திகார் சிறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திகார் சிறைகள்
இடம்புது தில்லி, இந்தியா
நிலைஉபயோகத்தில் உள்ளது
பாதுகாப்பு வரையறைஅதிகபட்ச காவல்
கொள்ளளவு5200
திறக்கப்பட்ட ஆண்டு1958
முந்தைய பெயர்{{{former_name}}}

திகார் சிறைகள் (இந்தி: तिहाड़ सेन्ट्रल क़ैदख़ाना, உருது: تہاڑ سینٹرل قیدخانہ Tihāṛ Central Qaidkhānā), அல்லது திகார் ஆசிரமம் (இந்தி: तिहाड़ आश्रम, உருது: تہاڑ آشرم), என்பது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை வளாகமாகும். இது இந்தியாவின் தலைநகர் புது தில்லிக்கு மேற்கே உள்ள சாணக்யா புரியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் அருகில் அரிநகர் உள்ளது.

இந்தச் சிறைச்சாலை ஓர் சீர்திருத்தப் பள்ளியாகப் பேணப்படுகிறது. இங்குள்ள கைதிகளை திறமைகள், கல்வி மற்றும் விதிகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னம்பிக்கை மிக்க சமூகத்தின் வழமையான நபர்களாக மாற்றுவதே இதன் தலையாய நோக்கமாகும். இங்கு தயாரிக்கப்படும் பொருள்களின் மேல் திகார் என்று முத்திரையிடப்படுகிறது.[1]

வரலாறு[தொகு]

  • 1952 ஆம் ஆண்டில் ஐ.நா சபை ஆலோசகர் டபிள்யூ.சி.ரெக்லெஸ் என்பவர் உதவியுடன் திட்டமிடப்பட்டது.[2]
  • இச்சிறைச்சாலை (சிறை எண் ஒன்று) 1958ல் 1273 பேருக்கானதாகக் கட்டப்பட்டது. முன்பு பஞ்சாப் மாநில நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பின்னர் 1966ல் தில்லி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1984ஆம் ஆண்டு மேலும் சில வசதிகள் செய்யப்பட்டு "திகார் சிறைகள்" என பெயரிடப்பட்டது.
  • இச்சிறை மூன்று பகுதிகளாக 1984இல் பிரிக்கப்பட்டது.[3]
  • 1974 இல் புதிய சிறைச்சாலை (சிறை எண் நான்கு) அமைக்கத் தொடங்கப்பட்டு 1980 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. குறைவான பாதுகாப்பு ஏற்பட்ட கைதிகள் இங்கு தங்க வைக்கப்பட்டதால் இந்த நான்காம் சிறை ’முகாம் சிறை’ (Camp Jail) என்றழைக்கப்பட்டது.[3]
  • 1984 ஆம் ஆண்டளவில் மொத்தம் 2500 கைதிகள் தங்கியிருந்தனர்.1985 ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை வெகு அதிகமாயிற்று. (1985=4000; 1989=6000; 1993க்குள் 8000 பேர்)[3].
  • சிறைத்துறை தலைமை ஆய்வாளராக (1993 மே-1995 மே) இருந்தபோது கிரண் பேடி பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அவரே இதன் பெயரை "திகார் ஆசிரமம்" என்று பெயரிட்டார். சிறைக்கைதிகளுக்கும் பணியாளர்களுக்கும் விபாசனா தியானம் செய்யும் முறைமையை செயலாக்கினார்.

இங்குள்ள வசதிகளைக் கொண்டு ஒரு சிறைக்கைதி இந்தியக் குடியுரிமைப் பணி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.[4]

  • திகார் சிறைச்சாலையினுள் நான்கு சிறைச்சாலைகள் அமைந்துள்ளன. சிறை எண் ஒன்றில் வெளிநாட்டவரும், பெண்களும், சிறை எண் இரண்டில் தண்டனைக் கைதிகள், சிறை எண் மூன்றில் தடா (இச்சட்டம் திரும்பப்பெறப்பட்டது) வில் கைதானவர்களும், சிறை எண் நான்கில் விசாரணைக் கைதிகள் மற்றும் பொருள் திருட்டில் கைதானவர்களும் இருந்ததாக தமது நூலில் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.[5]

திகார் சிறைகளில் வட இந்திய உணவு மட்டுமன்றி தென்னிந்திய உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன.[6]

குறிப்பிடத்தக்க கைதிகள்[தொகு]

