ஆந்த்ராக்ஸ்
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஆந்த்ராக்ஸ் Classification and external resources | |
ஐ.சி.டி.-10 | A22 |
---|---|
ஐ.சி.டி.-9 | 022 |

ஆந்த்ராக்ஸ் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு தீவிரத் தொற்று நோய் ஆகும். இது 'பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus anthracis) எனும் கோலுரு நுண்ணுயிரால் ஏற்படுகிறது. இந்நோய் கால்நடைகளுக்கும், தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டிகளுக்கும் மட்டுமே ஏற்படக்கூடியது. நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புண்டு. இது ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப்படும்.
எனினும் இது எளிதில் பரவக்கூடிய நோய் அல்ல. காற்றின் மூலம் தானாக பரவுவது இல்லை. மேலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதும் இல்லை. தடுப்பூசி மூலம் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். நோய் ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் மருந்துகள் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.[1][2][3]
தற்போது உயிரிப் போர்முறை' எனும் நோய்க் கிருமிகளை ஏவி எதிரி நாடுகளைத் தாக்கும் முறையில் இந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் பயன்பாட்டைப் பற்றி பல நாடுகளும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.
வரலாறு
[தொகு]ஆந்த்ராக்ஸ் மிகப் பழங்காலத்திலேயே அறியப்பட்ட நோய்களில் ஒன்று. ஒரு காலத்தில் பிளேக்[தெளிவுபடுத்துக] போன்று பேரழிவை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. கோலுரு நுண்ணுயிர்களால் உண்டாகும் நோய்களில் ஆந்த்ராக்ஸ் உண்டாகும் கோலுரு நுண்ணுயிர் தான் முதன்முதலில் பிரித்து கண்டரியப்பட்டது.
1850ம் ஆண்டு ஆந்த்ராக்சால் பாதிக்கப்பட்ட ஆட்டின் இரத்தத்தை நுண்ணோக்கி மூலம் ஆராயும் போது சி.ஜெ. டவைன் (C.J. Davaine) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி உருட்டுக் கம்பி வடிவிலான இந்த கோலுரு நுண்ணுயிர்களைக் கண்டுபிடித்தார். புகழ்பெற்ற பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் லூயிஸ் பாஸ்டர் இந்தக் கிருமிகளால் தான் ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்படுகிறது என்பதை நிரூபித்ததோடு 1881ம் ஆண்டில் இந்த நோய்க்காக விலங்குகளுக்கு போடப்படும் தடுப்பூசியையும் உருவாக்கினார். இதற்கு சில வருடங்கள் முன்பாக 1877ல் ராபர்ட் கோச் எனும் ஜெர்மானிய விஞ்ஞானியும் எலிகளுக்கு இந்தக் கிருமிகளை ஊசி மூலம் செலுத்தினால் ஆந்த்ராக்ஸ் ஏற்படுவதை உறுதிப்படுத்தினார்.
1979ம் ஆண்டு ரஷ்யாவில் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் (தற்போதைய யெகாடெரின்பர்க் (Yekaterinburg)) என்னுமிடத்தில் 'உயிரியல் ஆயுதத் தொழிற்சாலை' என்று கருதப்படும் கட்டிடத்திலிருந்து விபத்து மூலம் காற்றில் இந்தக் கிருமிகள் பரவியதால் சுமார் 66 பேர் இறந்தார்கள் என்று கூறப்படுகிறது. இங்கு வெளிப்பட்ட கிருமிகள் சுமார் நான்கு புதிய ரகங்கள் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் 1998ல் அறிவித்தனர். இதனால் தடுப்பூசிகளால் தடுக்கப்படாத புதிய ரகங்கள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
1991ம் ஆண்டு நடந்த வளைகுடா போரில், ஈராக் நாடு உயிரியல் ஆயுதங்களால் தாக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டதால் சுமார் 150,000 வீரர்களுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது. 2001ல் உலக வணிக மையம் மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை கடிதம் மூலம் அனுப்பினார்களா என்றும் ஆராயப்படுகிறது.
ஆந்த்ராக்ஸ் கிருமிகள் வாழும் விதம்
[தொகு]இது மண்ணில் பல நூற்றாண்டுகளாகக் கூட அழியாமல் நுண்ணிய பூஞ்சை கூடு கட்டி வாழக் கூடியது. இந்த கூடுகளை ஒரு வித திரவ முலாம் பூசுவதால் மிக அதிக வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும்.
விலங்குகளில் ஆந்த்ராக்ஸ்
[தொகு]ஆந்த்ராக்ஸ் பூஞ்சைக் கூடுகள் உள்ள மண்ணில் வடிந்து வந்த நீரைக் குடிக்கும் விலங்குகளுக்கு இந்த நோய் பரவுகிறது. நோயுற்று இறந்த விலங்கை உண்ணுவதாலும், இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடியாலும் இது மற்ற விலங்குகளுக்கும் பரவுகிறது.
நோயுற்ற விலங்குகளுக்கு தடுமாற்றம், இரத்தப் போக்கு, வலிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டு உடனடியாக இறக்கவும் வாய்ப்புண்டு. தடுப்பூசி மூலமும், நோய் ஏற்பட்டவுடன் மருந்துகள் மூலமாகவும் விலங்குகளைக் காப்பாற்ற முடியும்.
