உள்ளடக்கத்துக்குச் செல்

வீரமாமுனிவரின் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரமாமுனிவரின் பெயர்கள் என்னும் இக்கட்டுரை தமிழுக்கு அரும்பணி செய்து, "வீரமாமுனிவர்" என்னும் சிறப்புப் பெயர் பெற்ற கொஸ்தான்சோ ஜுசேப்பே பெஸ்கி (நவம்பர் 8, 1680 - பெப்ருவரி 4, 1747) எனும் இத்தாலிய அறிஞர் தமிழகத்தில் எவ்வாறெல்லாம் அறியப்பட்டார் என்பதை விளக்குகிறது.

திருமுழுக்குப் பெயர்

[தொகு]

வீரமாமுனிவரின் பெற்றோர் அக்கால வழக்கத்துக்கு ஏற்ப தம் மகனுக்குச் சிறுவயதிலேயே திருமுழுக்குக் கொடுத்தனர். திருமுழுக்கின்போது இடப்பட்ட பெயர் "கொஸ்தான்சோ ஜுசேப்பே எவுசேபியோ பெஸ்கி" (Costanzo Giuseppe Eusebio Beschi) என்பதாகும். இதில் "Beschi" என்பது குடும்பப் பெயர். இத்தாலிய மொழியில் இச்சொல் "பெஸ்கி" என்று ஒலிக்கும். "எவுசேபியோ" என்னும் பெயர் வீரமாமுனிவருக்கு இருந்தாலும் அது அவர்தம் வாழ்நாளில் வழங்கியதாகத் தெரியவில்லை. அதை முனிவரும் பயன்படுத்தவில்லை. "Costanzo Giuseppe" என்னும் இத்தாலியப் பெயர் ஆங்கிலத்தில் "Constant Joseph" என்றும் தமிழில் "வீர வளன்" என்றும் வரும். அக்காலத்தில் தமிழ் நாட்டில் கிறித்தவ மறையைப் பரப்பவந்த மேனாட்டவர் பலர் தம் பெயரைத் தமிழ் மொழி ஒலிப்புக்கும் பொருளுக்கும் ஏற்ப மாற்றியது உண்டு. முனிவரும் 1711இல் தமிழகம் வந்த போது தம் பெயரில் உள்ள "Costanzo" ("Constant") என்னும் பகுதியைத் "தைரியநாதர்" என்று மொழிபெயர்த்து வழங்கிவந்தார். அவர் தொடக்கத்தில் எழுதிய நூல்களில் இப்பெயரையே பயன்படுத்தியுள்ளார்[1]

வீரமாமுனிவர்

[தொகு]

பெஸ்கி "வீரமாமுனிவர்" என்னும் பெயரை எவ்வாறு பெற்றார் என்பது குறித்து உறுதியாகக் கூறச் சான்றுகள் இல்லை என்று அறிஞர் ச. இராசமாணிக்கம் கூறுகிறார். "தேம்பாவணி" என்னும் தலைசிறந்த காவியத்தை அவர் இயற்றியதால் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் அவருக்கு இப்பட்டத்தை அளித்தனர் என்றொரு மரபுச் செய்தி உண்டு. கடைச் சங்க காலத்துக்குப் பிறகு, அதுவும் முனிவர் வாழ்ந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. தற்போதுள்ள தமிழ்ச் சங்கம் பாண்டித்துரைத் தேவர் தலைமையில் பல புலவர்களின் ஒத்துழைப்போடு மதுரையில் 1901இல்தான் தொடங்கியது [2].

வீரமாமுனிவரின் வரலாற்றை 1822இல் எழுதிய முத்துச்சாமிப் பிள்ளை இக்குறிப்பைத் தருகிறார்:

இவ்வாறு வழங்கப்பட்ட "வீரமாமுனிவர்" என்னும் சிறப்புப் பெயரில் "வீரம்", "முனிவர்" என்ற இரண்டும் இயற்பெயர். "மா" என்ற ஒரு சொல்லே புதியது. தமிழ் மொழிக்கு இலக்கியம், இலக்கணம், உரைநடை, அகராதி போன்ற பல துறைகளில் பணியாற்றிய பெருமானின் பெருமையைச் சுட்டும் "மா" என்ற அடைமொழி முற்றிலும் பொருத்தம் எனலாம்.

வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதிப்படி "மா" என்பது செல்வம் என்றும் பொருள்படும். முனிவரது இயற்பெயர்களுள் ஒன்றாகிய "யோசேப்பு" (Giuseppe = Joseph) என்பதை "வளன்" என்று முனிவரே தமிழ்ப் படுத்துவதாலும், "வளம்" (வளன்) என்பதற்கு சதுரகராதி அழகு, வலி, மாட்சிமை என்று பொருள் கூறுவதாலும் "வீரமாமுனிவர்" என்னும் பெயரில் வரும் "மா" என்பது மாட்சிமையைக் காட்டி, வளம் என்பதையும் சுட்டி, முனிவரது இயற்பெயராகிய "யோசேப்பை" குறிக்கலாம். மூல மொழியாகிய எபிரேயத்தில் இப்பெயர் "யிஹோ ல்ஹோசிஃப்" (יהוה להוסיף = Yihoh Lhosif) என்னும் இரு சொற்களாலானது. அதற்கு "கடவுள் வளமுறச் செய்க" என்பது பொருள் [3]. இக்காரணம் முன்னிட்டு அவர் "வீரமாமுனிவர்" என்னும் பெயரை ஏற்க "அனுமதி" தந்திருக்கலாம். ஆக, ஒரு பக்கம் இயற்பெயராகவும் மறுபக்கம் காரணப் பெயராகவும் அமைந்த இப்பெயரே, முனிவருக்கு உரிய பெயராக அவர்காலம் தொட்டு இன்றுவரை வழங்கிவருகிறது.

முனிவர் என்னும் சிறப்புப் பெயர்

[தொகு]

"சிவஞான முனிவர்" என்னும் பெயர் தமிழில் ஏற்கெனவே சிவ அடியார் ஒருவருக்கு இருந்தது. அதன் பிறகு தமிழில் புலமை பெற்ற ஓர் இறையடியாருக்கு முனிவர் என்னும் சிறப்புப் பெயர் வீரமாமுனிவருக்கே அமைந்தது என்று தெரிகிறது. இப்பெயர் வீரமாமுனிவர் வாழ்ந்த காலத்திலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டதைத் தேம்பாவணிப் பாயிரப் பதிகமும் புறவுரையும் சுட்டிக்காட்டுகின்றன.

என்கிறது தேம்பாவணிப் பதிகம்.

என்பது தேம்பாவணிப் புறவுரை.

முத்துச்சாமிப் பிள்ளை தரும் தகவல்படி, முனிவர் தேம்பாவணியை 1726இல் இயற்றினார். தேம்பாவணி உரை 1729ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் முடிந்ததாக உரை முடிவிலே குறிப்பிடப்படுகிறது. எனவே, 1726க்குப் பின்னரும் 1729க்கு முன்னரும் வீரமாமுனிவர் என்ற பெயர் முனிவருக்கு வந்துவிட்டது என முடிவுசெய்யலாம்.

தெருட்குரு

[தொகு]

முனிவருக்குத் "தெருட்குரு" என்றொரு சிறப்புப் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. "தெருள்" என்னும் சொல்லுக்கு "சீரிய அறிவு" என்று பொருள். வீரமாமுனிவர் சதுரகராதியை 1732இல் எழுதினார் என்று அந்நூலின் இலத்தீன் முகவுரையிலிருந்து அறியமுடிகிறது. அதன் முகவுரையில் "தொன்னூல் விளக்கம்" என்ற ஐந்திலக்கண நூலை அதே ஆசிரியர் எழுதியதாகக் குறிப்பு வருகிறது.

என்று பாயிரம் கூறுவதால் தொன்னூல் விளக்கம் சதுரகராதிக்கு முந்தியது என்பது உறுதி. இத்தொன்னூல் விளக்க இறுதியில் வரும் குறிப்பு இதோ:

இப்பட்டம் சூட்டிய "கலைவல்லோர்" யார் என்று தெரியவில்லை. பட்டம் அளித்தவர் யாராயினும், இப்பட்டத்தை நூலின் பெயரால் நூலாசிரியராகிய வீரமாமுனிவருக்கு வழங்கினர் என்பது தெளிவு. "குரு" என்ற சொல் தமிழ் மரபுப்படி நூலை ஓதுவோரைக் குறிக்குமே ஒழிய, நூலைக் குறிப்பதில்லை.

மேலும், இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் முனிவர் பாடிய திருக்காவலூர்க் கலம்பகத்தில் வரும் மாணாக்கன் பாடலும் அமைந்திருக்கிறது.

என்ற அடி வீரமாமுனிவரைத் "தெருட்குரு" என்ற பொருள்படப் பாடுகிறது.

வீர ஆரிய வேதியன்

[தொகு]

சதுரகராதியை இயற்றியதாக, நூலின் இறுதியில் காணும் வரிகள் இவை:

சதுரகராதியை இயற்றியவர் வீரமாமுனிவர். ஆகவே அவரைத் "தமிழ் அகராதித் தந்தை" என்று அழைக்கின்றனர். "ஆரியன்" என்பதற்கு அறிவுடையவன், குரு, புலவன்... என்று சதுரகராதி பொருள் கூறுகிறது. "வீர" என்பது Costanzo (Constant) என்னும் இயற்பெயரின் மொழிபெயர்ப்பு. "வேதியன்" என்பது முனிவர், குரு என்பன போல மறைநூல் ஆசிரியனைச் சுட்டும். "ஆரியன்" என்றால் புலவன். ஆகவே, "வீராரிய வேதியன்" என்பதற்கு "சமய (மறை) தொழில் புரியும் வீரன் என்ற புலவன்" எனப் பொருள் கூறலாம்.

