விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 13, 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன.


மௌ டம் (Mau tam) என்பது 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் மரங்கள் எல்லாம் ஒருசேரப் பூத்து மடியும் ஒரு விந்தையான சுற்றுச்சூழல் நிகழ்வைக் குறிக்கும், மூங்கிற் சாவு எனப்பொருள்படும் மிசோ மொழிச் சொல்லாகும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது விழுக்காடு பகுதியில் மூங்கில் காடுகள் உள்ளன. மௌ டம் நிகழ்வின்போது மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து பெருச்சாளிகள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக நோய் பரவ வாய்ப்புண்டாகிறது.