ஆபிரகாம் மாசுலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபிரகாம் மாசுலோ
பிறப்பு ஏப்ரல்1, 1908
புரூக்ளின், நியூயார்க் நகரம், நியூயார்க் மாகாணம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புசூன் 8, 1970(1970-06-08) (அகவை 62)
மென்லோ பார்க், கலிபோர்னியா, கலிபோர்னியா, அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஉளவியல்
நிறுவனம்கோர்னெல் பல்கலைக்கழகம்
புரூக்ளின் கல்லூரி
பிராண்டிஸ் பல்கலைக்கழகம்
Alma materவிஸ்கான்சின்–மடிசன் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்ஆரி ஆர்லோவ்
அறியப்பட்டதுமாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு

ஆபிரகாம் அரால்ட் மாசுலோ (Abraham Harold Maslow) (/ˈmæzl//ˈmæzl/; April 1, 1908 – June 8, 1970) ஒரு அமெரிக்க உளவியலாளர் ஆவார். இவர் மாசுலோவின் தேவை படியமைப்புக் கோட்பாட்டிற்காக நன்கறியப்பட்டவர் ஆவார். மாசுலோ உளவியல் நலம் சார்ந்த மனிதனின் உள்ளார்ந்த தேவைகளை நிறைவு செய்வதற்கான முன்னுரிமையை வரிசைப் படுத்தியதோடு தன்திறல் அடைவுத் தேவையை உச்சத்தில் வைத்தார்.[1] மாஸ்லோ, அலையண்ட் சர்வதேச பல்கலைக்கழகம், பிராண்டிஸ் பல்கலைக்கழகம், புரூக்ளின் கல்லூரி, சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உளவியல் பேராசிரியராக இருந்தார். மக்களிடையே நேர்மறையான குணநலன்களை மையப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மக்கள் "அறிகுறிகளின் பை" போன்று நடத்தப்படுவதை எதிர்த்தார்.[2] பொது உளவியல் குறித்த பார்வை என்ற காலாண்டு இதழ் 2002 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வொன்றில் 20 ஆம் நூற்றாண்டில் அதிகம் குறிப்பிடப்பட்ட உளவியலாளர்கள் வரிசையில் மாஸ்லோ 10 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாகத் தரப்படுத்தியுள்ளது.[3]

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

ஆபிரகாம் மாசுலோ, 1908, ஏப்ரல் 1- ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சாமுவேல் மாசுலோ மற்றும் ரோசு மாசுலோ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[4] அங்கு அவர் ருஷ்யாவிலிருந்து குடியேறிய யூத பெற்றோருக்கு ஏழு குழந்தைகளில் முதலாவது குழந்தையாக வளர்ந்தார். மாசுலோ அவரது இளமைப் பருவத்தை மகிழ்ச்சியற்றதாகவும், தனிமை நிறைந்ததாகவும் விவரித்துள்ளார். மேலும், அவர் தனக்குக் கிடைத்த நேரத்தில் அதிகமான பொழுதை நூலகங்களில் புத்தகங்களில் மூழ்கிக்கிடப்பதிலேயே கழித்தார்.[5] அவர் தனது உயர்நிலைப் பள்ளியில் பல மன்றங்களில் உறுப்பினராக இருந்தார். அவர் பள்ளியிலிருந்து வெளியிடப்பட்ட இலத்தீன் இதழின் தொகுப்புப் பணியையும், பள்ளியின் இயற்பியல் கட்டுரைகள் தொகுப்புப் பணியையும் ஓராண்டுக்கு கவனித்துக் கொண்டார். அவர் நியூயார்க் சிட்டி கல்லூரிக்குச் சென்றதோடு, மாலையில் சட்ட வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். சட்டப்படிப்பு தனக்கானது இல்லை என்பதை உணர்ந்த அவர் விரைவில் அதிலிருந்து வெளியேறினார். பின்னர் அவர் உளவியலைப் படிப்பதற்காக விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு அவரது கல்வியானது, பரிசோதனை நடத்தையியலாக இருந்தது. நடத்தையியல் குறித்த தனது அனுபவத்தால் அவர் ஒரு வலுவான நேர்மறை மனப்போக்கை உருவாக்கினார். அவர் 1931 ஆம் ஆண்டில் உளவியலில் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[4]

தொழில் வாழ்க்கை[தொகு]

அவர் 1937 ஆம் ஆண்டில் புரூக்ளின் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார், 1951 வரை அங்கு பணியாற்றினார். அமெரிக்க ஐக்கிய நாடுகள் இரண்டாம் உலகப் போரில் 1941 ஆம் ஆண்டில் நுழைந்த போது, மாசுலோ தனது வயதின் காரணமாக இராணுவத்திற்கு தகுதியற்றவராக இருந்தார். இருப்பினும், போரின் கொடூரங்கள் சமாதானத்தின் பார்வைக்கு உத்வேகம் அளித்ததோடு, அவரது உளவியல் கருத்துக்களைப் பாதித்ததுடன், மனித நேய உளவியல் என்ற உளவியலின் பிரிவை வளர்த்தெடுக்க உதவியது. அவரது இரு ஆலோசனையாளர்களான, உளவியலாளர் மேக்சு வெர்திமர் மற்றும் மானுடவியலாளர் ரூத் பெனடிக்ட் ஆகியோரால் ஆழமான தாக்கத்திற்குள்ளானார். அவர்களது நடத்தையே மன நலம் மற்றும் மனித ஆற்றல் குறித்த அவரது ஆய்வின் அடித்தளமாக இருந்தது. 1943 ஆம் ஆண்டில் தனது மனிதத் தேவைகளின் படிவரிசைக் கோட்பாட்டை, உளவியல் பார்வை என்ற இதழில் மனித ஊக்குவிப்பின் கோட்பாடு என்ற ஆய்வறிக்கையில் முன்மொழிந்திருந்தார். இந்தக் கோட்பாடு 1954 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரது 'ஊக்குவிப்பும் ஆளுமையும்' என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Abraham Maslow, Founder Of Humanistic Psychology, Dies". த நியூயார்க் டைம்ஸ். June 10, 1970. https://select.nytimes.com/gst/abstract.html?res=F40910FD3955127B93C2A8178DD85F448785F9. பார்த்த நாள்: 2010-09-26. "Dr. Abraham Maslow, professor of psychology at Brandeis University in Waltham, Mass., and founder of what has come to be known as humanistic psychology, died of a heart attack. He was 62 years old." 
  2. Hoffmann (1988), p. 109.
  3. Haggbloom, Steven J.; Warnick, Renee; Warnick, Jason E.; Jones, Vinessa K.; Yarbrough, Gary L.; Russell, Tenea M.; Borecky, Chris M.; McGahhey, Reagan et al. (2002). "The 100 most eminent psychologists of the 20th century". Review of General Psychology 6 (2): 139–152. doi:10.1037/1089-2680.6.2.139. http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx. 
  4. 4.0 4.1 4.2 https://www.thefamouspeople.com/profiles/abraham-harold-maslow-610.php
  5. https://www.verywellmind.com/biography-of-abraham-maslow-1908-1970-2795524
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரகாம்_மாசுலோ&oldid=2938147" இலிருந்து மீள்விக்கப்பட்டது