ஆகவே, "வீராரிய வேதியன்" என்ற பெயர் வீரமாமுனிவர் என்பதை வேறுவடிவத்தில் சுட்டுகிறது எனலாம். அன்றியும் சதுரகராதியின் ஒரு பகுதியாகிய தொடையகராதியில் "ஆரியம்" என்பதற்கு அழகு என்று முனிவர் பொருள் கூறுவதோடு, பெயரகராதியில் "வளம்" என்பதற்கு அழகு என்றும் பொருள் காண்பதாலும், வீரம் (Costanzo = Constant) என்பதையும் ஆரியம் (Giuseppe = Joseph) என்ற வளனையும் கூட்டி அவர்தம் இயற்பெயரைச் சுட்டுவதாகத் தெரிகிறது என்று அறிஞர் ச. இராசமாணிக்கம் கூறுகிறார்.

திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர்

[தொகு]

வீரமாமுனிவருக்குத் "திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர்" என்றொரு சிறப்புப் பெயர் சூட்டப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்குத் தக்க சான்று இருப்பதாகத் தெரியவில்லை என்பது ச. இராசமாணிக்கம் கருத்து. புதுச்சேரியில் அச்சான தொன்னூல் விளக்கத்தின் முன்பக்கத்தில் காணப்படும் தலைப்பு இது:

இங்கே வருகின்ற "செந்தமிழ்த் தேசிகர்" என்பது பட்டமாகப் பயன்படாது, வீரமாமுனிவர்மீது பதிப்பாசிரியர் கொண்ட மதிப்பைச் சுட்டுவதாகத் தெரிகிறது.

இஸ்மத் சந்நியாசி

[தொகு]

வீரமாமுனிவர் அக்காலத்தில் திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிபைச் சந்தித்ததாகவும் அவர்மீது மதிப்பும் அன்பும் காட்டித் "தூய முனிவர்" என்று பொருள்படும் "இஸ்மத் சந்நியாசி" என்ற பட்டத்தை சந்தா சாகிபு வீரமாமுனிவருக்குக் கொடுத்ததாகவும் முத்துச்சாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வரலாற்றில் கூறுகிறார்.

மலர்களின் தந்தை

[தொகு]

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் தேர்ந்த வீரமாமுனிவர் பூக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்றும் பூந்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் தெரிகிறது. நல்ல பூந்தோட்டம் போட மேல்நாட்டிலிருந்து பூவித்துக்களை வரவழைத்த போது, அவை நீண்ட பிரயாணத்தால் வீரியத்தை இழந்துவிட்டன என்று வீரமாமுனிவரின் நண்பர் லூயி நோயேல் தெ பூர்சே (Louis Noel de Bourzes) என்னும் மறைப்பணியாளர் கூறுகிறார். அவரே வீரமாமுனிவரை "மலர்களின் தந்தை" என்று வேடிக்கையாக அழைக்கிறார்.

தமிழ் மொழியின் தாந்தே

[தொகு]

1680இல் பிறந்த வீரமாமுனிவருக்கு மூன்றாம் நூற்றாண்டுப் பிறப்புவிழா 1980இல் அவர் பிறந்த ஊராகிய காஸ்திலியோனே தெல்லே ஸ்டிவியரே என்னும் இடத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது முனிவருக்குச் சிலை நிறுவி, நினைவுப் பதக்கமும் மலரும் வெளியிடப்பட்டன. அவ்விழாவின்போது தம் மண்ணின் மைந்தர் வீரமாமுனிவருக்குத் "தமிழ் மொழியின் தாந்தே" (Il Dante della lingua Tamil) என்னும் பட்டம் அளித்து மக்கள் சிறப்பித்தார்கள். ஆகவே தமிழ்நாட்டில் வீரமாமுனிவர் என்று அழைக்கப் பெறுவது போல், முனிவர் பிறந்த ஊரில் "தமிழ் மொழியின் தாந்தே" என்று அழைக்கப்படுகிறார்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று தமிழர் பெருமைப்படுவதுபோல, இத்தாலி நாட்டில் Divina Commedia (தெய்வீக இன்பிலக்கியம்) என்னும் தலைசிறந்த நெடும்பாடலை யாத்த புலவராகிய தாந்தே அலிகியேரி (Dante Alighieri) போன்று தேம்பாவணி என்னும் தீஞ்சுவைக் காவியத்தையும் பரமார்த்த குருவின் கதை போன்ற நகைச்சுவை இலக்கியத்தையும் ஆக்கிய வீரமாமுனிவரைத் தமிழுக்குத் தாம் அளித்தமை பற்றி அவ்வூரார் பெருமைப்படுகின்றனர்.

மேலும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. ச. இராசமாணிக்கம், சே.ச., வீரமாமுனிவர் தொண்டும் புலமையும், தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக் கல்லூரி, சென்னை, முதல் பதிப்பு 1996; இரண்டாம் பதிப்பு 1998, பக். 41-48.
  2. "மதுரைத் தமிழ்ச் சங்கம்". Archived from the original on 2011-12-26. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
  3. யோசேப்பு - பொருள்