அ. சீனிவாசன்
அ. சீனிவாசன் | |
---|---|
பாரதி சீனிவாசன் | |
பிறப்பு | 1925 ஆகஸ்ட் 6 வத்திராயிருப்பு மகாராஜபுரம் |
இறப்பு | 24 ஜுலை 2006 சென்னை |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | BA |
பணி | எழுத்தாளர் |
அறியப்படுவது | தொழிற்சங்கம் |
சமயம் | இந்து |
பெற்றோர் | மெட்ட. வெ. அய்யப்ப நாயுடு மெட்ட. வெங்கடம்மாள் |
வாழ்க்கைத் துணை | நாகலட்சுமி |
பிள்ளைகள் | (1) பகீரதி (2) வைதேகி (3) சீ. வாசன் |
அ. சீனிவாசன் (1925 ஆகஸ்ட் 6 ) இதழாளர்; எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர்; விடுதலைப் போராட்ட வீரர்; முன்னாள் விமானப்படை வீரர்; அரசியல்வாதி.
பிறப்பு
[தொகு]அ. சீனிவாசன் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள மகாராஜபுரம் என்னும் சிற்றூரில் மெட்ட. வெ. அய்யப்ப நாயுடு – மெட்ட. வெங்கடம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1925, ஆகஸ்ட் 6ஆம் நாள் பிறந்தார். ஆண்களும் ஒரு பெண்ணும் இவருக்கு உடன்பிறந்தவர்கள் ஆவர்.[1]
கல்வி
[தொகு]அ. சீனிவாசன் மகாராஜபுரம், சாத்தூர், வத்திராயிருப்பு. விருதுநகர் ஆகிய ஊர்களில் பயின்று தனது பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். பின்னர் மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். விமானப்படையில் இருந்த பொழுது ஆங்கில மொழியைக் கற்றார். தானே முயன்று தமிழிலக்கியங்களைக் கற்றார். இவைதவிர தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளையும் கற்றார்.[1]
இல்லற வாழ்க்கை
[தொகு]அ. சீனிவாசன், 1957 மே 31 ஆம் நாள் நாகலட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பாகீரதி, வைதேகி என்னும் இரு பெண்களும் அய்யாசாமி என்ற வாசன் என்னும் ஓர் ஆணும் மகவாகப் பிறந்தனர்.[1]
பணிக்கள வாழ்க்கை
[தொகு]இந்திய விமானப்படைப் பணி
[தொகு]இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பொழுது, 1943ஆம் ஆண்டில் பிரிட்டிசு இந்திய இராணுவத்தின் விமானப்படையில் அ. சீனிவாசன் சேர்ந்தார். அங்கு தகவல் தொடர்புப் பொறியியல் பயின்று பொறியாளராகப் பணியாற்றினார்.[2] அப்பொழுது விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விமானப்படையில் வேலை நிறுத்தத்தைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதன் விளைவாக 1947ஆம் ஆண்டில் அப்பணியிலிருந்து அவர் விலக்கப்பட்டார்.[3]
இதழ்ப்பணி
[தொகு]1980ஆம் ஆண்டுகளில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் நாளிதழான ஜனசக்தி, மாத இதழான மார்க்ஸிய ஒளி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.[2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில்
[தொகு]இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். எனவே இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்து அதன் போராட்டங்களில் கலந்துகொண்டார்.[1]
காங்கிரசு சோசலிசக் கட்சியில்
[தொகு]இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றிய சோசலிசக் கொள்கையினரும் பொதுவுடமைக் கொள்கையினரும் இணைந்து செயப்பிரகாசு நாராயண் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்னும் அமைப்பை இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் உள்ளமைப்பாக 1937 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தினர். அ. சீனிவாசன் அக்கட்சியில் உறுப்பினராக இருந்தார்.[1]
சுயமரியாதை இயக்கத்தில்
[தொகு]ஈ. வெ. ராமசாமி பெரியார் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்னும் அமைப்பின் வழியாக மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி மறுப்பு, பெண் விடுதலை போன்றவற்றில் தீவிரமாகச் செயல்படுத்தி வந்தார். சிங்காரவேலர், ப. ஜீவானந்தம் உள்ளிட்ட பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அவரோடு இணைந்து செயலாற்றினார். அவ்வியக்கத்தின் போக்கு அ. சீனிவாசனையும் கவர்ந்தது. எனவே அவ்வியக்கத்திலும் இணைந்து சிறிது காலம் பணியாற்றினார்.[1]
இந்திய பொதுவுடமைக் கட்சியில்
