அசர்பைஜானில் கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசர்பைஜானில் கருக்கலைப்பு (Abortion in Azerbaijan) என்பது 12 வாரங்கள் வரை மற்றும் 12 முதல் 28 வாரங்களுக்கு இடைப்பட்ட குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கோரிக்கையின் பேரில் சட்டப்பூர்வமாக செய்யபடுகிறது. [1] [2] அசர்பைஜானின் தற்போதைய கருக்கலைப்புச் சட்டம் 1955 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் கருக்கலைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்தின் குடியரசாக இருந்தபோது ( அசர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசு என இருந்தது), 1991 இல் அசர்பைஜான் சுதந்திரமடைந்த பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 1965 மற்றும் 1987 க்கு இடையில் கருக்கலைப்பு விகிதம் மிக அதிகமாகவே இருந்தது (20 முதல் 28% வரை). [3] சுதந்திரத்திற்குப் பிறகு, கருக்கலைப்பு விகிதம் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து, 2000க்குப் பிறகு ஒப்பீட்டளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (12 முதல் 14% வரை). [3] 2014 இல், அசர்பைஜானில் 13.8% கருத்தரிப்புகள் கருக்கலைப்பில் முடிவடைந்தன. இது 2005 இல் (12.1%) பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த அளவிலிருந்து சிறிது உயர்வு. [3]

வரலாறு[தொகு]

முன்னாள் சோவியத் ஒன்றியத்தைப் போலவே, 1992 க்கு முன்னர் அசர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசு என அறியப்பட்ட அசர்பைஜான், முன்னாள் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் கருக்கலைப்பு சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தது. இதன் விளைவாக, அசர்பைஜானில் கருக்கலைப்பு நடைமுறைகள் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் இருந்ததைப் போலவே இருந்தன. [4]

கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சுதந்திரத்திற்கு முந்தைய அசர்பைஜானின் நிலைமையைப் பற்றியது. சுதந்திரத்திற்குப் பிறகு கருக்கலைப்புச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. [4]

27 ஜூன் 1936இல் பிறப்பிக்கப்பட்ட சோவியத் ஆணை உயிருக்கு ஆபத்து, ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் அல்லது பெற்றோரிடமிருந்து பெறக்கூடிய ஒரு தீவிர நோய் இருக்கும் சூழ்நிலைத் தவிர கருக்கலைப்பு செய்வதைத் தடை செய்தது. கருக்கலைப்பு, மருத்துவமனை அல்லது மகப்பேறு இல்லத்தில் செய்யப்பட வேண்டும். மேற்கூறிய அறிகுறிகளில் ஒன்று கூட இல்லாமல் மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கு ஒரு வருடம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். கருக்கலைப்பு சுகாதாரமற்ற சூழ்நிலையில் அல்லது சிறப்பு மருத்துவக் கல்வி இல்லாத ஒருவரால் செய்யப்பட்டிருந்தால், மூன்றாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை வழங்கப்படும். ஒரு பெண்ணை கருக்கலைப்பு செய்ய தூண்டிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கருக்கலைப்பு செய்த ஒரு கர்ப்பிணிப் பெண் கண்டிக்கப்படுவதோடு, மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால் 300 ரூபிள் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

கர்ப்பத்தின் முதல் பன்னிரெண்டு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்புக்கான காரணங்களின் இந்த நீட்டிப்பு, கருத்தடை தொடர்பான அரசாங்கத்தின் தெளிவற்ற அணுகுமுறையுடன் இணைந்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கருக்கலைப்புகளின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்புக்கு வழிவகுத்தது. உயர்தர நவீன கருத்தடை சாதனங்களின் பற்றாக்குறை மற்றும் குறைந்த நம்பகத்தன்மை கொண்ட பாரம்பரிய முறைகளை நம்பியிருப்பது ஆகியவை கருக்கலைப்புக்கான அதிக நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் பிற காரணிகளாகும். தம்பதிகளிடையே கருத்தடை மற்றும் அடிக்கடி கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பற்றிய அறிவு இல்லாமை; மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற நிபுணர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாதது போன்றவையும் ஒரு காரணமாக இருந்தது. 1989 இல், முழு முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் ஆணுறைகள் கிடைப்பது தேவையில் 11 சதவீதம் மட்டுமே இருந்தது; கருப்பையக சாதனங்கள் (IUDs), 30 சதவீதம்; மாத்திரைகள், 2 சதவீதம் என இருந்தது. அசர்பைஜானில் 15-49 வயதுடைய பெண்களில் 6.5 சதவீதம் பேர் கருத்தடை முறையைத் தவறாமல் பயன்படுத்துகின்றனர். 10.1 சதவீதம் பேர் கருத்தடை முறையைப் பயன்படுத்துகின்றனர். 41.9 சதவீதம் பேர் கருத்தடை முறையைப் பயன்படுத்தவில்லை என 1990 ஆம் ஆண்டு அனைத்து ஒன்றிய மாதிரி ஆய்வுகளின் தரவுகள் குறிப்பிடுகின்றன. 35.3 சதவீதம் பேருக்கு கருத்தடை பற்றி எதுவும் தெரியாமல் இருக்கின்றனர்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. "ICMA - Laws on Abortion - Azerbaijan". International Consortium for Medical Abortion (ICMA).
  2. "Azerbaijan: Abortion Law". Womenonwaves.com.
  3. 3.0 3.1 3.2 "Historical abortion statistics, Azerbaijan". Johnstonsarchive.net. 12 September 2015. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.
  4. 4.0 4.1 4.2 Abortion – Azerbaijan. United Nations Publications. 2001. https://www.un.org/esa/population/publications/abortion/doc/azerba1.doc. பார்த்த நாள்: 1 December 2014. Abortion – Azerbaijan. United Nations Publications. 2001. Retrieved 1 December 2014.