இந்தியக் கள்ளிப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் கள்ளிப்புறா

இந்தியக் கள்ளிப்புறா (உயிரியல் பெயர்: Stigmatopelia senegalensis cambayensis) என்பது கள்ளிப்புறாவின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை கிழக்கு அரேபியா மற்றும் கிழக்கு ஈரான் முதல் பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம் வரை காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மைனா அளவுள்ள இப்பறவை சுமார் 27 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பாகவும், கால்கள் ஊதா தோய்ந்த சிவப்பாகவும் இருக்கும். இதன் உடலின் மேல் தோற்றம் இளஞ் சிவப்பும் சாம்பல் பழுப்புமாக இருக்கும். கலை, கழுத்து என இருண்டும் நல்ல இளஞ்சிவப்பாக இருக்கும். முன் கழுத்தின் கீழ் கருப்பும், கருஞ்சிவப்புமான சிறு சிறு புள்ளிகளைக் காணலாம். இவை தோற்றத்தில் சதுரங்க பலகையின் கட்ட அமைப்பை ஒத்து இருக்கும். மார்பு இளஞ்சிவப்பு கலந்த பழுப்பாகவும் உடலின் பிற அடிப்பகுதிகள் வெண்மையாகவும் இருக்கும்.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

இப்பறவை கிழக்கு அரேபியா மற்றும் கிழக்கு ஈரான் முதல் பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம் வரையும் தென்னிந்தியா முழுக்க காணப்படுகிறது. இவை இலையுதிர் காடுகளைச் சார்ந்த கல்லும் முல்லும் நிறைந்த சிறு காடுகளை வாழ்விடமாக கொண்டுள்ளது. மலைகளில் 1500 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது.[2]

நடத்தை[தொகு]

இதன் பழக்க வழக்கங்கள் ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறாவை ஒத்துள்ளன. தானியங்களே இதன் முதன்மை உணவாகும். இது கோ...க்ரூஉ...க்ரூஉ...க்ரூஊரூஉ என்றோ க்ரோஓ.. டூஉ...டூஉ என்றோ மென்மையாக கத்தும். இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன என்றாலும் குறிப்பாக சனவரி முதல் அக்டோபர் வரை பொதுவாக இனப்பெருக்கம் செய்கின்றன. சிறு குச்சிகள், புல் ஆகியவற்றைக் கொண்டு புதர்கள், வாட்டுத் தாழ்வாரங்கள், சிறு மரங்கள் ஆகியவற்றின் மீது கூடு அமைக்கும். வெண்மையான இரு முட்டைகள் இடும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 9 March 2020.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 223. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கள்ளிப்புறா&oldid=3850527" இலிருந்து மீள்விக்கப்பட்டது