உள்ளடக்கத்துக்குச் செல்

துலூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துலூஸ் (பிரெஞ்சு: Toulouse) என்பது பிரான்சின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 590 கி.மீ. தூரத்தில் உள்ளது. 2008 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 439,553 அதாவது பிரான்சிலேயே நான்காவது (பாரிஸ், மர்சேய் மற்ற லியோனுக்கு பிறகு) மிகப்பெரிய நகரமாகும்.

ஏர்பஸ் (Airbus), ஐரோப்பிய நிறுவனத் தலைமையகம் துலூஸில் தான் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் துலூஸ் - பிளாக்னாக், பாரிஸ் ஆர்லி இடையேயான விமானப் பாதை பரபரப்பான விமானப் பாதை ஆகும். இது 2014 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் பயணிகளைக் கொண்டு சென்றது.[1] எல் எக்ஸ்பிஸ் மற்றும் சாலன்ஜ் என்பவற்றின் தரவரிசைப்படி பிரான்சின் ஆற்றல் வாய்ந்த நகரங்களில் துலூஸும் ஒன்றாகும்.[2]

ஐந்தாம் நூற்றாண்டில் விசிகோதிக் இராச்சியத்தின் தலைநகராகவும், இடைக்காலத்தின் பிற்பகுதியில் லாங்குவேடோ மாகாணத்தின் தலைநகராகவும், நவீன காலத்தின் ஆரம்பத்திலும் தலைநகராக திகழ்ந்தது. தற்போது தெற்கு பிரான்சின் ஆக்சிடோனியா பிராந்தியத்தின்  தலைநகராகும். இளஞ்சிவப்பு டெரகோட்டா செங்கற்களால் ஆன தனித்துவமான கட்டிடக்கலை கொண்ட இந்நகரம் லா வில்லே ரோஸ் ("பிங்க் சிட்டி") என்ற புனைப்பெயரைப் கொண்டது. தூலுஸில் யுனேஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் இரண்டு கணக்கிடப்பட்டுள்ளது.[3]

புவியியல்

[தொகு]

இந்நகரம் கரோன் நதிக்கரையில் மத்தியதரைக்கடலில் இருந்து  150 கிலோமீற்றர் (93 மைல்) தூரத்திலும், அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து 230 கி.மீ. (143 மைல்) தொலைவிலும், பாரிசில் இருந்து 680 கி.மீ. (420 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. துலூஸ் பிரான்சின் தெற்கில் அமைந்துள்ளது. மத்திய தரைக்கடல் கடல் மற்றும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் இடையிலான தொடர்பு அச்சில் ஹாட்-கரோன் துறையின் வடக்கே காணப்படுகிறது.

காலநிலை

[தொகு]

கோப்பனின் காலநிலை வகைப்பாட்டுக்கமைய (எல்லைக்கோடு சி.எஃப்./ சி.எஃப்.பி)  துலூஸ் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டது. கோடை மாதங்களில் அதிக மழைப்பொழிவு மத்திய தரைக்கடல் காலநிலையில் வகைப்படுத்தப்படுவதை தடுக்கன்றது.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

2015 ஆம் ஆண்டில் சனவரி மாத சனத்தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தில் 479,638 மக்கள் வசிக்கின்றனர்.[4] 2010 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி பெருநகர் பகுதியின் எல்லைகளுக்குள் 1,330,954 மக்களும், 2006 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி பெருநகர் பகுதியின் எல்லைகளுக்குள் 1,169,865 மக்கள்தொகையையும் கொண்டிருந்தது.[5] அதாவது பெருநகரப் பகுதி 2006 மற்றும் 2011 க்கு இடையில் ஆண்டுக்கு + 1.5% மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது. இது பிரெஞ்சு பெருநகரப் பகுதியின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். பிரான்சின் பாரிஸ், மார்சேய், லியோன் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியான நான்காவது பெரிய நகரமாகும். துலூஸில் சுமார் 2,500 யூத குடும்பங்கள் இருப்பதாக  உள்ளூர் யூத குழுவொன்று மதிப்பிடுகிறது. முஸ்லீம் சங்கமொன்று சுமார் 35,000 முஸ்லிம்கள் நகரத்தில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.[6]

கல்வி

[தொகு]

துலூஸ் பல்கலைக்கழகம் ஐரோப்பாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகம் 1229 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் 103,000 மாணவர்களைக் கொண்ட இந்த பல்கலைக்கழகம் பாரிஸ், லியோன், லில்லி பல்கலைக்கழகங்களுக்குப் அடுத்தப்படியான பிரான்சில் நான்காவது பெரிய பல்கலைக்கழக வளாகமாகும்.[7]

பொருளாதாரம்

[தொகு]

இந்நகரில் வானுர்தியல், விண்வெளி, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழினுட்பம் என்பன முக்கிய தொழிற் துறைகளாகும். ஏர்பஸ் இன் தலைமையகம் துலூசில் அருகில் பிளாக்னக்கில் அமைந்துள்ளது. ஏர்பஸின் பிரான்ஸ் பிரிவு துலூஸில் அதன் பிரதான அலுவலகத்தைக் கொண்டுள்ளது.[8] கான்கார்ட் சூப்பர்சோனிக் விமானமும் துலூஸில் கட்டப்பட்டது.

சான்றுகள்

[தொகு]
  1. "Infographic / Air transport in Europe Aertec, Eurostat". Archived from the original on 2017-09-04.
  2. "Toulouse, métropole la plus dynamique". ladepeche.fr (in பிரெஞ்சு). Retrieved 2019-11-03.
  3. "Toulouse's Saint Sernin, Largest Romanesque Church in Europe". Europe Up Close (in அமெரிக்க ஆங்கிலம்). 2010-06-01. Retrieved 2019-11-03.
  4. "Populations légales 2013 − Commune de Toulouse (31555) | Insee". www.insee.fr. Retrieved 2019-11-03.
  5. "Résultats de la recherche | Insee". insee.fr. Retrieved 2019-11-03.
  6. "Killings sour good life for high-flying Toulouse". Archived from the original on 2015-10-16.
  7. "Toulouse, France travel guide". Travel S Helper (in ஆங்கிலம்). 2017-07-04. Archived from the original on 2019-11-03. Retrieved 2019-11-03.
  8. "Contacts". Archived from the original on 2010-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலூஸ்&oldid=4253672" இலிருந்து மீள்விக்கப்பட்டது