விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 14, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலாங்கூர் மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு 'டாருல் ஏசான்' அல்லது 'மனத்தூய்மையின் வாழ்விடம்' எனும் அரபுமொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு. இந்த மாநிலத்தின் வடக்கே பேராக் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்திற்கு தெற்கே நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்கள் உள்ளன. கிழக்கே பகாங் மாநிலம் உள்ளது. ஆக தெற்கே ஜொகூர் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் தான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், மலேசியக் கூட்டரசு நிர்வாக மையமான புத்ராஜெயா போன்றவை இருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக ஷா ஆலாம் விளங்குகின்றது. மாநிலத்தின் அரச நகரம் கிள்ளான். மற்றொரு பெரிய புறநகர்ப் பகுதியாக பெட்டாலிங் ஜெயா இருக்கின்றது. பெட்டாலிங் ஜெயாவிற்கு 2006 ஜூன் 20-இல் மாநகர் தகுதி வழங்கப்பட்டது. சீனத் தளபதி செங் ஹோ 1400களில் சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவர் தன்னுடைய பயணக் குறிப்புகளில் கிள்ளான் ஆறு, சிலாங்கூர் டாராட் எனும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...


டேக்கார்ட்டின் தேற்றம் அல்லது 'தெக்காட்டின் தேற்றம்' என்பதுவடிவவியலில் பிரெஞ்சு அறிஞர் ரெனே டேக்கார்ட்டின் பெயரில் வழங்கும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு நான்கு வட்டங்களின் உறவைப் பற்றிய தேற்றமாகும். இவற்றை முத்தமிடும் நான்கு வட்டங்கள் என்றும் கூறுவதுண்டு. ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்குமாறு மூன்று வட்டங்கள் இருந்தால், மூன்று வட்டங்களையும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு நான்காவது வட்டத்தை வரைய இத்தேற்றத்தைப் பயன்படுத்தலாம். தொடு வட்டங்களைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து வந்துள்ளார்கள். பண்டைய கிரேக்கத்தில் (கி.மு. 300களில்) வாழ்ந்த பெர்கா ஊரைச் சேர்ந்த 'பெர்கா அப்போலினியசு' என்பவர் தொடுகோடுகள் பற்றி ஒரு தனி நூலே எழுதியுள்ளார். ஆனால் அது இன்று கிடைக்கும் அவர் நூல்களில் ஒன்றாக இல்லை. பின்னர் 'ரெனே டேக்கார்ட்' கி.பி. 1643 இல் பொஃகீமிய இளவரசியார் எலிசபெத் என்பாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்தத் தொடுவட்டங்களைப் பற்றி ஒரு தீர்வை ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார். இதன் பயனாக இத்தேற்றத்திற்கு இவர் பெயர் வழங்கலாயிற்று. மேலும்...