தொலை அளப்பியல்
தொலை அளப்பியல் (Telemetry) என்பது ஓர் தானியங்கி தகவல் தொடர்பு செயல்பாடாகும். அணுக இயலாத தொலைதூர பொருள்களிலிருந்து சாதாரண முறைகளில் பெற இயலாத தகவல்களை அளந்தறியும் தொழில்நுட்பமே தொலை அளப்பியல் எனப்படும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் கண்காணிப்பதற்காக தகவல் ஏற்பிக் கருவிகளுக்கு அனுப்பப்படுகின்றன[1].தொலை என்ற சொல் tele என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தும் அளப்பியல் என்ற சொல், அளவு என்ற பொருள் கொண்ட metron என்ற சொல்லில் இருந்தும் பெறப்பட்டவையாகும். திட்டம் செயல்படுவதற்குத் தேவையான வெளிப்புற அறிவுறுத்தல்களும் தரவுகளும் தொலை அளப்பியலை ஒத்த ஒருபகுதியேயாகும்[2].
பொதுவாக இச்சொல் கம்பியில்லா தகவல் மாற்ற வழிமுறைகளைக் குறிக்கிறது. (எ.க. வானொலி, மீயொலி அல்லது அகச்சிவப்பு அமைப்புகள்). என்றாலும், தொலைபேசி, கணிப்பொறி வலையமைப்பு, ஒளியியல் இணைப்புகள் அல்லது பிற கம்பிவழி தகவல்தொடர்பு சாதனங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் தகவல் மாற்றங்களையும் இச்சொல் உள்ளடக்கியுள்ளது எனலாம்.உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம், குறுஞ்செய்தி போன்ற அதிநவீனமான, குறைந்த செலவில் எங்கும் இருக்கின்ற தொலை அளப்பியல் அமைப்புகள் தற்பொழுது தகவல் பெறுதல் மற்றும் மாற்றுதல் செயலில் பெருஞ் செல்வாக்கு பெற்று வருகின்றன.
தொலையளவி என்பது தொலைவிலுள்ள எந்த அளவையும் அளக்கக்கூடிய ஒரு கருவியாகும். இக்கருவியில் உணரி, செலுத்தப் பாதை, காட்சிமுறை, பதிவு செய்தல் அல்லது கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகிய பகுதிகள் உள்ளன. தொலை அளப்பியலில் பயன்படுத்தப்படும் இயற்கருவிகள் தொலையளவிகள் எனப்படுகின்றன. மின்னணு அமைப்புகள் பெரும்பாலும் தொலை அளப்பியலில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வமைப்புகளுக்கு கம்பிவழி அல்லது கம்பியிலா அமைப்புகள், ஒப்புமை அல்லது இலக்க முறைகள் போன்ற நுட்பங்கள் பயன்படுகின்றன. இவை தவிர இயந்திரவியல், நீரியல் மற்றும் ஒளியியல் நுட்பங்களை தொலை அளப்பியலில் பயன்படுத்துவதும் சாத்தியமேயாகும்[3]
வரலாறு
[தொகு]தொலை அளப்பியல் தகவல்கள் கம்பி வழியாக அனுப்பும் வழக்கம் 19 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது. முதல் தரவு-பரப்பு சுற்றுகள் முதன்முதலில் 1845 ஆம் ஆண்டு உருசியாவின் சார் குளிர்கால அரண்மனைக்கும் இராணுவத் தலைமையகத்திற்கும் இடையே உருவாக்கப்பட்டது. 1874 ஆம் ஆண்டில், பிரஞ்சு பொறியாளர்கள் மோண்ட் பிளாங்க் என்ற மலைமீது ஒரு தரவு பரப்பு சுற்றமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பின் உணரிகள் மூலமாக வானிலை மற்றும் பனியாழம் முதலியவற்றின் தரவுகள் நேரலையாக பாரிசுக்கு அனுப்பப்பட்டன.1901-ஆம் ஆண்டில் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் சி மிச்சாக் செல்சின், ஒருங்கிணைக்கப்படும் சுழற்சி தகவலை அனுப்பும் ஒரு சுற்றை உருவாக்கி அதற்கு காப்புரிமை் பெற்றார். 