அலிபாபாவும் 40 திருடர்களும் (1941 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலிபாபாவும் 40 திருடர்களும்
இயக்கம்கே. எஸ். மணி
தயாரிப்புபட்சி ராஜா பிலிம்ஸ்
கதைஇளங்கோவன்
இசைஎன். எஸ். பாலகிருஷ்ணன்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. ஏ. மதுரம்
என். ஆர். பத்மாவதி
எம். ஜெயலட்சுமி
ஒளிப்பதிவுஈ. ஆர். கூப்பர்
படத்தொகுப்புஎஸ். சூர்யா
விநியோகம்ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்
வெளியீடுமார்ச்சு 15, 1941[1]
நீளம்15930 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அலிபாபாவும் 40 திருடர்களும் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே. பி. காமாட்சி, மற்றும் யானை வைத்தியநாதையர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு என். எஸ். பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார். நடனங்களை எம். ஜெயசங்கர் இயக்கியிருந்தார்.[2] இத்திரைப்படம் 1941 மார்ச் 15 இல் வெளியிடப்பட்டது. வணிக அளவில் இது வெற்றி பெறவில்லை. இதன் பிரதிகளும் கிடைக்கவில்லை.[2]

கதைச் சுருக்கம்[தொகு]

பாக்தாத் நகரத்தில் பரமலோபியான காசீம் (கே. ஹிரண்யா) என்ற தனவந்தன் வசித்து வருகிறான். அவன் தனது மனைவியின் துர்ப்போதனைகளைக் கேட்டு, தாயையும் (எம். ஜெயலட்சுமி) தம்பி அலிபாபாவையும் (என். எஸ். கிருஷ்ணன்) வீட்டிலிருந்து துரத்தி விடுகிறான். இருவரும் ஒரு சிறு வீட்டில் வசித்து வருகிறார்கள். பணக்காரனான காசீம் வீட்டில் அடிமைகள் இருக்கின்றனர். அவர்களில் மார்ஜியானா (டி. ஏ. மதுரம்) என்பவள் மிகவும் அழகானவள். காசீம் அவளை அடைய முயற்சி செய்கிறான். ஆனால், அவள் அவனை வெறுத்து ஒதுங்குகிறாள். அலிபாபாவும் மார்ஜியானாவும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஒரு நாள் அவர்கள் இருவரும் ஆனந்தமாய்ப் பொழுதுபோக்கிக் கொண்டிருப்பதைக் காசீம் கண்டு, அவன் அலிபாபாவை அடித்து உதைத்து விரட்டுகிறான். பிறகு மார்ஜியானாவுக்குப் புத்திமதி சொல்லி அழைத்துச் செல்லுகிறான்.[3]

அலிபாபா தன் தாயிடம் ஓடி நடந்தவற்றைக் கூறுகிறான். பிறகு அவள் கூறியபடி தன் நண்பன் காதருடன் புறப்பட்டு, மாமன் வீட்டுக்குப் போகிறான். போகும்போது வழி தெரியாமல் களைப்புடன் ஒரு மலையோரமாகக் களைப்பாற உட்காருகிறான். அவ்வேளையில், ஒரு குகையில் கதவுபோல் திறந்து கொள்ள, அதிலிருந்து கூட்டமாகக் கள்வர்கள் வெளிப்படுகிறார்கள். இதனை நண்பர்கள் இருவரும் ஒளிந்து கொண்டு கவனிக்கிறார்கள். திருடர் தலைவன் அப்துல் (கே. பி. காமாட்சி) ஒரு மந்திரத்தைச் சொல்லவும் குகைக்கதவு தானே மூடிக் கொள்ள, திருடர்கள் சென்று விடுகிறார்கள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அலிபாபாவும் காதரும், அவர்கள் போன பிறகு, திருடர்கள் சொன்ன மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். குகைக்கதவு திறந்து கொள்கிறது. குகையினுள் பெருமளவு செல்வம் இருப்பதைக் கண்டு, அதில் கொஞ்சம் சேகரித்துக்கொண்டு இருவரும் திரும்புகிறார்கள்.[3]

காசீம் வீட்டுக்கு திருடர் தலைவன் அப்துலும், கமால் (எஸ். வி. சகஸ்ரநாமம்]]) என்பவனும் வைர வியாபாரிகளைப் போல் வருகிறார்கள். அப்துல் மார்ஜியானாவைப் பார்த்த உடனே அவள்மீது காதல் கொள்கிறான். இதைக் கவனித்த கமால், தலைவனை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறுகிறான். கதீஜா (எம். கே. பாப்ஜி) என்னும் வேறொரு பணிப்பெண் இவர்களை உண்மையில் இன்னாரென்று அறிந்து கொண்டு, இவர்களைப் பிடிக்கச் சிப்பாய்களைக் கொண்டு வருகிறாள். திருடர்கள் இருவருக்கும், தங்களைக் காட்டிக் கொடுத்தது மார்ஜியானாவாகத் தான் இருக்க வேண்டுமென்று சந்தேகம் எழுகின்றது. அவர்கள் சிப்பாய்கள் கையில் சிக்காமல், மார்ச்சியானாவையும் தூக்கிக் கொண்டு, ஒரு சாளரம் வழியாகத் தப்பித்து ஓடி விடுகிறார்கள்.[3]

