உள்ளடக்கத்துக்குச் செல்

அரிசுடடைடீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏதென்ஸில் உள்ள பழங்கால அகோர அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அரிஸ்டைடிஸ் என்ற பெயரைக் கொண்ட ஆஸ்ட்ராகான் ஓட்டு சில்லை.

அரிசுடைடீசு (Aristides, ARR-ih-STY-deez கிரேக்கம்: Ἀριστείδης Aristeídēs 'Aristeídēs', Attic Greek : [aristěːdɛːs] ; கிமு 530-468) என்பவர் ஒரு பண்டைய ஏதெனிய அரசியல்வாதி ஆவார். "ஜஸ்ட்" என்ற புனைபெயர் கொண்ட இவர், ஏதென்சின் பாரம்பரிய காலத்தின் ஆரம்ப காலாண்டில் செல்வாக்கு பெற்று வளர்ந்தார். கிரேக்க பாரசீகப் போரில் இவரது படைத்துறைத் திறமைக்காக நினைவுகூரப்படுகிறார். பண்டைய வரலாற்றாசிரியர் எரோடோட்டசு இவரை "ஏதென்சில் சிறந்த, மிகவும் மரியாதைக்குரிய மனிதர்" என்று குறிப்பிடுகிறார்.[1] மேலும் இவர் பிளேட்டோவின் சாக்ரடிக் உரையாடல்களிலும் இதேபோன்ற மரியாதைக்குரிய புகழ்ச்சியைப் பெற்றார்.

வாழ்கை குறிப்பு

[தொகு]
அரிஸ்டைட்ஸ் மற்றும் குடிமக்கள்

அரிஸ்டைட்ஸ் ஓரளவு செல்வ வளம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது ஆரம்பகால வாழ்க்கையில், இவர் அரசியல்வாதியான கிளீசுத்தனீசைப் பின்பற்றி, ஏதெனிய அரசியலில் பிரபுத்துவக் அணியுடன் இணைந்தார் என்று மட்டுமே கூறப்படுகிறது. மராத்தான் போரில் இவர் தனது பூர்வீக பழங்குடி இனமான ஆன்டியோகிசின் படையணியில் இருந்தபோது ஏதென்சின் படைத் தலைவரால் முதலில் கவனிக்கப்பட்டார். மேலும் இவர் அடுத்த ஆண்டு ( 489-488 ) அர்ச்சன் என்ற பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏதென்சை ஒரு தரைப்படை சக்தியாகப் பராமரிக்கும் பழமைவாதக் கொள்கையைப் பின்பற்றி, தெமிஸ்ட்டோக்ளீஸ் முன்மொழிந்த கடற்படைக் கொள்கையின் முக்கிய எதிர்ப்பாளர்களில் ஒருவராக இவர் இருந்தார்.[2]

புளூட்டாக்கின் கூற்றுப்படி, அரிஸ்டைட்ஸ் மற்றும் தெமிஸ்டோக்கிள்ஸ் இடையேயான போட்டி அவர்களின் இளமை பருவத்தில் இருந்தே தொடங்கியது. 485 மற்றும் 482 க்கு இடையில் பல்வேறு வகையில் சொல்லப்படும் காலத்தில் அரிஸ்டைட்சு நாடு கடத்திப்பபட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இரு தலைவர்களுக்கிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், அரிஸ்டைட்சை முன்பின் காணாத எழுத்தறிவில்லாத வாக்காளர் ஒருவர், இவரை அணுகி, அரிஸ்டைட்சை ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்துதல்) செய்ய ஏதுவாக அவரது பெயரை தனது ஆஸ்ட்ராகானில் (வாக்குச் சீட்டு) எழுதுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு இவர் அரிஸ்டைட்ஸ் உங்களுக்கு ஏதாவது தீங்கு இழைத்துவிட்டாரா ? என்று கேட்டார். "இல்லை," என்று பதில் வந்தது, "எனக்கு அவரைத் தெரியாது, ஆனால் எல்லா இடங்களிலும் அவரை 'நேர்மையானவர்' என்று அழைப்பது எனக்கு எரிச்சலைத் தருகிறது." என்றார்.[2] அரிஸ்டைட்ஸ் பின்னர் தனது பெயரையே அவரது வாக்குச்சீட்டில் (ஓட்டு சில்லையில்) எழுதி தந்தார்.[3]

