ஆனந்தி கோபால் ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனந்தி கோபால் ஜோஷி
Anandibai gopalrao joshi.jpg
ஆனந்தி கோபால் ஜோஷியின் புகைப்படம் அவரது கையெழுத்துடன்
பிறப்புமார்ச்சு 31, 1865(1865-03-31)
புனே, மகாராஷ்டிரா
இறப்புபெப்ரவரி 26, 1887(1887-02-26) (அகவை 21)
வாழ்க்கைத்
துணை
கோபால்ராவ் ஜோஷி

ஆனந்தி கோபால் ஜோஷி (அல்லது ஆனந்திபாய் ஜோஷி) (பி. மார்ச் 31, 1865 – இ. பெப்ரவரி 26, 1887) ஐரோப்பிய மருத்துவத்தில் முதலாவதாகப் பட்டம் பெற்ற இரு இந்தியப் பெண்களில் இவர் ஒருவர். மற்றொருவர் கடம்பினி கங்கூலி.[1] அப்பட்டம் பெற்ற முதல் இந்துப் பெண்மணி இவர்தான்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திபாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷிக்கும் திருமணம் நடந்தபோது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி இவரைவிட 20 வயது மூத்தவர். கோபால்ராவ் ஜோஷி கல்யாணில் அஞ்சல் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். கொஞ்சகாலஞ்சென்று ஜோஷி அலிபாக்கிற்கும் அடுத்து கொல்கத்தாவிற்கும் பணி மாற்றுதலாகிச் சென்றார். அவர் யமுனாவின் பெயரை ஆனந்தி என்று மாற்றினார். அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் பெண்கல்வி ஆதரவாளர்.

அந்தக்காலத்தில் பிராமணர்களிடையே சமஸ்கிருதம் படிப்பதுதான் பழக்கமாக இருந்தது. ஆனால் கோபால் ஹரி தேஷ்முக் (புனை பெயர்: லோக்ஹிதவாதி) எழுதிய சமூக சீர்திருத்தக் கட்டுரைகளின் தொகுப்பான ஷாதபத்ரேயைப் படித்திருந்த ஜோஷி சமஸ்கிருதத்தைவிட ஆங்கிலம் பயில்வதே அவசியம் என்று கருதினார். தன் மனைவிக்குப் படிப்பிலிருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட அவர் ஆனந்திபாய் கல்வி பயிலவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் உதவினார். ஆனந்திபாயின் 14 வது வயதில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை மருத்துவ வசதியில்லாததால் பத்தே நாட்களில் இறந்து போனது.குழந்தையின் மரணம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மருத்துவராக வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் தீவிரமாக எழுந்தது.

மருத்துவப் படிப்பை நோக்கி[தொகு]

கோபால்ராவ் ஆனந்திபாயை மருத்துவம் படிப்பதற்கு ஊக்கமளித்தார். ராபர்ட் வைல்டர் என்ற கிறித்தவ மறைபணியாளருக்கு 1880ல் கோபால்ராவ் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ஆனந்திபாய்க்கு அமெரிக்காவில் மருத்துவம் படிப்பதில் இருந்த ஆர்வத்தை விளக்கி அதற்கு உதவும்படியும் தனக்கும் அமெரிக்காவில் ஏதாவது ஒரு பொருத்தமான வேலை வாங்கித்தரவும் கோரியிருந்தார். தம்பதிகள் இருவரும் கிறித்தவ மதத்திற்கு மாறினால் அவர்களது விருப்பத்தினை நிறைவேற்றுவதாக வைல்டர் நிபந்தனை விதித்தார். ஆனால் மதம் மாறுவதற்கு கோபால்ராவ் தம்பதிகள் உடன்படாததால் அவர்கள் விருப்பம் நிறைவேறவில்லை.

கோபால்ராவ் எழுதிய கடிதத்தை வைல்டர் தனது பத்திரிக்கையான பிரின்ஸ்டன்ஸ் மிஷினரி ரெவ்யூவில் வெளியிட்டார். நியூ ஜெர்சியின் ரோசலைச் சேர்ந்த தியோடிசியா கார்பெண்டர் பல் மருத்துவரைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது அதனைப் படிக்க நேர்ந்தது. ஆனந்திபாய்க்கு மருத்துவம் படிப்பதில் இருந்த அதீத ஆர்வமும் கோபால்ராவ் தன் மனைவியின் விருப்பத்தற்கு அளித்த ஆதரவும் தியோடிசியாவின் மனதைத் தொட்டன. ஆனந்திபாய் அமெரிக்காவில் தங்குவதற்கு இடமளிக்க முன் வந்தார். இருவருக்குமிடையே கடிதப் பரிமாற்றம் தொடர்ந்தது. கடிதங்களில் அவர்கள் மற்ற விஷயங்களோடு இந்து மதக் கலாச்சாரத்தைப் பற்றியும் விவாதித்தனர்.

கொல்கத்தாவிலிருந்தபோது ஆனந்திபாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பலவீனம், விடாத தலைவலி, எப்போதாவது வரும் காய்ச்சல், சில சமயங்களில் மூச்சுத்திணறல் என்று அவர் சிரமப்பட்டார். தியோடிசியா அமெரிக்காவிலிருந்து மருந்துகள் அனுப்பியும் பலனில்லாமல் போனது. 1883ல் கோபால்ராவிற்கு ஸ்ரீராம்பூருக்கு மாற்றலாகியது. அப்போது அவர் தனது மனைவியை மட்டும் மருத்துவம் படிக்க அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தார். உடல்நலம் குன்றியநிலையிலும் மனைவி படித்து மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனந்திபாய் சற்றுத் தயங்கினாலும் பிற பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டிய அவசியத்தை கோபால்ராவ் அவருக்கு விளக்கி அமெரிக்கா செல்வதற்கு அவரைச் சம்மதிக்க வைத்தார்.