1906 ஆம் ஆண்டில், உருசியாவிலுள்ள புல்கோவோ வானிலை ஆய்வகத்திற்கு தொலை அளப்பியல் தகவல்களை அனுப்ப சில அதிர்வு நிலையங்கள் கட்டப்பட்டன. 1912 ஆம் ஆண்டில், பொதுநலவாய எடிசன் தனது பொறியியல் மின்கட்டமைப்பைக் கண்காணிப்பதற்காக ஒரு தொலை அளப்பியல் அமைப்பை உருவாக்கினார். 1913 மற்றும் 1914 ஆம் ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட பனாமா கால்வாயின் நீரிருப்பு நிலை மற்றும் பூட்டுகளை கண்காணிக்க விரிவான தொலை அளப்பியல் அமைப்பைப் பயன்படுத்தினார்.[4]
1930 ஆம் ஆண்டில் பிரான்சைச் சேர்ந்த இராபர்ட் பியுரோவும் உருசியாவைச் சேர்ந்த பாவெல் மோல்ச்சனோவும் ஒருங்கே உருவாக்கிய கம்பியிலி வானிலைத் தரவுப் பதிவுக் கருவிகளில் கம்பியிலா தொலை அளப்பியல் முறை முதலில் தோற்றம் கண்டது. கம்பியிலா மோர்சு தந்திக்குறிப்புக்கு ஏற்றவாறு வெப்பம் மற்றும் அழுத்த அளவுகள் மோல்ச்சனோவின் அமைப்பு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டன. செருமனியின் வி2 ஏவூர்தி மிகப்பழமையான மெசினா எனப்படும் பல்கூட்டுச் செலுத்துகை வானொலி குறியீட்டு அமைப்புகளை பயன்படுத்தி தகவல்களை அனுப்பி வந்தது. ஆனால் இத்தரவுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று வெர்ன்னெர் வான் பிராவ்ன் சுட்டிக் காட்டினார். அதுமட்டுமின்றி இருகண் தொலைநோக்கிகளால் ஏவுகணையை கண்காணிப்பதற்கு அவை மிகவும் பயனுள்ளதாக இருக்குமெனவும் குறிப்பிட்டார். அமெரிக்கா மற்றும் உருசியாவில் மெசினா குறியீட்டு அமைப்பு விரைவில் புதிய திட்டங்களால் கைவிடப்பட்டது. இவ்விரு நாடுகளும் துடிப்புநிலைக் குறிப்பேற்றம் என்ற நவீன அமைப்புமுறையை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தன. [5]
1940 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட தொடக்கக் கால சோவியத் ஏவுகணைகள் மற்றும் விண்வெளித் தொலை அளப்பியல் அமைப்புகள் துடிப்பு நிலை குறிப்பேற்றம் அல்லது துடிப்பு அகல குறிப்பேற்றம் என்ற முறையைப் பயன்படுத்தின. அமெரிக்காவிலும் தொடக்க காலங்களில் இதே முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பின்னர் துடிப்பு குறி குறிப்பேற்றம் என்ற முறைக்கு மாறிவிட்டது. சோவியத்தின் பிற்காலத்தைய கிரகங்களுக்கு இடையேயான சோதனைகள் தேவையான வானொலி அமைப்புகளைப் பயன்படுத்தின. தொலை அளப்பியல் தரவுகளை டெசிமீட்டர் பட்டையெனில் துடிப்பு குறி குறிப்பேற்ற முறையிலும் சென்டிமீட்டர் பட்டையெனில் துடிப்பு நிலை குறிப்பேற்ற முறையிலும் பரப்பின.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telemetry: Summary of concept and rationale". NASA report. SAO/NASA ADS Physics Abstract Service. பார்க்கப்பட்ட நாள் 19 December 2014.
- ↑ Mary Bellis, "Telemetry"
- ↑ Bakshi et al., pages 8.1–8.3
- ↑ Mayo-Wells, "The Origins of Space Telemetry", Technology and Culture, 1963
- ↑ Joachim & Muehlner, "Trends in Missile and Space Radio Telemetry" declassified Lockheed report
- ↑ Molotov, E. L., Nazemnye Radiotekhnicheskie Sistemy Upravleniya Kosmicheskiymi Apparatami