[தொகு]அ. சீனிவாசன் 1947 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் வட்ட, மாவட்ட, மாநில, தேசியப் பொறுப்புகள் பலவற்றை வகித்தார். தமிழ் மாநில துணைச் செயலாளராகவும் தேசியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் அமைப்பாக்கம், தொழிற்சங்கம், இதழ், பரப்புரை, வெளியீடு, கொள்கைக் கல்வி ஆகிய துறையில் பணியாற்றினார்.[4]
தொழிற்சங்கத் தலைவர்
[தொகு]அ. சீனிவாசன் 1950 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம், சிவகாசி, சத்திரப்பட்டி, தளவாய்புரம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் பஞ்சாலை, அச்சு, தீப்பெட்டி, கைத்தறி உள்ளிட்ட வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்களைத் திரட்டி அவர்களுக்கென தனித்தனி தொழிற்சங்கங்களை அமைத்தார்.[2]
1966 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து அங்குள்ள துறைமுகம், ஆவடி, கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களில் பல்வேறு பதவிகளை வகித்தார்.[2]
சென்னை தொழிலாளர் வாரியத்தில் தொழிலாளர் பிரதிநிதியாக இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.
உலகத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு மாநாடுகளில்
[தொகு]உலகத் தொழிற்சங்க மாநாடு பல்கேரிய நாட்டின் தலைநகரான வார்னாவில் நடைபெற்ற பொழுது அ. சீனிவாசன் அதில் கலந்துகொண்டார்.
தேர்தலில் போட்டி
[தொகு]உள்ளாட்சித் தேர்தல்
[தொகு]1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இராசபாளையம் நகரமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார்.
நாடாளுமன்றத் தேர்தல்கள்
[தொகு]1984, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சிவகாசி நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[2]
பாரதிய சனதா கட்சியில்
[தொகு]அ. சீனிவாசனுக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயற்குழுவிற்கும் 1999 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சீனிவாசன் அக்கட்சியிலிருந்து விலகி 1999, செப்டம்பர் 6 ஆம் நாள் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். அதன் மாநில இலக்கிய அணித் தலைவராகப் பணியாற்றினார்.[2]
சிறை வாழ்க்கை
[தொகு]1948 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்; சிலர் தலைமறைவாக வாழ்ந்தனர். அ. சீனிவாசன் கைது செய்யப்பட்டார். மதுரை, சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டார். இந்த முதல் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் தொடர்ந்து பலமுறை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார்.[2]
வெளிநாட்டுப் பயணம்
[தொகு]அ. சீனிவாசன் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய உயர்மட்டக் குழுவில் பணியாற்றிய பொழுது, அக்குழுவின் சார்பில் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம், செக்கோசுலோவேகியா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.[5]
எழுத்துப்பணி
[தொகு]அ. சீனிவாசன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அரசியல், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம் தொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் பல நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றுள் சில:
வ.எண் | ஆண்டு | நூல் | வகை | பதிப்பகம் | குறிப்பு |
01 | ? | காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு | வாழ்க்கை வரலாறு | ? | மொழிபெயர்ப்பு |
02 | ? | மார்க்சிய லெனினிய தத்துவ ஞானப் பிரச்னைகள் | அரசியல் | ? | மொழிபெயர்ப்பு |
03 | ? | அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள் | அரசியல் | ? | மொழிபெயர்ப்பு |
04 | ? | ஐக்கிய முன்னணித் தந்திரம் | அரசியல் | ? | மொழிபெயர்ப்பு |
05 | ? | மார்க்சீய தத்துவம் | அரசியல் | ? | மொழிபெயர்ப்பு |
06 | ? | வரலாற்றில் பொருள்முதல் வாதம் | அரசியல் | ? | மொழிபெயர்ப்பு |
07 | ? | மார்க்சீயமும் பகவத் கீதையும் | அரசியல் | ? | மொழிபெயர்ப்பு |
08 | ? | மார்க்சீய பொருளாதாரத் தத்துவம் | அரசியல் | ? | |
09 | ? | ஜீவானின் தமிழ்ப் பணிகள் | ஆய்வு | ? | 1986ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு |
