வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை
பெர்ச் நடவடிக்கையின் பகுதி

சண்டையில் சேதமடைந்த பிரிட்டானிய டாங்கு
நாள் ஜுன் 13 1944
இடம் வில்லெர்ஸ்-போக்காஜ், பிரான்சு
கீழ்நிலை உத்தியளவில் யாருக்கும் வெற்றியில்லை; நடவடிக்கையளவில் ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஜார்ஜ் எர்ஸ்கைன்
ஐக்கிய இராச்சியம் வில்லியம் ஹிண்டே
நாட்சி ஜெர்மனி ஃபிரிட்ஸ் பேயர்லெய்ன்
நாட்சி ஜெர்மனி ஹெய்ன்ஸ் வோன் வெஸ்டேர்ன்ஹாகன்
பலம்
1 ப்ரிகேட்

~60 டாங்குகள்

2 தற்காலிக பேட்டில் குரூப்புகள்
1 கனரக டாங்கு பட்டாலியனின் பகுதி

31–41 டாங்குகள்

இழப்புகள்
~217 பேர்
23–27 டாங்குகள்
தெரியவில்லை
8–15 டாங்குகள்
பொதுமக்கள் பலர்

வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை (Battle of Villers-Bocage) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.

பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. இச்சண்டைத் தொடரின் ஒரு பகுதியே வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை. கான் சண்டையின் போக்கில் கான் நகருக்கு மேற்கே ஜெர்மானிய பாதுகாவல் நிலைகளில் வில்லெர்ஸ்-போகாஜ் நகர் அருகே ஒரு தற்காலிக பலவீனப் பகுதி உருவானது. இதனைப் பயன்படுத்தி அவ்விடத்தில் ஊடுருவித் தாக்க பிரிட்டானிய 7வது கவச டிவிசனின் 22வது கவச பிரிகெட் அனுப்பப்பட்டது. ஜூன் 13ம் தேதி வில்லெர்ஸ் போக்காஜ் நகரைச் சுற்றி வளைத்துக் கைப்பற்ற 22வது பிரிகேடின் டாங்குகள் முயன்றன. ஆனால் வில்லெர்ஸ்-போக்காஜில் நிறுத்தப்பட்டிருந்த 101வது எஸ். எஸ் கனரக கவச பட்டாலியன் பிரிட்டானிய டாங்குகளைப் பொறி வைத்து தாக்கியது. பதினைந்தே நிமிடங்களில் பல பிரிட்டானிய டாங்குகள் மற்றும் கவச வண்டிகள் தகர்க்கப்பட்டன. இதனால் பிரிட்டானிய முன்னேற்றம் தடைபட்டது. ஆறு மணி நேர சண்டைக்குப் பிறகு ஜெர்மானியத் துணைப்படைகள் வந்து சேரவே, பிரிட்டானியப் படைப்பிரிவின் தளபதி பின் வாங்க முடிவு செய்தார். வில்லெர்ஸ்-போக்காஜ் ஜெர்மானியர் வசமே இருந்தது. அடுத்த இரு மாதங்களில் கான் நகரைச் சுற்றி கடும் சண்டை நிகழ்ந்தாலும் இந்த நகரில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவிலை. ஆகஸ்ட் 4ம் தேதி இந்நகரம் பெரிய மோதல் எதுவுமின்றி நேசநாட்டுப் படைகள் வசமானது.