  • ஜனதா அரசாங்கம் பதவிக்கு வந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி இங்கு சிறைவைக்கப்பட்டிருந்தார். சிறைக்கைதிகள் நடத்தப்படுகின்ற விதம் மற்றும் நிர்வாக சீர்கேடு கண்டு அதிர்ச்சியுற்றார். அவரை பெண்கைதிகள் பலர் நேரில் பார்த்து உண்மை நிலையை உணர்த்தினர். 1980 ஆம் ஆண்டு தாம் அதிகாரத்திற்கு வந்தபோது நீதிபதி ஏ.என்.முல்லா தலைமையில் சிறை சீர்திருத்தக் குழுவை நியமித்து உள்துறை அமைச்சர் ஜெயில் சிங்கையும் திகார் சிறைக்கு சென்று வருமாறு கேட்டுக் கொண்டார்.1983 மார்ச் மாதத்தில் முல்லா ஆய்வுக்குழு சிறைச் சீர்திருத்தத்திற்கென 693 பரிந்துரைகளை அளித்து தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது.இக்குழு திகார் சிறையை நாட்டின் மிகச்சிறந்த கட்டமைப்புள்ள சிறையென்று குறிப்பிட்டுள்ளது.[2]
  • பன்னாட்டு தொடர்கொலையாளி சார்லசு சோப்ராஜ் 16 மார்ச், 1986 அன்று திகாரிலிருந்து தப்பி ஓடினார்; இருப்பினும் சில நாட்களிலேயே பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்; தப்பிச் சென்றதற்காக கூடுதலாக பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பெப்ரவரி 17, 1997ஆம் ஆண்டில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார்.
  • 1994ஆம் ஆண்டு மேற்கத்திய இதழியலாளர்களை கடத்திய வழக்கில் டேனியல் பேர்ல் என்ற இதழியலாளரைக் கொன்ற குற்றவாளி அகமது ஒமர் சயீத் சேக்கிற்கு இங்கு பல்லாண்டு சிறைதண்டனை கிடைத்தது.
  • அசாம் காங்கிரசு அரசில் கல்வி அமைச்சராக இருந்த ரிபுன் போரா டேனியல் டோப்னோ கொலைவழக்கில் நடுவண் புலனாய்வால் சூன் 3, 2008இல் கைது செய்யப்பட்டு சூன் 7, 2008 அன்று திகார் சிறைகளில் அடைக்கப்பட்டார்.
  • 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையதாக நடுவண் புலனாய்வால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆ. ராசா, கனிமொழி, வினோத் கோயங்கா, சகீத் பல்வா மற்றும் சஞ்சய் சந்திரா இங்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.[7]
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி 2010 பொதுநலவாய விளையாட்டுக்களின்போது நிகழ்ந்த ஊழல்களில் தொடர்புள்ளவராக நடுவண் புலனாய்வால் குற்றஞ்சாட்டப்பட்டு இங்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.[7]

சுகாதாரக் கவலைகள்[தொகு]

ஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பயிற்சி மையத்தின்படி இங்குள்ள 11,800 கைதிகளில் 6% முதல் 8% வரை எச். ஐ. வி நோய் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது; இது தேசிய சராசரியை விட மிகக் கூடுதலாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mukharji, Arunoday (4 February 2007) "Brand Tihar is serious business" CNN-IBN
  2. 2.0 2.1 சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்: கிரண் பேடி ஐ.பி.எஸ்; பக்கம் 172-175 கவிதா வெளியீடு
  3. 3.0 3.1 3.2 சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்: கிரண் பேடி ஐ.பி.எஸ்; பக்கம் 40 கவிதா வெளியீடு
  4. Relief to Tihar inmate after he makes it to IAS பரணிடப்பட்டது 2009-02-17 at the வந்தவழி இயந்திரம் The Hindu, Feb 11, 2009
  5. சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்: கிரண் பேடி ஐ.பி.எஸ்; பக்கம் 38 கவிதா வெளியீடு
  6. The 2g effect idli,dosa,vada,sambar in tihar DNA India June 13,2011
  7. 7.0 7.1 India's Powerful Can't Escape Jail, BusinessWeek, June 9, 2011
  8. http://timesofindia.indiatimes.com/city/delhi/340-HIV-positive-prisoners-in-Tihar/articleshow/8650866.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=திகார்_சிறைகள்&oldid=3813658" இலிருந்து மீள்விக்கப்பட்டது