எகல்
கெயார்க் வில்ஃகெம் பிரீட்ரிக் எகல் (Georg Wilhelm Friedrich Hegel, கியார்க் வில்ஹெம் ஃபிரீடரிக் ஹெகல், [ˈgeɔʁk ˈvɪlhɛlm ˈfʁiːdʁɪç ˈhegəl], ஆகத்து 27, 1770 – நவம்பர் 14, 1831) என்பவர் ஒரு புகழ்மிக்க இடாய்ச்சு நாட்டு (செருமனிய) மெய்யியல் அறிஞர் ஆவார்.
இவருடைய கொள்கைகள் இடாய்ச்சுலாந்து மெய்யியல் கருத்துக்களிலும் மேற்குலகின் மெய்யியியல் கருத்துக்களிலும் பெரும் செல்வாக்குப் பெற்று, இன்றும் மிக்க புகழுடன் விளங்குவன. இவருடைய கருத்துப்படி மாந்தர்களுடைய எண்ணம், கருத்து, பண்பாடு ஆகிய எந்தவொரு தன்மையையும் அறிந்து கொள்ள, கருத்துக்கள் எழுந்த வரலாற்றைத் துல்லியமாய் அறிதல் வேண்டும். இவருடைய செல்வாக்கினால், மேற்குலகில் மெய்யியல், கலை, சமயம் (மதம்), அறிவியல், அரசியல் முதலான பல துறைகளிலும் வரலாற்றுக் கண்ணோட்டம் மிகுந்தது. எகல், கருத்துக்கள் வரன் முறையில் அதிக நாட்டம் காட்டினார். இதன் அடிப்படையில் கருத்துக்கள் (நிகழ்வுகளும்) படிப்படியாய் எழுவதையும் அது “வளர்ச்சி” அடைவதையும், எதிர்-எதிர் கருத்துக்கள் எழுந்து (மோதி) விரிவான வளர்ச்சி அடைவதையும் சுட்டிக்காட்டினார். இவ்வகை விரிவான கருத்து மோதலினால் ஏற்படும் வளர்ச்சியை டயலெக்டிக் (dialectic) என்று மேற்குலகில் குறிக்கின்றனர்.
படைப்புகள் [தொகு]
எகல் தம் வாழ்நாளில் நான்கு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். 1807ல் வெளியிட்ட உள்ளத்தின் நிகழ்வியக்கம் (Phenomenology of Spirit or Phenomenology of Mind) என்னும் நூலில் புலனறிவில் இருந்து எப்படி உள்ளுணர்வும், உள்ளறிவும் எழுகின்றது என்று விளக்குகின்றார். உள்ளுணர்வு நிலைகளில் உள்ள பல்வேறு வடிவங்களை/நிலைகளைப் பற்றி கூறுகின்றார். உலகநிகழ்வுகள் அறவொழுக்கக் கொள்கை நிலைகள் பற்றி விளக்குகிறார். 1811ல் மூன்று தொகுதிகளாக வெளியிட்ட ஏரணத்தின் அறிவியல் (Science of Logic) என்னும் நூலில் ஏரணம், புறவியல்பியல் மீறிய மெய்யியல் முதலிய கொள்கைகளை விரிக்கின்றார். பின்னர் 1811-1812 இலும், பின்னர் 1816லும் (திருந்திய பதிப்பாக 1831லும்) தன்னுடைய முழு மெய்யியல் கருத்துக்களையும் தொகுத்து மெய்யியல்களின் கலைக்களஞ்சியம் (Encyclopedia of the Philosophical Sciences) என்னும் நூலாக வெளியிட்டார். பின்னர் 1822ல் தன்னுடைய அரசியல் குமுகவியல் பற்றிய கருத்துக்களை செவ்வழியின் மெய்யியல் அடிப்படைக் கருத்துக்கள் (Elements of the Philosophy of Right) என்னும் நூலாக வெளியிட்டார்.