மறைக்கப்பட்ட இந்தியா (நூல்)
மறைக்கப்பட்ட இந்தியா | |
நூலாசிரியர் | எஸ். ராமகிருஷ்ணன்[1] |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | வரலாறு |
வெளியீட்டாளர் | விகடன் பிரசுரம் |
வெளியிடப்பட்ட நாள் | 2013 |
பக்கங்கள் | 351 [2] |
மறைக்கப்பட்ட இந்தியா எனப்படுவது தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு வரலாறு கட்டுரைத் தொகுப்பு நூலாகும். இந்நூலில் பல வரலாற்றுச் செய்திகளும் நிகழ்வுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. கால ஓட்டத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவர்கள், அறிஞர்கள், கல்வி நிலையங்கள், போராட்டங்கள் எனப் பலவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் இந்நூலாசிரியர். இந்த நூல் ஜூனியர் விகடன் என்னும் இதழில் ஒரு தொடராக வெளிவந்தது.[3]
உள்ளடக்கம்
[தொகு]'புத்தனைத் தேடிய பயணி' என்னும் தலைப்பில் யுவான் சுவாங் 17 ஆண்டுகள் பயணம் செய்த விவரங்களை விரிவாக எழுதியுள்ளார். மேலும் இந்தியாவின் மூன்று அடையாளங்கள், டாக்கா மஸ்லின் துணி, பிரம்ம சமாஜம், ஜந்தர் மந்தர், தாகூரின் கல்வி முறை, மொகலாய ஓவியங்கள், கொடுங்கோல் சமீன்தார்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள், இண்டிகோ புரட்சி, நேதாஜியின் டோக்யோ கேடட்ஸ், பஞ்சாபிகள் படுகொலை என்னும் பொருள்களில் பல வரலாற்றுத் தகவல்களை ஆசிரியர் வழங்கியுள்ளார்.
நூலின் அரிய செய்திகளில் சில
[தொகு]- தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள 'சத்திய மேவ ஜெயதே' என்னும் தொடர் முண்டக உபநிடத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்று.
- காங்கிரசு வானொலி அல்லது இரகசிய வானொலி என்று அழைக்கப்பெற்ற ஒலிபரப்பு நிலையம் உஷா மேத்தா என்னும் குஜராத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட பெண்மணியால் தோற்றுவிக்கப்பட்டது.
- பருத்தித் துணிகளுக்கு நீல வண்ணம் ஏற்றுவதற்குப் பயன்படும் அவுரிச் செடியை விளைவிக்க விவசாயிகளைப் பிரித்தானிய அரசு கட்டாயப் படுத்தியது. அவுரிச் செடியைப் பயிரிட மாட்டோம் என்று எதிர்த்துப் போராடியவர்களைத் துப்பாக்கியைக் காட்டியும் இராணுவத்தை வரவழைத்தும் ஒடுக்கினர்.
- 19 ஆம் நூற்றாண்டில் படித்த உயர்வகுப்பு பிரித்தானிய இளைஞர்கள் பலர் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து விட்ட காரணத்தால் நல்ல மாப்பிள்ளகளைத் தேடி வெள்ளைக்கார இளம்பெண்கள் கப்பல் கப்பலாக இந்தியாவுக்கு வந்தனர்.
- ராபர்ட்டு புரூசு புட் என்னும் நிலவியல் ஆய்வாளர் 1863 இல் சென்னையில் பல்லாவரம் அருகில் கைக் கோடரி ஒன்றைக் கண்டெடுத்தார். கல்லால் ஆன அந்தக் கைக்கோடரி 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்தியது என்று தமது ஆய்வு மூலம் கண்டுபிடித்தார்.
- இந்திய வரலாற்றில் எழுச்சி மிக்க விடுதலைப் போராளியாக விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தம் சுருக்கெழுத்து உதவியாளரான எமிலி என்னும் பெண்ணை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.
- மகாத்மா காந்திக்கு மகாத்மா பட்டம் கிடைப்பதற்கு முன் 1888 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி ஜோதிராவ் புலே என்னும் சமூக சீர்திருத்தவாதிக்கு மகாத்மா என்னும் பட்டத்தை புனேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வழங்கினர்.
- ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் (நாயர் ஜான்) என்பவர் ஜப்பானில் குடியேறி இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உதவினார். நேதாஜியின் இந்தியத் தேசியப் படைக்கு ஆதரவாக இருந்து செயல்பட்டார். ஜப்பானில் ஓர் உணவகத்தை நடத்தி வந்தார்.
- கிராண்ட் டிரங்க் சாலை எனப்படும் இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசால் உருவாக்கப் பட்டது. அதைப் போல தென்தமிழ் நாட்டின் பெருஞ்சாலை மங்கம்மாள் சாலை ஆகும்.
- பார்சி இனத்தைச் சேர்ந்த பிரபல தொழில் முதலாளி ஆர்.டி டாட்டா என்பவர் ஒரு பிரெஞ்சு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் டாட்டா பார்சி இனத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இந்த நூல் விகடன் பிரசுரத்தால் 2013 இல் வெளிவந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- மறைக்கப்பட்ட இந்தியா- ஆசிரியர் எசு.இராமக்கிருட்டிணன், விகடன் பிரசுரம் சென்னை.