அஸ்டோனியா நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்டோனியா நடவடிக்கை
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி

சர்ச்சில் பாலம் கட்டும் ஊர்திகள், ஷெர்மன் டாங்குகள் மற்றும் தரைப்படையினர் (லே ஆவர், செப்டம்பர் 13, 1944)
நாள் 10–12 செப்டம்பர், 1944
இடம் லே ஆவர், பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
கனடா
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கனடா ஹாரி செரார்
ஐக்கிய இராச்சியம் பெர்சி ஹோபார்ட்
ஐக்கிய இராச்சியம் ஈவிலின் பார்க்கர்
ஐக்கிய இராச்சியம் தாமஸ் ரென்னி
நாட்சி ஜெர்மனி எபெர்ஹார்ட் வில்டெர்முத்
பலம்
45,000[1] ~12,000
இழப்புகள்
500க்கும் குறைவு 600 மாண்டவர்கள்
11,300 போர்க்கைதிகள்

அஸ்டோனியா நடவடிக்கை (Operation Astonia) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்தஒரு போர் நடவடிக்கை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் பிரான்சின் லே ஆவர் துறைமுக நகரை நேசநாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றின.

கனடியப் படைகள் ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் அமைந்திருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகங்களை நாசி ஜெர்மனியிடமிருந்து கைப்பற்ற முயன்றன. அவை முதலில் அணுகிய டியப் துறைமுகத்திலிருந்து எதிர்ப்பின்றி ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி விட்டன. இதனை அறிந்த ஹிட்லர் கால்வாய்க் கரையோரமாக இருந்த துறைமுகங்கள் அனைத்தையும் “கோட்டைகள்” என அறிவித்தார். அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டார். எனவே கனடியப் படைகள் அடுத்து அணுகிய லே ஆவர் துறைமுகத்தின் ஜெர்மானியப் பாதுகாவலர்கள் சரணடையாமல் சண்டையிட்டனர். லெ ஆவர் மீதான நேசநாட்டுத் தாக்குதலுக்கு அஸ்டோனியா நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது.

லே ஆவர் ஜெர்மானிய அட்லாண்டிக் சுவர் அரண்நிலையின் மிகப் பலமான கோட்டையாக பிரிட்டானிய ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரியால் கருதப்பட்டது. இயற்கையாகவே அதனைச்சுற்றி அமைந்திருந்த நீர்நிலைகளும், ஜெர்மானியர் உருவாக்கியிருந்த பதுங்கு குழிகள், எதிர்-டாங்கு பள்ளங்கள், கண்ணி வெடி நிறைந்த ஆழமான அகழிகள், கான்கிரீட் அரண்நிலைகள் போன்றவை அதனை வெகுவாக பலப்படுத்தியிருந்தன. செப்டம்பர் 10, 1944 அன்று மாலை 5.45 மணியளவில் பெரும் விமான குண்டு வீச்சுடன் நேசநாட்டுத் தாக்குதல் தொடங்கியது. பிரிட்டானிய வான்படையின் குண்டுவீச்சுடன் கடற்படைக் கப்பல்களும் நகரின் பாதுகாவல் நிலைகளின் மீது பீரங்கி குண்டு வீசின. மூன்று நாட்கள் தொடர்ந்து நீடித்த இந்த குண்டுவீச்சில் 1,900 குண்டுவீசி விமானங்கள் 8,200 டன் எடையுள்ள வெடிகுண்டுகளை நகரின் மீது வீசின.

குண்டுவீச்சு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே பிரிட்டானிய, கனடியப் படைகள் லே ஆவரின் எல்லையினை ஊடுருவி ஜெர்மானியப் பாதுகாவல் நிலைகளைக் கைப்பற்றத் தொடங்கின. இரு நாட்கள் சண்டைக்குப் பின்னர் நகரின் மையப்பகுதி நேசநாட்டுப் படைகள் வசமானது. செப்டம்பர் 12ம் தேதி நண்பகல் 11.45 மணி அளவில் லே ஆவரின் ஜெர்மானியத் தளபதி அதிகாரப்பூர்வமாகச் சரணடைந்தார். 12,000 ஜெர்மானிய வீரர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர். இரு தரப்பிலும் சண்டையில் இழப்புகள் குறைவாக இருந்தாலும் குண்டுவீச்சில் நகருக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இச்சேதத்தினால் லே ஆவர் துறைமுகத்தைச் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு நேச நாடுகளால் அவ்வளவாகப் பயன்படுத்த முடியவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Normandy - The Fortress of Le Havre (76)". பார்க்கப்பட்ட நாள் 2008-12-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்டோனியா_நடவடிக்கை&oldid=3503887" இலிருந்து மீள்விக்கப்பட்டது