காசநோய்த் தடுப்பூசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காசநோய்த் தடுப்பூசி அல்லது பி.சி.ஜி தடுப்பூசி என்பது கால்நடைக் காசநோய்க் கிருமியிலிருந்து உண்டாக்கப்பட்ட உயிருள்ள வலிமை குறைக்கப்பட்ட பாக்டீரியங்களைக் கொண்ட தடுப்பூசி ஆகும். வளர்ப்பூடகங்களில் தொடர்ச்சியாய்ப் பல்லாண்டுகள் வளர்த்ததன் மூலம் இக்கிருமி தனது நோய் உண்டாக்கும் தன்மையை இழந்தது. இத் தடுப்பூசி எந்த அளவு காசநோயிலிருந்து காப்பாற்றும் என்பது நாடுகளைப் பொறுத்து வேறுபடுகிறது. ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தால் இதன் தடுப்பு மதிப்பு 80 விழுக்காடு ஆகும்

வரலாறு[தொகு]

சின்னம்மைக்கு கால்நடை சின்னம்மை வைரசைக் கொண்ட தடுப்பூசி பெருமளவு வெற்றி அடைந்ததை அடுத்து காசநோய்க்கும் அதே மாதிரியான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். பாஸ்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட் கால்மெட்டி மற்றும் அவரது உதவியாளர் கேமில்லை குரின் இருவரும் இதில் வெற்றி கண்டனர். எனவே இவர்களின் பெயரிலேயே இத் தடுப்பூசி பேசில்லை கா‌ல்மெட்டி குரின் அல்லது பிசிஜி என்று அறியப்படுகிறது. இத்தடுப்பூசியை உருவாக்க அவர்கள் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் உழைத்தனர். கிளிசரின்-பித்தம்-உருளைக்கிழங்கு வளர்ப்பூடகத்தில் வளர்த்த போது இக்கிருமி மெல்ல மெல்ல தனது நோய் உண்டாக்கும் தன்மையை இழப்பதைக் கண்டனர். ஆனால் நோய்எதிர்ப்புண்டாக்கும் தன்மையைத் தக்க வைத்திருந்தது. இவ்வாறாக 1921 ஆம் ஆண்டில் முதன் முறையாக மனிதரில் காசநோய்த் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவில் பயன்பாடு[தொகு]

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளே ஐரோப்பாவிற்கு வெளியே காசநோய்த் தடுப்பூசியைப் பயன்படுத்திய முதல் நாடுகள் ஆகும். தற்போது இந்தியாவில் பிறந்ததும் அல்லது பிறந்து நான்கு நாட்களுக்குள் பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடப்படுகிறது.

பயனுறுதிறன்[தொகு]

உலகெங்கும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் காசநோய்க்கு எதிரான இத்தடுப்பூசியின் பயனுறுதிறன் வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டில் 1979 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் காசநோய்க்கெதிரான இதன் பயனுறுதிறன் சுழியம் எனத் தெரியவந்தது. இவ்வாறான மாறுபடும் பயனுறுதிறனுக்கு ஜீன்மாறுபாடு, காசநோய் அல்லாத பிற மைக்கோபாக்டீரியத் தொற்று, இதர ஒட்டுண்ணித் தொற்று ஆகியவை காரணமாய் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

போடப்படும் முறை[தொகு]

இடது கையின் டெல்டாய்டு தசைக்கு மேல் உள்ள தோலில் இந்தப் பயன்பாட்டிற்கென்றே உள்ள தனி ஊசியைக் கொண்டு பி.சி.ஜி தடுப்பூசி போடப்படுகிறது. இத்தடுப்பூசியை மறுகட்டாக்கம் செய்ய உவர்நீர் (saline) பயன்படுகிறது. தோலுள் போடுவதற்குப் பதிலாக தோலுக்கடியில் தவறுதலாக இத்தடுப்பூசியை தோலுக்குக் கீழ் செலுத்தினால் அந்த இடத்தில் சீழ்க்கட்டி உருவாகி விடும். தடுப்பூசி போட்ட இடத்தில் நாளடைவில் தழும்பொன்று உருவாகும். ஆறு மாதம் வரை தழும்பு உருவாகாவிடில் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

காசநோய் தவிர இதர பயன்பாடுகள்[தொகு]

  • தொழுநோய்க்கெதராக சிறிய அளவில் இத்தடுப்பூசி தடுக்க வல்லது.
  • சிறுநீர்ப்பை புற்று நோயில் இது சிறுநீர்ப்பைக்குள் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இது அந்த இடத்தில் நோய் எதிர்ப்பு வினையைத் தூண்டி விடுகிறது.
"http://ta.wikipedia.org/w/index.php?title=காசநோய்த்_தடுப்பூசி&oldid=1397298" இருந்து மீள்விக்கப்பட்டது