மனிதர்களில் ஆந்த்ராக்ஸ்
[தொகு]மனிதர்களில் இந்த நோய் மூன்று விதங்களில் தோன்றக் கூடியது. தோல் வியாதி, நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு. இதில் தோல் வியாதி, உடலில் காயங்கள், வெடிப்புகளில் நேரடியாக கிருமிகள் பட்டால் மட்டுமே ஏற்படக் கூடியது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல்கள், உரோமங்கள், மாமிசத்தைக் கையாளுபவர்களுக்கு வரக் கூடியது. தோலில் கருமையான கொப்புளங்கள் ஏற்பட்டு, முற்றிய நிலையில் வெடித்து நடுவில் கருநிறம் கொண்டதாக இருக்கும். இவைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவப் பராமரிப்பில் இல்லாதவர்களில் சுமார் 20 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது.
சுவாசம் மூலமாக கிருமிகள் நுரையீரலை அடைந்தால் ஏற்படும் பாதிப்பு தான் சற்று அபாயகரமானது. இவ்வகை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகள் சளி அல்லது ஃப்ளு பாதிப்பை போன்று - உடல் வலி, காய்ச்சல், அசதி, இருமல் அல்லது இலேசான நெஞ்சுவலி ஆகியவை தென்படும். பாதிக்கப்பட்டவருக்கு தடுப்பூசி அல்லது மருந்துகள் உடனடியாக அளிக்கப்படாவிட்டால் இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்கு தேவைப்படும் 'Ciproflaxacin', பெனிசிலின் போன்ற மருந்துகள் நாம் பொது மருத்துவத்திலேயே அதிகம் பயன்படுத்துவதால் எளிதில் கிடைக்கக் கூடியது.
பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்பதால் குடல் பாதிப்பு ஏற்படும். இவ்வகையில் வாந்தி, தலைசுற்றல், வயிற்று வலி, கடுமையான பேதி ஆகியவை ஏற்படலாம். இவ்வகை பாதிப்பில் சுமார் 20 முதல் 60 சதம் வரை இறப்பில் முடிகிறது.
அஞ்சல் மூலம் ஆந்த்ராக்ஸ் - பாதுகாப்பு முறைகள்
[தொகு]தீவிரவாதிகளால் பொது மக்களிடையே ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை பரப்ப, இந்த கிருமிகள் அடங்கிய பூஞ்சைக் கூடுகள் (spores) பொடி வடிவில் கடித உறையில் வைத்து அனுப்பப்படுவதாக நம்பப்படுகிறது. உறையை பிரிக்கும் போது பொடி சிதறுவதால் காற்றில் கலந்து அருகில் இருப்போருக்கு சுவாசம் மூலம் பரவும் வாய்ப்பு ஓரளவுக்கு உண்டு.
பாதுகாப்பு அணுகுமுறைகள்
[தொகு]- கடிதத்தை பாலிதீன் உறையில் பாதுகாப்பாக மூடி வைக்கவும்
- கைகளை நீர் மற்றும் சலவைக்கட்டி பயன்படுத்தி கழுவவும்.
- உங்கள் உயர் அதிகாரிகள் அல்லது காவல் துறையை நாடவும்.
பொடி வெளிப்புறமாக படிந்திருந்தால் அல்லது சிந்தியிருந்தால்:
- பொடியை சுத்தப்படுத்த முயற்சிக்காதீர்கள். மற்றவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்
- ஆடைகள் முதலியவற்றை தட்டாதீர்கள்.
- கைகளை நீர் மற்றும் சலவைக்கட்டி பயன்படுத்தி கழுவவும்.
- உடனடியாக உயர் அதிகாரிகள் அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
- ஆடைகள் முதலியவற்றை உதறாமல் அகற்றி பாலிதீன் உறையில் மூடி வைக்கவும்.
- நீர் மற்றும் சலவைக்கட்டி பயன்படுத்தி குளித்து விடுவது நல்லது. ப்ளீச்சிங், கிருமி நாசினி முதலியவற்றை உபயோகிக்காதீர்கள்.
- பொடி, படக் கூடிய அளவில் யார் யாரெல்லாம் நின்றிருந்தார்கள் என்று பட்டியலிட்டு சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்குள் காய்ச்சல் முதலியவை ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட வேண்டும்.
பொதுவாக இந்தக் கிருமிகள் காற்றில் பரவுவதில்லை. இந்தப் பொடி காற்றில் வேகமாக உதறப்பட்டாலோ அல்லது தெளிக்கப்பட்டாலோ சுற்றியிருப்போரை நோய் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம். ஆகவே மிகச் சிறிய குண்டு வெடிப்பின் மூலம் இந்தக் கிருமிகள் காற்றில் தெளிக்கப்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்த இயலும். இவ்வகை குண்டுகளை தயாரிக்க தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Basic Information What is anthrax?". CDC. 1 September 2015. Archived from the original on 17 May 2016. Retrieved 14 May 2016.
- ↑ "Types of Anthrax". CDC. 21 July 2014. Archived from the original on 11 May 2016. Retrieved 14 May 2016.
- ↑ "Symptoms". CDC. 23 July 2014. Archived from the original on 11 May 2016. Retrieved 14 May 2016.