ஆசிய கம்பிவால் தகைவிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய கம்பிவால் தகைவிலான் (அறிவியல் பெயர்: Hirundo smithii filifera) என்பது கம்பிவால் தகைவிலானின் துணையினம் ஆகும். இது தென் மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது. இது முதன்முதலில் 1826 இல் ஸ்டீபன்சால் விவரிக்கப்பட்டது.[1]

விளக்கம்[தொகு]

ஆசிய கம்பிவால் தகைவிலானின் வாலில் உள்ள இரண்டு கம்பிகளைக் கொண்டு இதனைப் பிற தகைவிலான்களில் இருந்து எளிதாக பிரித்தரிய இயலும். இப்பறவையின் உடலின் மேற்பகுதி பளபளக்கும் கருநீலத்தில் இருக்கும். இதன் உச்சந் தலையும் நெற்றியும் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். தொண்டை, மார்பு, வயிறு ஆகியன எல்லாம் நல்ல பளபளக்கும் வெண்மையாக இருக்கும். பெண் பறவையின் வாலில் உள்ள கம்பி சற்றுக் குறுகலாக இருக்கும்.

பரவலும் வாழிடமும்[தொகு]

இது தென் மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது.[2] தென்னிந்தியாவில் நீலகிரிக்கு வடக்கில் காணப்படுகிறது. மேலும் கும்பகோணத்தில் காவிரிக் கரையில் காணப்படுகிறது. கோடியக்கரையில் காணப்பட்டதாக தமிழகப் பறவை நூலாசிரியர் எம். ஏ. பாத்சா குறித்துள்ளார். இதன் தெற்கெல்லையாக நீர்வளமிக்க காவிரி வடிநிலப் பகுதியைக் கொள்ளலாம்.

நடத்தை[தொகு]

இப்பறவை பிற தகைவிலான்களைப் போலவே நீர்வளம் மிக்கப் பகுதிகளைச் சார்ந்தே திரியும் இயல்புடையது. இது ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. இவை நீரின்மேல் தொங்கும் பாறைகள், பாலங்கள், அணைகட்டுக்கால்வாய்கள் ஆகியவற்றின் அடியில் கூடுகளை அமைக்கின்றன. தன் அலகில் கொண்டுவரும் சேற்று மண்ணால் தட்டுவடிவிலான கூட்டினை அமைக்கின்றன. கூட்டில் மூன்று முதல் ஐந்து வரையிலான முட்டைகளை இடும். இதன் முட்டை வெண்மையாகச் செம்பழுப்புப் புள்ளிகளோடும் கறைகளோடும் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ITIS Report: Hirundo smithii". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  2. Monroe, Burt (1997). A World Checklist of Birds. New Haven, CT, USA: Yale University Press. பக். 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-07083-5. https://books.google.com/books?id=3M7f_Y2zWDwC&pg=PA247. பார்த்த நாள்: 28 August 2014.