அளவுக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1827 ஆம் ஆண்டில் டெய்ன்மவுத் என்னும் இடத்தில் பாரிய அளவுக் கற்களைக் கப்பலில் ஏற்றும் காட்சி.

அளவுக் கல் என்பது, அரிதல், வெட்டுதல், துளைத்தல், தேய்த்தல் போன்ற வழிமுறைகளில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ பயன்படுத்திக் குறித்த அளவுகளிலும் வடிவங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற இயற்கையாகக் கிடைக்கும் கற்களைக் குறிக்கும். இவற்றை பல்வேறு நிறங்கள், பரப்புத்தன்மை, மேற்பரப்பின் முடிப்பு போன்ற இயல்புகளைக் கொண்டவையாக உருவாக்குகின்றனர். இவை பல தேவைகளுக்குப் பயன்படுகின்றன. சிறப்பாகக் கட்டுமானத் தொழிலில் இதனைப் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இவை கட்டிடங்களுக்கான தள முடிப்புகளாகவும், சுவர்களில் பதிப்பதற்கும், அடுக்களை மேடைகளுக்கும், படிக்கட்டுகளாகவும் இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுகின்றன.


அளவுக் கற்கள் உற்பத்திக்கான கற்கள் கற்சுரங்கங்களில் இருந்து கிடைக்கின்றன. கற்சுரங்கங்கள் எல்லாமே அளவு கற்களுக்கான கற்களை அகழ்வதில்லை. பல சுரங்கங்கள் கட்டிடத் தேவைக்கான உடை கற்கள் அல்லது சரளைக் கற்களையும் வழங்குகின்றன. பெரும்பாலான கற்சுரங்கங்களில் உள்ள கற்கள் இரண்டு தேவைகளுக்கும் பொருத்தமானவை எனினும், ஒரே சுரங்கத்தில் இரண்டு தேவைகளுக்குமான கற்களை உடைத்து எடுப்பது குறைவு. சரளைக் கற்களின் உற்பத்திக்குப் பாறைகளைக் கவனமாக உடைக்க வேண்டியதில்லை. ஆனால் அளவு கற்களின் உற்பத்திக்கான கற்கள் நுட்பமான முறைகளைப் பயன்படுத்திக் கவனமாக உடைத்து எடுக்கப்படுகின்றன. வைரக் கம்பி வாள்கள், வைரப் பட்டி வாள்கள், சுவாலைத் துளைப்பு முறை, மென்வெடிப்பு போன்றவை இதற்குப் பயன்படுகின்றன.


பலவகையான, தீப்பாறை, உருமாறியபாறை, படிவுப்பாறை போன்ற பாறை வகைகளில் இருந்து அளவுக் கற்களை உற்பத்தி செய்யலாம் எனினும், அளவுக் கற்களின் உற்பத்திக்குப் பயன்படும் முக்கியமான கற்கள், கருங்கல், சுண்ணக்கல், சலவைக்கல், டிரவட்டைன், குவாட்சை அடிப்படையாகக் கொண்ட கற்கள் (மணற்கல், குவாட்சைட்டு), சிலேட்டு போன்றவையே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவுக்_கல்&oldid=3093423" இலிருந்து மீள்விக்கப்பட்டது