போடிநாயக்கனூர் குறுநில மன்னர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திர மாநிலத்தில் இருந்து பதினோராம் நூற்றாண்டில் தமிழகத்திற்குக் குடிபெயர்ந்த ராஜகம்பளம் மக்கள் மேற்கு மற்றும் கொங்கு பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். இவ்வாறாகக் குடிபெயர்ந்த ஒரு கூட்டத்தினர்தான் போடிநாயக்கனூர் பகுதியை ஆட்சி செய்த வம்சாவளியினர். இவர்கள் வேகிளியார் சில்லவார் என்னும் உட்பிரிவினைக் கொண்ட வம்சாவளியினர் .[1].

கேரளா வர்மா

அக்காலத்தில் இப்பகுதி கேரளா வர்மா என்பவற்றின் கட்டுபாட்டில் இருந்தது, ராஜகம்பளம் மக்கள் இங்கு வந்து இவற்றை வென்று தங்களது பகுதிகளாக்கிக் கொண்டனர். இங்கு இவர்கள் தனியாக சுயாட்சி செய்து வந்துள்ளனர். சக்க நாயக்கர் என்பவர் இங்கு சிறு ஆட்சியினை செய்து வந்துள்ளார். பாண்டியர்களிடம் நன்மதிப்புப் பெற்று வந்தனர்.

திருமலை போடி நாயக்கர்

முத்து முள்ளக்கான் என்பவன் ராயரின் எல்லைகளுக்குள் மிகுந்த படைகளுடன் செல்லத் திட்டமிட்டு வருகையில் அவனுக்கு எதிராக நின்று திருமலை நாயக்கரை காத்ததால் இவருக்கு மன்னர் திருமலை என்ற பட்டத்தினை தருகின்றார். இவருடைய குடும்பத்தினர் திருமலை என்ற பட்டத்தினை தங்களது முன்னால் சூடிகொள்கின்றனர்.

முதல் பாளையம்

அரியநாத முதலியார் மதுரை பாளையங்களை பிரிக்க திட்டம் இட்டபொழுது முதல் பாளையமாக பிரிக்கப்பட்ட பகுதி இவர்களுடையது தான். திருமஞ்சனம் காடு என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பிறகு இவர்களின் குடும்பப் பெயரான போடி என்பதை இனைத்து போடிநாயக்கனூர் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

திருமலை பங்காரு முத்து நாயக்கர்

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையம் என்ற முறை கொண்டு வந்த பின்னர் முதல் முதலாக பொறுப்பேற்றவர் இவரே. இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் கட்டியதோடு மண்டபபடியும் அளித்துள்ளார். இவர் இக்கோவிலுக்கு தேர், மற்றும் பிரமோற்சவம் செய்ய பல பொருட்களை வழங்கி உள்ளார். பல நந்தவனங்களை அமைத்துள்ளார். இவர் புகழ்பெற்ற சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் அமைத்துள்ளார். இவருக்கு பிறகு பொறுப்பேற்ற திருமலை போடி நாயக்கர், ஜக்கன்ன நாயக்கர், ராஜு நாயக்கர் பொறுப்பேற்றனர். இவர் குலசேகர தம்பிரான் என்ற மன்னனை வென்றுள்ளார்.[1]

கண்கொடுத்த அய்யன்

போடிநாயக்கனூர் மன்னர்கள் ஏனைய ராஜகம்பளம் மக்களை போலவே கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள். மாந்திரிகம் போன்றவற்றிலும் திறமையானவர்கள். இவர்களின் குல தெய்வம் ஜக்கம்மா தேவி. ஒரு நாள் வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு பெண் கண்பார்வை இழந்தததால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனிடம் வேண்டுகிறார். அன்று இரவு அப்பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன் போடிநாயக்கனூர் பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் ராஜு நாயக்கர் என்பவரிடம் சென்று கண்பார்வை வேண்டும் என்று வேண்டினால் உன் பார்வை கிட்டும் என்று சொல்கிறார். அப்பெண்ணும் அம்மன் சொல்வதை செய்ய அவருக்கு கண்பார்வை கிட்டுகிறது. அன்றிலிருந்து கண் கொடுத்த ராஜு நாயக்கர் அய்யன் என்று அழைக்கப்பட்டார். மதுரை நாயக்கர்கள் இவரிடம் மிகுந்த மரியாதை கொண்டு இருந்தனர். இவர் திருமலை நாயக்கருக்கு நெருக்கமான நண்பர்.

காமராஜ பாண்டிய நாயக்கர்

ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட பிறகு முதல் முதலாக சட்டப்பேரவை கூடத்தில் தமிழில் பேசி தனது தமிழ் பற்றினை வெளிப்படுத்தினார். ஆங்கிலம் இவருக்கு தெரிந்திருந்த நிலையிலும் இவர் தமிழில் பேசினார். இவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறிய குற்றங்கள்கூட நடைபெறவில்லை என்று ஆங்கிலேய கலக்டர் ரோஸ் பீட்டர் என்பவர் தனது நூலில் பதிந்துள்ளார். இவர் வேட்டை ஆடுவதில் வல்லவர். திருமலை போடி காமராசு பாண்டிய நாயக்கர் என்னும் வாரிசுதாரர் தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சத்திரம், சாவடிகளை அமைத்துள்ளார். இவர் பாதசாரிகளுக்கு விடுதிகள் அமைத்துள்ளார். இவர் விவசாயத்திற்கு முன்னுரிமை தந்துள்ளார். இவர் வெட்டிய கம்மாய் இன்றும் காமராசு பூபால சமுத்திர கம்மாய் என்று அழைக்கப்படுகிறது. மரம் நடுதல், காடுகளை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.

ஸ்ரீ காமுலு அம்மாள்

ஸ்ரீ காமுலு அம்மாள் கண்டமனூர் ஜமீனில் பிறந்து போடிநாயக்கனூர் பகுதிக்கு மணமகளாக வந்தவர். இவரின் மகளை சாப்டூர் ஜமீன்ந்தாருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர் போடிநாயக்கனூர் மற்றும் சுற்றுப்புற மக்களின் நலனுக்காக மருத்துவமனை அமைத்துள்ளார். இவர் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில், விக்னேஸ்வரர் கோவில் முதலியவற்றை அமைத்துள்ளார்; பல சத்திரங்களை கட்டயுள்ளார். கல்யாண மகால் அமைத்ததோடு விக்டோரியா மெமோரியல் பள்ளிக்கு அடிக்கல் நாட்டி பொருளுதவி செய்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

<references>

  1. 1.0 1.1 1.2 http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false