாவின் (சமஸ்தான) இளவரசர்கள், தலைவர்கள் மற்றும் மக்களுக்கு" பிரகடனம் என்னும் விக்டோரியா அரசியின் பேரறிக்கை.

1857 ஆம் ஆண்டுய இந்தியக் கிளர்ச்சியே பிரித்தானிய அரசாங்கம் இச்சட்டத்தை நிறைவேற்ற கட்டாயப்படுத்தியது[சான்று தேவை]. விக்டோரியா அரசியின் பேரறிக்கையின் ("இளவரசர்கள், தலைவர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு" என்ற பிரகடனம்) தொடர்ச்சியாக இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அவ்வறிக்கையில் இந்திய மக்களுக்குக் கீழ்வரும் உறுதிமொழிகள் கூறப்பட்டன : "நீதிவழுவாது அரசாங்கத்தை ஒழுங்குபட நடத்துவது, சமய விசயத்தில் நடு நிலைமையை மேற்கொள்ளுவது, போர் புரியவோ, இராச்சியத்தின் பரப்பைப் பெருக்கவோ நோக்கமின்றி, அரசாங்கத்தார் நாட்டு அரசர்களின் நிலையைச் சீர்குலைக்காமல் ஆதரிப்பது, அவர்களுக்குக் கம்பெனியார் அளித்திருக்கும் வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் காப்பாற்றுவது, இந்தியக் குடிகளுக்கு சமயம், வகுப்பு, இனம் இவ்வித வேற்றுமைகளைக் கருதாமல், அவர்களுடைய கல்வி, திறமை, உண்மையான நடத்தை முதலியவற்றை மட்டிலும் சீர்தூக்கி நாட்டு அலுவல்களில் நியமிப்பது, குடிகளின் நன்மையை நாடி இந்திய நாட்டின் கைத்தொழில்களைப் பெருக்குவது, பொது நன்மைக்கான பல நற்காரியங்களில் ஈடுபடுவது" ஆகியவைகளாம். [3]

மசோதாவின் விதிகள்[தொகு]

  • பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தன் கட்டுப்பாட்டிலை வைத்துள்ள இந்தியப் பகுதிகளை அரசியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். நிறுவனம் இந்தப் பிரதேசங்கள் மீது செலுத்தும் அதிகாரம் நிறுத்தப்படுகிறது. அரசியின் பெயரில் இந்தியா ஆட்சி செய்யப்படும்.
  • நிறுவனத்தின் இயக்குநர்கள் பேரவையின் அதிகாரங்களையும் கடமைகளையும் அரசியின் முதன்மை அரசு செயலாளர் ஏற்கிறார். இந்திய அரசு செயலருக்கு உதவ பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது. குழு இந்திய விவகாரங்களில் ஆலோசனைக் குழுவாக மாற்றப்படுகிறது. பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அனைத்து தகவல்தொடர்புகளுக்கும், வெளியுறவுத்துறை செயலாளர் வழியாகவே நடக்கும்.
  • குழுவைக் கலந்தாலோசிக்காமல் நேரடியாக இந்தியாவுக்கு சில இரகசிய பரிமாற்றங்களைச் செய்ய இந்திய வெளியுறவுச் செயலருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவர் தனது குழுவில் சிறப்புக் குழுக்களை அமைக்கவும் அதிகாரம் பெற்றவராவாராவார்.
  • தலைமை ஆளுநரையும், இராசதானிகளின் ஆளுநர்களையும் நியமிக்க அரசிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
  • அரசு செயலாளரின் கட்டுப்பாட்டில் இந்தியக் குடிமைப் பணி உருவாக்கப்படவேண்டும்.
  • இதன் மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் அனைத்து சொத்துக்களும் அரசின் வசம் மாற்றப்படுகிறது. ஒப்பந்தங்கள், மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்புகளையும் அரசி ஏற்றுக்கொள்கிறார். [4]

இந்தச் சட்டம் இந்திய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் கம்பெனி ஆட்சியை முடிவைக் கொண்டு வந்தது. புதிதாக உருவான இந்த பிரித்தானிய இந்திய அரசு சகாப்தம் 1947 ஆகத்தில் நடந்த இந்தியப் பிரிவினை வரை நீடித்தது. 1947 ஆகத்தில் இந்தியப் பிரதேசமானது பாக்கித்தான் மேலாட்சி அரசு மற்றும் இந்திய மேலாட்சி அரசு என இரண்டு மேலாட்சி அரசுகளாக அந்தஸ்து வழங்கப்பட்டது. [4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. This short title was conferred on the Act by the Short Titles Act 1896, s. 1
  2. Wolpert, Stanley (1989). A New History of India (3d ed.), pp. 239–240. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-505637-X.
  3. அரசி பேரறிக்கை குறித்த கட்டுரை தமிழ்க் கலைக்களஞ்சியம், முதல் தொகுதி
  4. 4.0 4.1 "Official, India". 1890–1923. பார்க்கப்பட்ட நாள் 30 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_அரசு_சட்டம்_1858&oldid=3940048" இலிருந்து மீள்விக்கப்பட்டது