இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு உறுப்பினர்கள்[1]

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் 29 ஆகஸ்டு 1947 அன்று நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, 7 பேர் கொண்ட இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவை (Drafting Committee of Indian Constitution)நியமித்தது. பெனகல் நரசிங் ராவ் வரைவுக் குழுவிற்கு ஆலோசகராக இருந்தார். வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் மற்றும் 6 உறுப்பினர்கள் செயல்பட்டனர்.[2][3] இக்குழு வரைந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 22 பகுதிகளில் 395 பிரிவுகளும், 8 அட்டவணைகளும் கொண்டிருந்தது.

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. அம்பேத்கர் - தலைவர், அரசியலமைப்பு வரைவுக் குழு
  2. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
  3. என். கோபாலசாமி அய்யங்கார்
  4. கே. எம். முன்ஷி
  5. சையத் முகமது சாதுல்லா
  6. மாதவ ராவ் (பி. எல். மித்தர் உடல்நலக் குறைவால் விலகியதால், அப்பணியிடத்தில்)
  7. டி. டி. கிருஷ்ணமாச்சாரி (1948ல் டி. பி. கைத்தான் இறந்ததால், அப்பணியிடத்தில்)

வரைவுக் குழுவின் பொதுவான நோக்கம்[தொகு]

மத்திய அரசின் அதிகாரங்கள், மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் பகுதிகள் போன்றவைகளை ஆலோசித்து முடிவு எடுத்தல்

வரைவு குழுவின் பணிகள்[தொகு]

வரைவுக் குழு, பல்வேறு அரசியல அமைப்புக் குழுக்களின் முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்பின் முதல் வரைவைத் தயாரித்து 21 பிப்ரவரி 1948 அன்று இந்திய பொதுமக்களின் ஆலோசனைகளுக்காக வெளியிட்டது. வரைவை விவாதிக்கவும், திருத்தங்களை முன்மொழியவும் இந்திய மக்களுக்கு எட்டு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் பரிந்துரைகளின் வெளிச்சத்தில், வரைவுக் குழு தனது இரண்டாவது வரைவைத் தயாரித்தது. இது அக்டோபர் 1948ல் வெளியிடப்பட்டது.

1947ல் வரைவுக் குழு நிறுவப்பட்டதிலிருந்து இந்திய அரசியலமைப்பை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் எடுத்தது.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் 165 நாட்களில் சுமார் 11 அமர்வுகளில், 114 நாட்கள் வரைவுக் குழு மற்றும் வரைவு அரசியலமைப்பின் விவாதங்களுக்கு செலவிடப்பட்டது.

அரசியலமைப்பின் இறுதி வரைவு[தொகு]

அரசியலமைப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தி மற்றும் ஆங்கில மொழிகளின் இந்திய அரசியலமைப்பில் கையெழுத்திட்டுள்ளனர். அசல் அரசியலமைப்பின் இறுதி வரைவு புத்தகம் பிரேம் பிகாரி நரேன் ரைசாடா என்பவரால் கையால் எழுதப்பட்டது. ஒவ்வொரு பக்கமும் பியோஹர் ராம்மனோகர் சின்ஹா மற்றும் நந்தலால் போஸ் உள்ளிட்ட சாந்திநிகேதனைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு புத்தகம் முதன்முதலில் தேராதூனில் வெளியிடப்பட்டது மற்றும் இந்திய நில அளவைத் துறையால் போட்டோலித்தோகிராபி செய்யப்பட்டது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்[தொகு]

இக்குழுவினரால் தொகுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவம் 24 சனவரி 1950ல் நடைபெற்ற பனிரெண்டாவது இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் கூட்டத் தொடரில், நான்கில் மூன்று பகுதிக்கு மேற்பட்ட உறுப்பினர்களால் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், 26 ஜனவரி 1950 அன்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. எனவே ஆண்டுதோறும் 26, சனவரி நாளை குடியரசு நாளாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]