480 இன் ஆரம்பத்தில், பாரசீக படையெடுப்பாளர்களிடமிருந்து ஏதென்சைப் பாதுகாக்க உதவுவதற்காக நாடுகடத்தப்பட்டவர்களை திரும்ப அழைக்கும் ஆணையின் மூலம் அரிஸ்டைட்ஸ் ஆதாயம் அடைந்தார். மேலும் 480-479 ஆம் ஆண்டிற்கான இராணுவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏதென்சின் படையானது குலம் வாரியாக பத்தாக பிரிக்கப்பட்டிருக்கும். அதில் குலத்துக்கு ஒரு படைத்தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர். போர்களின்போது இந்த பத்து படைதலைவர்களில் இருந்து தினமும் ஒருவர் தலைமை படைத்தலைவராக இருப்பர். மாரத்தான் போரின்போது மில்டியாடீசு தலைமைத் தளபதியாக சிறப்பாக செயல்பட்டார். அதையடுத்த நாள் அரிஸ்டைட்சுக்கு தலைமைத் தளபதியாக இருக்கும் பொறுப்பு சுழற்சி முறையில் வந்தது. ஆனால் போர் தந்திரம் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்தப் பொறுப்பை மில்டியாடீசுக்கே இவர் விட்டுக் கொடுத்தார். சலாமிஸ் போரில், இவர் தெமிஸ்டோக்கிள்சுக்கு ஆதரவாக இருந்தார். மேலும் சைட்டாலியா தீவில் ஏதெனியன் காலாட்படையை இறக்கி, அங்கு நிறுத்தப்பட்ட பாரசீக படையை அழித்ததன் மூலம் வெற்றி வாகை சூடினார்.[2]

கிமு 479 பிளாட்டியா போரில் வரவிருக்கும் பாரசீகத் தாக்குதலைப் பற்றி மாசிடோனின் முதல் அலெக்சாந்தரால் அரிஸ்டைட்ஸ் எச்சரிக்கப்படுகிறார்.

479 இல், இவர் மீண்டும் இராணுவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பிளாட்டியா போரில் ஏதெனியன் படைகளின் தளபதியாக சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இராணுவத்தில் சிலரிடையே இருந்த சதியை இவர் அடக்கியதாகவும் கூறப்படுகிறது. இவர் தொடர்ந்து ஏதென்சில் முக்கிய பதவியை வகித்தார். ஏதென்சின் மதில் சுவர்களை மறுகட்டமைப்பதில் எசுபார்டான்களை விஞ்சுவதற்கு இவர் உதவியதாகக் கூறப்படுகிறது.[2]

இவர் ஏதென்சில் இறந்ததாக சில எழுத்தாளர்களால் கூறப்படுகிறது. மற்றவர்கள் கருங்கடலுக்கான பயணத்தில் இவர் இறந்தார் என்கின்றனர். இவர் இறந்த தேதியை நேபோஸ் 468 எனக் குறிப்பிடுகிறார். இவரது பண்ணை பாரசீக படையெடுப்புகளால் மோசமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏனெனில் இவரை அடக்கம் செய்வதற்கான செலவுகளைக்கூட சமாளிக்க போதுமான பணத்தை இவர் விட்டுச்செல்லவில்லை. மேலும் 4 ஆம் நூற்றாண்டில் கூட இவரது சந்ததியினர் அரசு ஓய்வூதியங்களைப் பெற்றனர் என்பது அறியப்படுகிறது.[2]

நினைவுச்சின்னங்கள்

[தொகு]

அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள லூயிஸ்பர்க் சதுக்கத்தில் அரிஸ்டைட்ஸ் (பாஸ்டன்) சிலை உள்ளது . 11806 ஆம் ஆண்டு சார்லஸ் பிரோகாஸ் வரைந்த அரிஸ்டைட்ஸ் ஓவியம் பிரெஞ்சு நகரமான துலூசில் உள்ள மியூசி டெஸ் அகஸ்டின்சில் உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Herodotus, Histories, 8.79
  2. 2.0 2.1 2.2 2.3 2.4  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Caspari, Maximilian Otto Bismarck (1911). "Aristides". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 2. Cambridge University Press. 494–495. 
  3. Plutarch.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசுடடைடீசு&oldid=3748502" இலிருந்து மீள்விக்கப்பட்டது