காசீம், அலிபாபாவுக்கு செல்வம் கிடைத்த விதத்தை காதரின் மூலமாகத் திருடர் குகையைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்கிறான். உடனே அங்கே சென்று, குகைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டு, பொருள்களை மூட்டை கட்டுகிறான். திரும்பும் போது, அதைத் திறக்கும் மந்திரம் மறந்து விட்டது! இவ்வாறு சிறைப்பட்டிருக்கும் காசீமைத் திருடர்கள் பிடித்துக் கொன்று விடுகிறார்கள். அலிபாபா அண்ணனைக் காணோமென்று அறிந்ததும், தேடி வருகிறான். திருடர்களின் குகையில் அவனுடைய உடலைக் கண்டு பிடித்து, எடுத்துச் சென்று, அடக்கம் செய்கிறான்.[3]

மறுபடி குகைக்குத் திரும்பியபோது திருடர்களுக்கு அங்கிருந்த காசீமின் உடல் எடுத்துச் செல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அங்கே கிடந்த செருப்பைக் கொண்டு, அலிபாபாதான் வந்திருக்க வேண்டுமென்று அறிந்து, அவன் வீட்டைத் தெரிந்து கொண்டு எண்ணெய் வியாபாரிபோல் திருடர் தலைவன் வருகிறான். அவனைக் கண்டுபிடித்துக் கொன்று அலிபாபாவை மார்ஜியானா எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பதே கதை.[3]

நடிகர்கள்[தொகு]

திருடர்கள்: பி. தசரதராவ், சி. வள்ளிநாயகம், ஈ. வி. கே. மீரான், என். எஸ். வேலப்பன், சி. பி. கிட்டன், ஈ. கிருஷ்ணமூர்த்தி, என். சங்கரமூர்த்தி, கே. எஸ். வேலாயுதம், என். எஸ். வேலுப்பிள்ளை, டி. ஆறுமுகம், டி. எம். பாபு, சி. கிருஷ்ணபிள்ளை, பி. ஏ. ஐயாத்துரை[3]

வேலையாட்கள்: பி. ஜி. குப்புசாமி, பி. வி. சின்னசாமி[3]

நடனப் பெண்கள்: கே. ஏ. காந்தாமணி, பி. டி. சுந்தரி, எம். வி. சுலோசனா, கே. எஸ். வனஜா, தனபாக்கியம், லலிதா, ஜெகதா.[3]

பாடல்கள்[தொகு]

15 பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன. கே. பி. காமாட்சி, யானை வைத்தியநாதையர் ஆகியோரின் வரிகளுக்கும் என். எஸ். பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார்.[3] சைத்தான் காசிம் என்னை தவடை மேலே அடிச்சுப் போட்டானே என்ற என். எஸ். கிருஷ்ணன் பாடிய பாடல் பிரபலமானது.[4]

 1. பூவின்றி நல்ல மணம் வராதது போல்
 2. நல்ல - சீனக்கிளி மானே ஓ தித்திக்கும் செந்தேனே
 3. சைத்தான் காசிம் என்னை தவடை மேலே அடிச்சுப் போட்டானே
 4. சந்திரன் ஜொலித்திடுதே சந்தோசம் உண்டாகுதே
 5. என்ன மனோகரமே ஆகா
 6. இருட்டுக்கு முன்னே போனணும்
 7. ஆண்டவன் பேரால் நமக்கே வேண்டும் செல்வம்தான் வருமே
 8. புறப்படுவீரே திருடப் புறப்படுவீரே
 9. வா வா மதராஜா
 10. ஆசை கொண்டு வாடுகிறேனே நானே
 11. என்று நான் காண்பேன் - என்னடி தோழி
 12. கருணையில்லையோ காப்பவனே
 13. எனக்கு, வேறு கெதி-யாருமில்லை
 14. ஆதி நாதா நின் பாதம்
 15. மதி வதனி - வாடினேனே

தயாரிப்பு[தொகு]

ஆயிரத்தொரு இரவுகள் என்ற அராபிய நாட்டுபுறக் கதைகளின் தொகுப்பில் இடம்பெற்ற அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற கதையைத் தழுவி இத்தமிழ்த் தைரைப்படம் தயாரிக்கப்பட்டது.[5] எஸ். எம். சிறீராமுலு நாயுடுவின் பக்சிராஜா பிலிம்சு நிறுவனத்திற்காக கே. எஸ். மணி என்பவரால் இது இயக்கப்பட்டது. என். எஸ். கிருஷ்ணன் அலிபாபாவாகவும், அவரது மனைவி டி. ஏ. மதுரம் அடிமைப் பெண்ணாகவும் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். தூத்துக்குடி இராமசாமி ஐயர் "புளிமூட்டை" என்ற பாத்திரத்தில் நடித்தார். இதுவே அவர் பிற்காலத்தில் புளிமூட்டை ராமசாமி என அழைக்கப்பட்டார். சென்ட்ரல் ஸ்டூடியோவில் இது தயாரிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. "அலிபாபாவும் 40 திருடர்களும்". Vellitthirai. 21 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 ராண்டார் கை (1 மே 2011). "Ali Babavum Naarpathu Thirudargalum 1941". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/ali-babavum-naarpathu-thirudargalum-1941/article1981825.ece. பார்த்த நாள்: 17 சனவரி 2018. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 அலிபாபாவும் 40 திருடர்களும் பாட்டுப் புத்தகம். ஆனந்த விகடன் அச்சகம், மதராஸ். மார்ச் 1941. 
 4. 4.0 4.1 Randor Guy (1 May 2011). "Ali Babavum Naarpathu Thirudargalum 1941". தி இந்து. Archived from the original on 9 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121109063837/http://www.hindu.com/cp/2011/05/01/stories/2011050150341600.htm. 
 5. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998). Encyclopaedia of Indian Cinema. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563579-5. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]