உள்ளடக்கத்துக்குச் செல்

அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், 1967.

அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும் என்னும் இக் கட்டுரை, ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு முன்னர் அபுதாபி அமீரகத்தில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகள், அந்த அமீரகத்தின் அஞ்சல் வரலாறு என்பன தொடர்பானது ஆகும். 1964 ஆம் ஆண்டிலேயே அபுதாபியில் முதன் முதலாக அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.

பின்னணி[தொகு]

1972 ஆம் ஆண்டுக்கு முன்னர், அபுதாபி ஒரு தனியான சேக்ககம் (sheikdom) ஆக விளங்கியது. "கடற்கொள்ளையர் கரை" என முன்னர் அறியப்பட்ட கிழக்கு அரேபியாவின் பாரசீகக் குடாக் கரையோரம் ஓமானுக்கும், கட்டாருக்கும் இடையில் அமைந்திருந்த இவ்வாறான சேக்ககங்கள் பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் ஒன்று செய்திருந்தன. இதனால் இவை ஒப்பந்த நாடுகள் எனப்பட்டன. இவற்றுள் ஏழு சேக்ககங்கள் பின்னர் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என்னும் நாட்டை உருவாக்கின. இவ்வேழு சேக்ககங்களும் மொத்தமாக ஏறத்தாழ 32,000 சதுர மைல்கள் (83,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டவையாக இருந்தன. இவற்றுள் பெரியதான அபுதாபி மட்டும் 26,000 சதுர மைல்கள் (67,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டது. அபுதாபியின் தலை நகரமான அபுதாபி நகரம் தலைநிலக் கரைக்கு அப்பாலிருந்த ஒரு தீவில் அமைந்திருந்தது.

பிரித்தானியாவுடனான ஒப்பந்தம் 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியே முடிவடைந்து விட்டது. எனினும் ஐக்கிய அரபு அமீரகம் அமைப்பதற்கான முடிவு 1971 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் தேதி எடுக்கப்பட்டு, 1972 ஆகத்து முதலாம் தேதி நாடு உருவானது. ஆனாலும் முதல் அஞ்சல்தலைகள் 1973 சனவரி முதலாம் தேதியே வெளியிடப்பட்டன.

அபுதாபிக்கு உரிய டாசு தீவில் 1956 - 1960 ஆண்டுக் காலப்பகுதியில் முதன் முதலாக எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. இத் தீவு தலை நிலத்திலிருந்து ஏறத்தாழ 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தலை நிலத்தில் எண்ணெய் உற்பத்தி 1962 ஆம் ஆண்டில் தொடங்கியது.

அஞ்சல் சேவைகள்[தொகு]

1960 டிசம்பரில், கிழக்காபிரிக்காவுக்கான பிரித்தானிய அஞ்சல் முகவரகத்தின் அஞ்சல்தலைகள் டாசு தீவில் இருந்த கட்டிடத் தொழிலாளருக்கு வழங்கப்பட்டு வந்தன. எனினும், இச் சேவை பகரெயினில் இருந்தே நிர்வாகம் செய்யப்பட்டது. கடிதங்களும் பகரெயின் அஞ்சல் முத்திரைகளுடனேயே அனுப்பப்பட்டதனால் கடிதங்கள் டாசு தீவில் இருந்து அனுப்பப்பட்டமைக்கான தெளிவான சான்றுகள் இருக்கவில்லை. 1963 மார்ச் 30ஆம் தேதி, பிரித்தானிய முகவரகம் ஒன்று அபுதாபியில் தொடங்கப்பட்டு, முகவரக அஞ்சல்தலைகள் அங்கிருந்து வழங்கப்பட்டன.[1] டாசுத் தீவிலிருந்து செல்லும் அஞ்சல்கள் இன்னும் பகரெயினில் இருந்தே நிர்வகிக்கப்பட்ட போதும், இப்போது அஞ்சல்களில் அபுதாபி ஒப்பந்த நாடுகள் அஞ்சல் முத்திரை இடப்பட்டது.

அபுதாபியின் முதல் அஞ்சல்தலைகளாக 1964 மார்ச் 30 ஆம் தேதி ஒரு "நிலைத்த அஞ்சல்தலைத் தொடர்" (definitive series) வெளியிடப்பட்டது. இது அப்போதைய ஆட்சியாளர் சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியானின் படத்தைத் தாங்கி வெளிவந்தது. இத் தொடர் 11 பெறுமதிகளுடன் கூடிய அஞ்சல் தலைகளை உள்ளடக்கியிருந்தது. இவை ரூபா, நயா பைசா ஆகிய இந்திய நாணயப் பெறுமானங்களில் வெளியிடப்பட்டிருந்தன.[2] அபுதாபிக்கான அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டிருந்தும், பிரித்தானிய முகவரகத் தபால்தலைகள் 1966 ஆம் ஆண்டில் அவை திரும்பப் பெறப்படும் வரை அபுதாபியிலும், டாசு தீவிலும் பயன்பாட்டில் இருந்தன. 1966 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி டாசு தீவில் ஒரு அஞ்சல் நிலையம் நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து டாசு தீவின் அஞ்சல் சேவை நிர்வாகம் அபுதாபியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது.

1966ல் பிரித்தானியாவுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபின்னர், அபுதாபி, தினார் = 1000 பில்சு என்னும் நாணயத்தைக் கொண்ட புதிய நாணய முறையை நடைமுறைப்படுத்தி, தனக்குச் சொந்தமாக ஒரு அஞ்சல் சேவையையும் உருவாக்கிக் கொண்டது. தொடக்கத்தில் பழைய அஞ்சல்தலைகளின்மீது புதிய பெறுமானங்களைப் பொறித்துப் பயன்படுத்தினர். பின்னர் அக்காலத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியானின் உருவம், அபுதாபி அமீரகக் கொடி, கழுகு என்பன பொறிக்கப்பட்ட "நிலைத்த அஞ்சல்தலைத் தொடர்" வெளியானது.[3] 1972 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவாகும் வரை இதே அடிப்படையிலேயே அபுதாபி அஞ்சல்தலைகளை வெளியிட்டு வந்தது. 1964 ஆம் ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டுவரை அபுதாபி 95 தபால்தலைகளை வெளியிட்டது.

அபுதாபி அஞ்சல்தலைகள்[தொகு]

இவற்றையும் காணவும்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. Stampsite: The Encyclopaedia of Postal Authorities, Abu Dhabi
  2. Abu Dhabi Stamps and Postal History பரணிடப்பட்டது 2020-09-23 at the வந்தவழி இயந்திரம் அபுதாபியின் முதல் நிலைத்த 11 அஞ்சல் தலைகள்
  3. Zahedi, Mahbub Jamal., Gulf Post – Story of the Post in the Gulf, Sanaa Publications, Karachi, 1994, p. 74