10 | 1992 | கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி | கட்டுரை | அன்னம், சிவகங்கை | பேராசிரியர் நா. தர்மராஜன் முன்னுரை |
11 | 1999 | பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி | ஆய்வு | ஆ. சீனிவாசன், சென்னை | |
12 | 2001 | சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துகள் | ஆய்வு | ஆ. சீனிவாசன், சென்னை | |
13 | 2002 | சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் – ஓர் ஆய்வு | ஆய்வு | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை | |
14 | 2002 | பாரதியின் புதிய ஆத்திசூடி – ஒரு விளக்கவுரை | உரை | ஆ. சீனிவாசன், சென்னை | |
15 | 2003 | பாரதியின் தேசீயம் | ஆய்வு | ஆ. சீனிவாசன், சென்னை | |
16 | 2004 | கல்யாணராமனும் பரசுராமனும் | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
17 | 2004 | கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் | ஆய்வு | அ. சீனிவாசன், சென்னை | |
18 | 2005 | பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள் | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
19 | ? | ஆழ்வார்களும் பாரதியும் | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
20 | ? | மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும் அவைகளின் சிறப்பும் உயர்வும் ஆழ்ந்த பொருளும் இன்றைய பொருத்தமும் | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
21 | ? | கம்பன் ஒரு சமுதாயப் பார்வை | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
22 | ? | தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
23 | ? | சியாமபிரசாத் முக்கர்ஜி வாழ்க்கை வரலாறு | வாழ்க்கை வரலாறு | ? | |
24 | ? | பாரதீய ஜனசங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சி வரை : 50 ஆண்டு வரலாற்றுக் குறிப்புகள் | வரலாறு | ? | |
25 | ? | நெசவாளர்களும் நெசவுத் தொழிலும் | ஆய்வு | ? | |
26 | ? | கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும் | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
27 | ? | ஶ்ரீராமனும் கோதண்டமும் | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
28 | ? | பாரதியும் பகவத் கீதையும் | ஆய்வு | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
29 | ? | கிராமப்புறங்களை நோக்கி | கட்டுரை | கர்மயோகி பதிப்பகம், சென்னை | |
30 | ? | இந்தியப் பொருளாதாரச் சிந்தனைகள் | கட்டுரை | கர்மயோகி பதிப்பகம், சென்னை |
அ. சீனிவாசன் தன்னுடைய இறுதிக் காலத்தில் பாரதியாரைப் பற்றிய நூல்களை எழுதியதால், பாரதிய சனதா கட்சியினர் இவரை பாரதி சீனிவாசன் என அழைப்பர்.
இவருடைய நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010-11 ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
விருதுகள்
[தொகு]அ. சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பின்வரும் விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன:[2]
- எழுத்துப் பணியைப் பாராட்டி 1984ஆம் ஆண்டில் சோவியத் நாட்டின் நேரு விருது வழங்கப்பட்டது
- இதழ்ப் பணியைப் பாராட்டி சர்வதேசப் பட்டயம்
மறைவு
[தொகு]சான்றடைவு
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சீனிவாசன் அ, கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், அ. சீனிவாசன் வெளியீடு – சென்னை, மு. பதிப்பு 2004, பக்.ii
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 சீனிவாசன் அ; பாரதியின் தேசீயம்; ஆசிரியரின் சொந்த வெளியீடு, சென்னை; மு.பதி. 2003; பக். 50
- ↑ தர்மராஜன், நா.; கிராமப்புற நோக்கி.. என்னும் நூலின் முன்னுரை; அன்னம், சிவகங்கை; 1992; பக். 3
- ↑ சீனிவாசன் அ, கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், அ. சீனிவாசன் வெளியீடு – சென்னை, மு. பதிப்பு 2004, பக்.iii - iv
- ↑ சீனிவாசன் அ, கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், அ. சீனிவாசன் வெளியீடு – சென்னை, மு. பதிப்பு 2004, பக்.iii