பென்சில்வேனியாவிலிருந்த பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்படி தார்பார்ன் மருத்துவத் தம்பதியினர் ஆனந்திபாய்க்கு ஆலோசனை கூறினர். (உலகில் பெண்களுக்கு மருத்துவக் கல்வியளிக்க தொடங்கப்பட்ட முதல் துறை) மேற்கத்திய நாட்டில் மேற்படிப்புக்குச் செல்ல ஆசைப்பட்ட ஆனந்திபாயை இந்து வைதீகவாதிகள் பழித்தனர். பாராட்டி ஊக்கப் படுத்திய கிருத்துவர்களோ மதம் மாறத் தூண்டினர். ஸ்ரீராம்பூர் கல்லூரிக் கூடத்தில் ஆனந்திபாய் மக்களைக் கூட்டி அவர்களிடம் தனது மருத்துவராகும் கனவையும் அதை நிறைவேற்றத் தானும் தனது கணவரும் சந்திக்கும் பிரச்சனகளையும் விளக்கிப் பேசினார். இந்தியாவில் பெண்மருத்துவர்களின் அத்தியாவசியத்தையும் இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கவேண்டுமென்ற தனது குறிக்கோளையும் அவர்களுக்குப் புரிய வைத்தார். எந்தக் காலத்திலும் தான் கிருத்துவ மதத்திற்கு மாறமாட்டேன் என்று உறுதியும் அளித்தார். அவரது பேச்சு எங்கும் பரவி நாடு முழுவதிலிருந்தும் அவருக்கு பண உதவி வர ஆரம்பித்தது. அப்போதைய இந்திய வைசிராய் அவரது படிப்பிற்காக ரூபாய் 200 அளித்தார்.

அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு[தொகு]

1883ல் ஆனந்திபாய் கொல்கத்தாவிலிருந்து நியூயார்க் நகருக்குக் கப்பலில் புறப்பட்டார். தார்பார்ன் தம்பதியினருக்குப் பழக்கமான ஆங்கிலப் பெண்மணிகள் இருவர் அவருக்குத் துணையாக உடன் பயணம் செய்தனர். தியோடிசியா நியூயார்க்கில் அவரை வரவேற்றார். ஆனந்திபாய் பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு (பென்சில்வேனியா) விண்ணப்பித்தார்.[3] விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அக்கல்லூரித் தலைவர் ரேச்சல் போட்லி, அவரைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார். ஆனந்திபாய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும் பழக்கமில்லாத உணவும் அவரது உடல் நலத்தை மிகவும் மோசமாக்கின. காச நோய் அவரைத் தாக்கியது. அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி அவர் மார்ச் 11, 1886ல் மருத்துவப் பட்டம் (எம். டி) பெற்றார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் தலைப்பு - ஆரிய இந்துக்களின் தாய்மை மருத்துவம். மருத்துவராகப் தேர்ச்சி பெற்ற அவருக்கு விக்டோரியா மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

1886ன் இறுதியில் ஆனந்திபாய் இந்தியாவிற்குத் திரும்பினார். இந்தியாவில் அவருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்தது. கோலாப்பூர் சமஸ்தானத்திலிருந்த ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவின் பொறுப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

பெப்ரவரி 26, 1887ல் 22 வயதுகூட நிரம்பாத ஆனந்திபாய் காலமானார். அவரது மரணத்தால் நாடு முழுவதும் துயரத்தில் மூழ்கியது. அவரது அஸ்தி தியோடிசியா கார்பெண்டருக்கு அனுப்பப்பட்டது. தியோடிசியா அதனை நியூயார்க்கில் தங்களது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இவரைப் பற்றிய புத்தகங்கள்[தொகு]

  • 1888ல் கரோலின் வெல்ஸ் ஹீலி டால் எழுதிய ஆனந்திபாயின் வாழ்க்கை வரலாறு.[4].
  • ஆனந்திபாயின் வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தூர்தர்ஷன் இந்தித் தொடர் - ஆனந்தி கோபால். ( இயக்கம் - கமலாக்கர் சாரங்)
  • ஸ்ரீகிருஷ்ண ஜனார்தனன் ஜோஷியின் மராத்தி புனைவுப் புதினம் - ஆனந்தி கோபால். இப்புதினத்தை ஆஷா தாம்லே ஆங்கிலத்தில் சுருக்கி மொழிபெயர்த்தார். மேலும் இப்புதினம் ராம் ஜி. ஜோக்லேகரால் அதே பெயரில் நாடகமாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. - The lives and letters of Anandibai Joshi
  2. Eron, Carol (1979). "Women in Medicine and Health Care". in O'Neill, Lois Decker. The Women's Book of World Records and Achievements. Anchor Press. பக். 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0385127332. "First Hindu Woman Doctor" 
  3. Scan of letter பரணிடப்பட்டது 2018-09-29 at the வந்தவழி இயந்திரம் from Anandibai Joshi to Alfred Jones, June 28, 1883; DUCOM Archives
  4. The Life of Dr. Anandabai Joshee: A Kinswoman of the Pundita Ramabai பரணிடப்பட்டது 2018-09-29 at the வந்தவழி இயந்திரம், published by Roberts Brothers, Boston
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anandibai Gopalrao Joshee
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தி_கோபால்_ஜோஷி&oldid=3261413" இருந்து மீள்விக்கப்பட்டது